Politics

மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும், மாநிலங்களில் சரிவைச் சந்தித்து வரும் பா.ஜ.க - உணர்த்துவது என்ன?

கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் வென்று இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்தது. அசுர பலத்துடன் ஆட்சி அமைத்த பா.ஜ.க அரசு, மக்களின் விருப்பங்களுக்கு மதிப்பளிக்காமல் தனது கட்சியின் கொள்கைகளை செயல்படுத்தி வந்தது.

இந்நிலையில், பா.ஜ.க.வின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுள்ளது. 2018க்கு பிறகு பா.ஜ.க ஆண்டுகொண்டிருந்த பல மாநிலங்களில் இருந்து தூக்கியெறியப்பட்டுள்ளது. காஷ்மீரில் மெகபூபா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க திரும்பப்பெற்றது. தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியை பறிகொடுத்தது.

அதேபோல ஆந்திராவில் தெலுங்கு தேசத்துடனான கூட்டணியை பா.ஜ.க முறித்துக்கொண்டதால் ஆந்திராவிலும் தாமரை மலரவில்லை. தற்போது மராட்டியத்தில், பா.ஜ.க தனது ஆட்சியை பறிகொடுத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் காவி பூசுவோம் என பா.ஜ.க.வினர் சொல்லி வந்த நிலையில், தற்போது இந்திய வரைபடத்தில் இருந்து காவி வண்ணம் நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிறது.

அசுர பலத்தில் ஆட்சியில் இருப்பதால் அரசியலமைப்பையே கேலிக்குள்ளாக்கி வரும் பா.ஜ.க.வுக்கு மஹாராஷ்டிராவில் தற்போது பெருத்த அடி விழுந்திருக்கிறது. மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்தாலும், மாநிலங்களில் பா.ஜ.க தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

2017 நிலவரப்படி, இந்தியாவின் மொத்த பரப்பில் 71 சதவிகித பரப்பளவிலான மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தது. ஆனால், நாடு முழுக்க தற்போது பா.ஜ.க ஆளக்கூடிய நிலப்பரப்பு என்பது 40 சதவீதமாக குறைந்துள்ளது.

இதன்மூலம், பா.ஜ.க அரசு மக்களின் ஆதரவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவது கண்கூடாகிறது. பெரும்பான்மையைப் பயன்படுத்தி, தங்கள் கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ளும் முனைப்புடன் பணியாற்றி வரும் பா.ஜ.க அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதையே இந்தத் தகவல் காட்டுகிறது.