File image
Politics

“மத்திய அரசு சொல்வதைக் கேட்டு சிறுபிள்ளைத்தனமாகப் பேசும் அமைச்சர்கள்” - ராஜகண்ணப்பன் குற்றச்சாட்டு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2,450 கோடி ரூபாய்க்கு பன்னாட்டு முதலீடுகள் வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 1,200 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு மட்டுமே இந்த முதலீட்டைப் பயன்படுத்த முடியும். ஏற்கனவே ஐந்து லட்சம் கோடிக்கு அதிகமாக முதலீடு வரும் என தெரிவித்தது என்னாயிற்று” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “அமைச்சர்கள் சுற்றுலா செல்வதற்காகத்தான் இந்த பயணமே தவிர தமிழ்நாட்டு மக்களுக்கு இதனால் எந்தப் பயனும் இல்லை. இதுதொடர்பாக எதிர்க்கட்சியினர் வெள்ளை அறிக்கை கேட்டால் “வெள்ளரிக்காய் கூட தர முடியாது” என சிறுபிள்ளைத்தனமாக அமைச்சர்கள் பதில் பேசி வருகிறார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாதது இந்த அரசாங்கம். மத்திய அரசு கூறுவதைச் செய்வதுதான் இந்த அரசின் வேலை” என்று கடுமையாகச் சாடினார்.

தொடர்ந்து, இந்தித் திணிப்பு தொடர்பாக இதுவரை இந்த அரசு என்ன பதில் தெரிவித்துள்ளது. இருமொழி கொள்கையைப் பற்றி இந்த அரசு என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்று கேள்வி எழுப்பிய ராஜகண்ணப்பன், “இந்தித் திணிப்பை முதலில் எதிர்த்தது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான். இன்றைக்கு இருக்கிற ஒட்டுமொத்த திராவிட இயக்கத்திற்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருவரே” என்றும் தெரிவித்தார்.