Politics
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர பா.ஜ.க திட்டம்? கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு!
கர்நாடகாவில் ஆளும் கூட்டணி அரசு மீதான அதிருப்தியால் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த.வைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் அம்மாநில அரசியலில் பெரும் குழப்பமும், பதற்றமும் நிலவியாது. இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி அரசு 99 வாக்குகளையும், பா.ஜ.க 105 வாக்குகளையும் பெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமி தவறியதால் கர்நாடகாவில் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி அரசு கவிழ்ந்தது.
இதனையடுத்து, பா.ஜ.க மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா முதல்வராகப் பொறுப்பேற்றார். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே, கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் சுயேச்சை எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இருவர் என மொத்தம் மூன்று அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தார்.
இந்த நிலையில், சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு எதிராக பா.ஜ.க நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத ஆளும் பா.ஜ.க எம்.எல்.ஏ தனியார் செய்தி நிறுவனத்திடம்அளித்த பேட்டியில், " எங்களின் முதல் இலக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும். அதைத்தொடர்ந்து, சபாநாயகர் தாமாக ராஜினாமா செய்கிறாரா என்று பார்ப்போம். இல்லையெனில், பேரவையில் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவோம்" என்றார்.
முன்னதாக, 3 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ரமேஷ்குமார், "புதிய அரசு பதவியேற்றாலும், நான் பேரவைத் தலைவராகத் தொடர்வேன். நான் ராஜினாமா செய்தால் மட்டுமே புதிய பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும். ஒருவேளை, புதிய அரசுக்கு என்னை மாற்ற வேண்டுமென்றால், என் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, என்னை நீக்கலாம். அதன்பிறகு புதிய பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!