Politics

அ.தி.மு.க மாவட்டச் செயலாளரிடம் மாட்டிக்கொண்ட தலைமையின் ‘ரகசியம்’ : பதவிக்குப் பின்னணி இதுவா?

இரட்டைத் தலைமை கொண்ட அ.தி.மு.க-வுக்குள் ஆங்காங்கே பூசல்கள் தலைதூக்கியுள்ளன. எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்புகளுக்கிடையேயான பஞ்சாயத்துகள் ஒருபுறமிருக்க, தலைமைக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் மூத்த தலைகள் கட்டம்கட்டப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, அ.தி.மு.க-வுக்கள் இன்னொரு பூதம் கிளம்பியுள்ளது. தென் சென்னை மாவட்ட அ.தி.மு.க-வில் பல சீனியர் நிர்வாகிகள் இருக்க, கிடுகிடுவென வளர்ந்து மாவட்டச் செயலாளரானார் தி.நகர் சத்யா. அப்போதே கட்சி நிர்வாகிகளிடையே ஏகப்பட்ட புகைச்சல்கள் கிளம்பின.

இந்நிலையில், சமீபத்தில் தென் சென்னை மாவட்டத்தினுள் அடங்கும் தி.நகர், அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 400 அ.தி.மு.க நிர்வாகிகள் ஒரே நாளில் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

பதவி இழந்தவர்கள் மா.செ. சத்யா வீட்டு முன்பு கோஷம் எழுப்பி வந்தனர். இந்த விவகாரம் பெரிதாகி நேற்று, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தின் முன்பு கூடிய அவர்கள் சத்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதோடு, இரண்டு ஒருங்கிணைப்பாளர்களையும் வசைபாடத் தொடங்கினர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திடீரென சத்யா எப்படி பெரிய பொறுப்புகளைப் பெற்றார்? கட்சி நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் அளவுக்கு எப்படி அதிகாரம் பெற்றார்? எனக் கேள்வி எழுப்பியுள்ள கட்சி நிர்வாகிகள் கட்சித் தலைமை தொடர்பான ரகசியம் ஏதோ சத்யாவிடம் சிக்கியிருப்பதால் தான் கட்சித் தலைமை அவருக்குப் பணிந்து போகிறது; பதவிகள் வழங்கி அழகு பார்க்கிறது எனவும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர்.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சத்யாவுக்கு பதவி வழங்கியதற்கும், கட்சி நடவடிக்கைகளை கண்டுகொள்ளாததற்கும் பின்னணியில், அவரிடம் மாட்டிக்கொண்ட ஏதோ ரகசியம் இருக்கலாம் என்கிற ரீதியிலான பேச்சுகள் அ.தி.மு.க வட்டாரம் தாண்டி அரசியல் அரங்கிலும் அடிபடத் தொடங்கியிருக்கின்றன. எப்படியும், உண்மை வெளிவந்துதானே ஆகும்..!