முத்தரசன்
Politics

''டாக்டர் ராமதாஸ் எந்த பொய்யையும் துணிச்சலாக சொல்லக்கூடியவர்'' - முத்தரசன் பேட்டி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''டாக்டர் ராமதாஸ் எந்த பொய்யையும் துணிச்சலாக சொல்லக்கூடியவர். வன்னியர்களை துப்பாக்கியால் சுட்டுத்தள்ள சொன்னார் முத்தரசன் என்று அவர் கூறியதை அடுத்து நிரூபித்தால் அரசியலை விட்டு விலகிக் கொள்கிறேன் என்று நான் தெரிவித்தேன்.

ஆனால், இதுவரை அது குறித்து பதில் அளிக்காத ராமதாஸ் கட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக அவதூறு பரப்புவதையே வேலையாக வைத்துள்ளார்.

முரசொலி பத்திரிக்கையின் இடம் குறித்து உண்மையை நிரூபித்தால் அப்பாவும், மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா ? என்று தி.மு.க தலைவர் கேட்ட கேள்விக்கு இதுவரை பதிலளிக்காமல் இருக்கும் டாக்டர் ராமதாஸ், இல்லாத ஒன்றை விமர்சனம் செய்வதை கைவிட வேண்டும்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரு ஆண்டுக்கு மேல் மிசா சித்திரவதையை அனுபவித்ததை நாடு அறியும், கட்சி மாறிக்கொண்டே இருக்கும் அமைச்சர் பாண்டியராஜன் பிற அரசியல் கட்சிகளின் கொள்கைகளை கொச்சைப்படுத்துவது திருத்திக்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றயடுத்து தி.மு.க.வை பலவீனப் படுத்திவிட்டால் கூட்டணியை களைத்து விடலாம் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு இதுபோன்ற பிரச்சனைகளை கையில் எடுக்கப்படுகிறது.இந்த முயற்சிகள் படுதோல்வி அடையும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாக கூறி முதலமைச்சர் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார். தமிழகத்தில் கூலிப்படை அட்டகாசம், கொள்ளையர்களின் அச்சமில்லாத நடவடிக்கை போன்றவைகளால் சட்டம் ஒழுங்கு என்பது முழுமையாக சீர் கெட்டுள்ளது.

திருவள்ளுவர் பிரச்சனையில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுவது வெளிப்படையாக தெரிகிறது'' எனத் தெரிவித்தார்.