Politics

“டாஸ்மாக் நடத்துவதில் தான் முனைப்பு காட்டுகிறது தமிழக அரசு” - நல்லகண்ணு பேட்டி!

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக திருநெல்வேலி வந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மத்திய பா.ஜ.க அரசு பதவி ஏற்ற 100 நாளில் பொதுத்துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே துறை, தமிழகத்தில் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் ஆவடி டேங்க் பேக்டரி ஆகியவற்றை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அ.தி.மு.க அரசு தட்டிக் கேட்காமல் மௌனமாக இருந்து மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல்களை நடத்தாமல் அ.தி.மு.க அரசின் துணையோடு அதிகாரிகள் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் துணையோடு அரசு பள்ளிகளை தனியார் மயமாக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.

மணல் கொள்ளையிலும், சாராயக்கடை (டாஸ்மாக்) நடத்துவதிலும் தான் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. விவசாயிகளுக்கு நன்மை செய்யும் வகையில் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்த வில்லை. குடிமராமத்து பணிகள் என்ற பெயரில் குளங்களில் உள்ள மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்து வரும் அ.தி.மு.க அரசு இனியும் நீடிக்கக் கூடாது. ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற வேண்டும். இதனை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

தண்ணீர் என்பது சர்வதேச உரிமை, இயற்கையாக பாயும் நதிகளை அணைகள் மூலம் தடுத்து தண்ணீர் கொடுக்க முடியாது என்பது சரியான முடிவு இல்லை. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் கொள்கை அதற்காக தொடர்ந்து போராடி வருகிறோம்'' எனத் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் வரும் ஜனவரி மாதம் 8ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் முழு அடைப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.