Politics

“அதை நீங்கள்தான் கூறவேண்டும் தீபாம்மா!”: அரசியலுக்கு முழுக்கு விவகாரத்தில் அந்தர்பல்டி அடிக்கும் ஜெ.தீபா!

ஜெயலலிதா உடல்நலமின்றி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரைப் பார்க்கச் சென்ற அவரது அண்ணன் மகள் தீபாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அவர் பத்திரிகையாளர்களிடம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து முறையிட்டார்.

இதையடுத்து, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, தீபா வீட்டு முன்பு கூடிய தொண்டர்கள் அவரை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். பல நாட்களாக கட்சி தொடங்குவது குறித்து முடிவெடிக்காமல் வார இறுதிகளில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியளித்து வந்த தீபா, ஒரு நன்னாளில் ‘தொபுக்கடீர்’ என அரசியலில் குதிக்க முடிவெடுத்தார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளின்போது ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ எனும் பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி அதற்குப் பொருளாளரகாகப் பொறுப்பேற்றார். கட்சிப் பெயரில் தன் பெயரையே சூட்டிக் கொண்ட தானைத் தலைவி என சமூக வலைதளங்களில் ட்ரெண்டும் ஆனார்.

உடல்நிலை குன்றியிருந்த ஜெயலலிதாவை பார்க்கச் சென்ற தன்னைத் தடுத்து, அவரது மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வைக் கைப்பற்றிய சசிகலாவை எதிர்ப்பதற்காக கட்சி தொடங்குவதாகத் தெரிவித்தார் தீபா. அ.தி.மு.க தொண்டர்களைக் காப்பாற்ற வந்த ரட்சகராக அவர் தன்னைத் தானே நினைத்துக் கொண்டிருக்க, தொண்டர்களோ தினகரன் அணி, இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி என அணிபிரிந்து கிடந்தனர்.

தீபா கட்சியில் ஆளே இல்லை எனப் பேச்சு அடிபட, கோஷ்டிப் பூசலே இருக்கிறது என ஜெ.தீபா, மாதவன் உள்ளிட்டோர் மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொண்டனர். மாதவன், தீபா கட்சியிலிருந்து பிரிந்து ‘எம்.ஜி.ஆர் ஜெ.ஜெ திராவிட முன்னேற்றக் கழகம்’ எனத் தனிக்கட்சி துவங்கி, அதைக் கலைத்துவிட்டு மீண்டும் தாய்க்கழகமான மனைவியின் கட்சியில் இணைந்ததெல்லாம் கிளைக் கதைகள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கினார் ஜெ.தீபா. ஆனால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படி, தீபா செல்லும் பாதைகள் எல்லாம் முட்டுக்கட்டை விழுக, தீவிர (!) அரசியலில் இருந்து சிலகாலம் ஒதுங்கியிருந்து பத்திரிகையாளர்களை மட்டும் அவ்வப்போது சந்தித்து வந்தார்.

இந்நிலையில், இன்று அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக ஜெ.தீபா அறிவித்தார். இதுதொடர்பாக வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “பேரவையை அ.தி.மு.க-வுடன் இணைத்துவிட்டேன். விருப்பம் இருந்தால் அந்தக் கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள்.

எனக்கென்று குடும்பம் உள்ளது. அதுதான் எனக்கு முக்கியம். குழந்தை பெற்றுக்கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை. யாரும் என்னை தொந்தரவு செய்யவேண்டாம். தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதை இதோடு நிறுத்த வேண்டுகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தான் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவையும் நீக்கியுள்ளார் தீபா. தனது லட்சோப லட்சம் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று தீபா, மனம் மாறி விட்டதாகவும், மீண்டும் முன்பை விட அதிதீவிரமாக (!) அரசியல் களத்தில் செயலாற்றுவார் என்றும் தகவல்கள் கசிகின்றன.