Politics
“அரசு முறையாகச் செயல்பட்டால் ஏன் நீதிமன்றத்திற்கு செல்லப் போகிறார்கள்?” - திருநாவுக்கரசர் எம்.பி கேள்வி!
உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீட்டை அ.தி.மு.க அரசு முறையாகச் செயல்படுத்தி இருந்தால் ஏன் நீதிமன்றம் செல்லப் போகிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் திருநாவுக்கரசர் எம்.பி.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“இலங்கையில் நடந்த தமிழர்கள் படுகொலைக்கு கோத்தபய ராஜபக்சே, அவரது சகோதரர் ராஜபக்சே ஆகியோர் காரணமாக இருந்தவர்கள். இதனால் இலங்கையில் உள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது நாடறிந்த உண்மை. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இழந்த இடங்கள், வீடுகள், உரிமைகள், வேலைவாய்ப்புகளை பெறக்கூடிய வகையில் மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்.
இலங்கையில் சீனா பொருளாதார, இராணுவ ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. இலங்கையில் தொழிற்சாலைகள், கட்டிடங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றை கட்ட சீனா உதவி செய்வதாக கூறப்படுகிறது. இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு உஷாராக இருக்க வேண்டும்.
இரு தலைவர்கள் சந்திப்பதை எதிர்த்து சில கட்சிகள் போராட்டம் நடத்துவது அவர்களது உரிமை. இரு தலைவர்கள் சந்திப்பு இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் நாட்டின் பாதுகாப்பிற்கும் வழிவகையாக அமைந்தால் சரிதான்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிமன்றம் வற்புறுத்துகிறது. மக்கள் தேர்தல் நடக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் மக்களுக்கான பல பணிகள் நடக்காமல் உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கவேண்டிய நிதி கிடைக்கவில்லை.
உண்மையில் தேர்தல் நடத்த தமிழக அரசு பெண்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு முறையாக இடஒதுக்கீடு செய்யாவிட்டால் நீதிமன்றத்திற்கு போகத்தான் செய்வார்கள். தி.மு.க உள்ளாட்சித் தேர்தலை தடுப்பதாக அ.தி.மு.க சொல்கிறது. நீதிமன்றத்திற்கு செல்லும் வகையில் அரசு செயல்பட்டால் நீதிமன்றம் செல்லாமல் என்ன செய்ய முடியும். இதற்கு வாய்ப்பு இல்லாமல் முறைப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
மோடியின் சுற்றுப்பயணம் தான் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வேலைவாய்ப்பு சற்றும் அதிகரிக்கவில்லை. தொழில் வளர்ச்சி கிடையாது. கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி வெளிநாட்டிற்குச் சென்றதால் ரூ. 260 கோடி செலவாகி உள்ளது.
மோடி பயணத்தினால் தமிழகத்திற்கு எந்த தொழில் நிறுவனம் வந்தது? தமிழகம் போல் தான் எல்லா மாநிலங்களும் உள்ளன. சுற்றுப்பயணம் தான் போய் கொண்டு இருக்கிறார். ஆனால் பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு எதுவும் கிடையாது. பணமதிப்பிழப்பு கொண்டு வந்தபோதே நாட்டின் பொருளாதாரம் உள்பட எல்லாமே குறைந்து கொண்டே இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!
-
150 ஆவது பொய் - முதுகெலும்பு இல்லாத பழனிசாமியால் இது முடியுமா? : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி... விண்ணப்பிப்பது எப்படி?
-
3 நாட்களுக்கு AI & Digital Marketing பயிற்சி... தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் விவரம் உள்ளே!