File photo
Politics

அடுத்தடுத்து தி.மு.க.,வில் இணையும் முக்கியப் புள்ளிகள் : விரைவில் இணைவேன் ராஜகண்ணப்பன் சூசகம் !

அ.தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகி தி.மு.க.,வுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜகண்ணப்பன், “மக்களவைத் தேர்தலைப் போன்றே வேலூர் தொகுதியிலும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறேன். சட்டமன்றத் தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு அமைத்திருக்கிறோம். தி.மு.க.,வில் இணைவது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகிறேன். வேலூர் தேர்தல் முடிந்த பின்னர் அதுகுறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “அ.தி.மு.க.,வும் ஒரு திராவிட இயக்கம் என்பதால் அக்கட்சியில் இருக்கும் தொண்டர்கள் தி.மு.க.,வில் இணைய வேண்டும் என ஸ்டாலின் அழைத்ததில் தவறு இல்லை. அவர்கள் நாட்டின் நலனுக்காக தி.மு.க-வில் இணையவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, “தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கேடு நிலவுகிறது என்பதற்கு திருநெல்வேலியில் நடந்த கொலை- கொள்ளை நிகழ்வே சான்று. தமிழக மக்கள் பொது அமைதியை விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும் மக்களவைத் தேர்தல் வெற்றி குறித்துப் பேசிய ராஜகண்ணப்பன், எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் இல்லாத வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பியுள்ளதை சமீபத்திய தேர்தல் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.