Politics

“மொழியைத் திணித்து நாடு தழுவிய போராட்டத்துக்கு வித்திடுகிறார் அமித்ஷா” : முத்தரசன் சாடல்!

மோடி அரசின் பொருளாதார தோல்வியை மூடி மறைப்பதற்காகவே மொழிப் பிரச்னையை அமித்ஷா கிளப்பியுள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் சாடியுள்ளார்.

புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்ற முத்தரசன், அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.

மேலும், “ஒரே நாடு ஒரே மொழி என்பதன் மூலம் நாட்டை பிளவுபடுத்தும் நாசகரமான வேலையில் அமித்ஷா ஈடுபடுகிறார் என முத்தரசன் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை திணிக்க முயல்கிறது பா.ஜ.க அரசு.

இன்னொரு மொழி மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க முடியாது என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும். இது நிச்சயமாக அரசியல் கட்சிகளின் போராட்டமாக இருக்காது” என்றும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.