Politics

“அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் நாளை காலை ஆஜராகவேண்டும்” : கர்நாடக சபாநாயகர் சம்மன்!

ராஜினாமா செய்த கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேரும் நாளை (ஜூலை 23) காலை 11 மணியளவில் தனது முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன் அனுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏக்கள், முதல்வர் குமாரசாமி மீது அதிருப்தி தெரிவித்து தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். அவர்கள் தற்போது பா.ஜ.க-வினரின் ஆதரவோடு மும்பையில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தார். அதன்மீது இரண்டு நாட்களாக இடையிடையே அமளியுடன் விவாதம் நடந்துகொண்டிருந்தது. இன்றும் விவாதம் தொடர்ந்து நடக்கிறது.

பா.ஜ.க-வினர் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் எனக் கோரி வருகின்றனர். பா.ஜ.க-வினரின் அழுத்தத்தின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்தவேண்டும் என கர்நாடக ஆளுநர் முதல்வருக்கும், சபாநாயகருக்கும் கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபையில் இன்று மாலையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்டுப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சபாநாயகர் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு சம்மன் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.