Politics
வேலூர் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்கிய தி.மு.க : கதிர் ஆனந்த் வெற்றி!
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. ஆளுங்கட்சியினரின் முறைகேடுகள் காரணமாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடைபெற்ற தமிழகத்தின் 38 தொகுதிகளில், தேனி தொகுதியைத் தவிர மற்ற 37 தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.
தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் கதிர் ஆனந்த், அ.தி.மு.க கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பலர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வேலூர் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில், தி.மு.க வேட்பாளர் முன்னிலை பெற்றிருந்தார். பிறகு, பல சுற்றுகளாக அ.தி.மு.க மற்றும் தி.மு.க வேட்பாளர்களுக்கிடையே இழுபறி நிலவியது.
மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்த தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த், எட்டாவது சுற்றின் முடிவில் முன்னிலை பெறத் தொடங்கினார். பின்னர், ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுகள் வெளிவரும்போதும், தனது முன்னிலையைத் தக்கவைத்துக்கொண்ட கதிர் ஆனந்த், வெற்றியை உறுதி செய்தார்.
தி.மு.க-வின் வெற்றி உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தி.மு.க-வின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
21 சுற்றுகளைக் கொண்ட வேலூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் இறுதிகட்ட வாக்கு எண்ணிக்கை விவரம் சற்று நேரத்தில் வெளியாகக்கூடும். தற்போது, எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட அதிகமான வாக்கு வித்தியாசத்தைப் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார் கதிர் ஆனந்த்.
வேலூர் மக்களவைத் தொகுதி சிறுபான்மையினரை அதிகளவில் கொண்ட தொகுதி. பா.ஜ.க அரசின் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள், காஷ்மீர் விவகாரம் ஆகியவை அக்கட்சியின் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டது.
அதன்படியே, சிறுபான்மையின மக்களின் வாக்குகளை அதிகளவில் பெற்று, வேலூர் கோட்டையை தங்களது வெற்றிக் கோட்டையாக்கியுள்ளது தி.மு.க.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!