Politics

“கராத்தே தியாகராஜன் விளம்பரத்திற்காக எதையாவது பேசுவார்” - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க அமைச்சர்கள் முகாமிட்டு கிராமங்களை தத்தெடுத்து பணப்பட்டுவாடா நடைபெற்று வருகிறது. அதனை மறைப்பதற்காக முதலமைச்சர் தி.மு.க பணம் கொடுப்பதாக உண்மைக்கு மாறான செய்தியை சொல்கிறார்.

தேர்தல் ஆணையம் விரைந்து செயல்பட வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்னர் நாங்குநேரியில் இரவு நேரத்தில் அ.தி.மு.க அலுவலகம் அருகே நூற்றுக்கணக்கான கார்கள் நின்றன. தேர்தல் ஆணையம் இந்த வண்டிகளுக்கெல்லாம் அனுமதி உள்ளதா எனக் கேட்டதாகத் தெரியவில்லை. ஆகவே தேர்தல் முறையாக நடைபெற ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணம் மட்டுமே வெற்றியைத் தேடித்தராது. பா.ஜ.க, அ.தி.மு.க அரசுகள் தேர்தல் வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. எனவே கோபத்தில் உள்ள மக்கள் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை நிச்சயம் வெற்றி பெறச் செய்வார்கள் என நம்புகிறோம்.

தி.மு.க-வுக்கு எதிராக கருத்து கூறிவரும் கராத்தே தியாகராஜன் விளம்பரத்திற்காக அதுபோன்று பேசி வருகிறார். அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார்? தகுதியான ஆளாக இருந்தால் பதில் சொல்லலாம். அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

சீன அதிபர் இந்தியாவுக்கு தமிழ்நாட்டிற்கு வருவது நல்லது தான். அவர் வருவதன் மூலம் இந்தியாவுக்கோ அல்லது தமிழகத்திற்கோ ஏதேனும் நல்ல ஒப்பந்தங்கள் கையெழுத்தானால் நல்லது தான். அவர் வருவதால் தமிழகத்திற்கு என்ன நன்மை என்பது அவர் வந்து போன பிறகுதான் தெரியும். தமிழகத்திற்கு நன்மை நடந்தால் நல்லதுதான்'' எனத் தெரிவித்தார்.