Politics

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தை திஹார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பியுமான ப.சிதம்பரத்தை சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் கடந்த மாதம் 21ம் தேதி டெல்லியில் கைது செய்தன.

ப.சிதம்பரம் மீதான சி.பி.ஐ காவல் இன்றுடன் முடிவடைந்ததால் ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ப. சிதம்பரத்திடம் விசாரணை முடிந்துவிட்டதால் நீதிமன்றக் காவலில் சிறைக்கு அனுப்ப சி.பி.ஐ கோரிக்கை வைத்தது.

பல நாடுகளுக்கு ஆவணங்கள் கோரி கடிதம் எழுதியுள்ளோம். பல வெளிநாட்டு வங்கிகள் ஒத்துழைக்க மறுக்கின்றன. ப.சிதம்பரம் ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்பதால் அவரை விடுவிக்கக்கூடாது என சி.பி.ஐ வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

சி.பி.ஐ வாதத்துக்கு ப.சிதம்பரம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் விசாரணை காவலுக்கு செல்லத் தயார் என கபில் சிபல் தெரிவித்தார்.

மேலும், “சிறைக்கு அனுப்பவேண்டும் எனும் சி.பி.ஐ-யின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லாதபோது ஏன் அவரைச் சிறைக்கு அனுப்பவேண்டும் என கபில் சிபல் கேள்வியெழுப்பினார்.

சி.பி.ஐ-யின் கோரிக்கையை ஏற்று ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்க சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவருக்குத் தேவையான மருந்துகள் சிறையில் கிடைக்க வழி செய்யப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

அப்போது கபில் சிபல் ''ப.சிதம்பரம் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ஆதலால், அவருக்கு உரிய பாதுகாப்பு வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார். இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் " சிறையில் ப.சிதம்பரத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்" என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து ப.சிதம்பரத்தை மருந்து, பாதுகாப்பு மற்றும் பாத்ரூம் வசதியுடன் கூடிய தனிச்சிறையில் அடைக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.