Politics

முத்தலாக் மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேற்றம் : கடைசி நேரத்தில் ‘வேலை’யைக் காட்டிய அ.தி.மு.க!

முத்தலாக் மசோதா சமீபத்தில் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.

காங்கிரஸ், தி.மு.க, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையில் அ.தி.மு.க எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் முத்தலாக் தடை மசோதாவை ஆதரித்துப் பேசிய நிலையில், இன்று மாநிலங்களவையில் அ.தி.மு.க எம்.பி-க்கள் எதிர்த்துப் பேசினர். இந்த விவகாரத்தில் அ.தி.மு.க-வின் இரட்டை நிலைப்பாடு விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

பெரும்பாலான கட்சிகள் முத்தலாக் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, அதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்புக்கு முன் அ.தி.மு.க எம்.பி.க்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். டி.ஆர்.எஸ், தெலுங்கு தேசம், பி.எஸ்.பி உள்ளிட்ட கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்.

முத்தலாக் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப 100 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். 84 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தேர்வுக்குழுவுக்கு அனுப்பும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின்னர், வாக்குச்சீட்டு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

மசோதாவுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 84 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனால் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறியது. மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அதன்பிறகு சட்டமாகும். மசோதா நிறைவேற்றத்தை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் முழக்கமிட்டனர்.

மசோதா நிறைவேற்றத்துக்கு வசதியாக அ.தி.மு.க எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்தது கண்டனத்திற்குள்ளாகி வருகிறது. முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என தி.மு.க எம்.பி. கனிமொழி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.