Politics

“அதைப் பற்றிப் பேசும் அந்த அருகதையை பா.ஜ.க இழந்துவிட்டது” - வைகோ குற்றம்சாட்டு !

நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்ற பின் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு ஏராளமான ம.தி.மு.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாடாளுமன்றத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராக 23 ஆண்டுகள் கழித்துச் செல்லும் வாய்ப்பை தி.மு.க.வின் ஒப்புதலுடன் வழங்கியதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பதவியேற்றபோது தி.மு.க தலைவர்கள் உட்பட பல்வேறு மூத்த தலைவர்களும் வாழ்த்து தெரிவித்ததாக கூறிய அவர், பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார். முத்தலாக் தடை சட்ட மசோதா, அணை பாதுகாப்பு சட்ட மசோதா, சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் விவாதத்திற்கு வர இருப்பதாகவும், அவை தொடர்பான விவாதத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் 105 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பதவியேற்றிருக்கும் பா.ஜ.க ஜனநாயக படுகொலையை நடத்தி இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், குதிரை பேரம் செய்து ஆட்சியை பா.ஜ.க கைப்பற்றிக் கொண்டதாக குற்றம்சாட்டினார். இந்த ஆட்சி எத்தனை நாளைக்குப் போகும் என்பதை பார்க்கத்தான் போகிறோம் என்றும் இதன் மூலம் ஜனநாயகத்தைப் பற்றி பேசும் அருகதையை பா.ஜ.க இழந்துவிட்டது என்றார்.