Politics
'எடப்பாடி'க்கு மட்டும் நீங்கள் முதல்வரல்ல, தமிழ்நாட்டையும் கொஞ்சம் ஞாபகத்துல வைங்க :பழனிமாணிக்கம் ஆவேசம்
சேலம் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, 100 ஏரிகளில் நிரப்ப 565 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர் ஆகிய நான்கு தொகுதி மக்கள் பயன்பெறுவார்கள். இத்திட்டம் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும். '' என்றுத் தெரிவித்தார்.
இதற்கு தஞ்சை தொகுதி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு என்ன காரணங்களை சொல்கிறதோ அதைத் தான் எடப்பாடியும் சொல்கிறார். இத்திட்டத்தால், திருச்சி, புதுக்கோட்டை, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.
டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரினாலே மேட்டூரிலிருந்து வரும் நீரை சேமித்துவைக்க முடியும். கர்நாடகம் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பது போல, எடப்பாடியும் வஞ்சித்து வருகிறார். எட்டுவழிச்சாலை திட்டத்தால் அவருக்கு சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட களங்கத்தை துடைக்க, இத்திட்டத்தை செயல்படுத்தி சேலம் மக்களை திருப்திப்படுத்த விரும்புகிறார்.
எடப்பாடி முதல்வராக பொறுப்பேற்ற பின் அவரது செயல்கள் காவிரி பாசன விவசாயிகளின் உரிமைகளை சிதைக்கும் விதமாக உள்ளது. ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தில் மூடப்படும் மேட்டூர் அணை தவிர்க்க முடியாத சமயங்களில் ஓரிருமுறை திறக்கப்படும். ஆனால், எடப்பாடி பதவியேற்ற பின் விதிகளை மீறி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு தலைமை பொதுப்பணித்துறை பொறியாளரிடம் இருந்த மேட்டூர் அணையின் நிர்வாகம் மற்றும் அதிகாரத்தை முதல்வர் தனக்கு கீழ் உள்ள அதிகாரியின் வசம் மாற்றியுள்ளார்.மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதை முதல்வரே முடிவு செய்து கொள்வதும் துரோகச் செயலாக அமைந்துள்ளது. அவரின் இந்தச் செயல் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசிற்கு மறைமுகமாக உதவுகிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
முதல்வர் பழனிசாமி இத்திட்டத்தை கைவிட்டு இதற்கு ஒதுக்கப்படுவதாக கூறப்பட்ட 565 கோடியை காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள ஏரிகளை தூர்வார பயன்படுத்த வேண்டும். மேலும், மேட்டூர் அணையை திறக்கும் அதிகாரத்தை மீண்டும் தஞ்சை கலெக்டர் மற்றும் தமிழ்நாடு தலைமை பொதுப்பணித்துறை பொறியாளரிடம் ஒப்படைக்க வேண்டும். நீங்கள் எடப்பாடி தொகுதிக்கு மட்டும் முதல்வராக அல்லாமல் தமிழகத்திற்கும் முதலமைச்சராக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!