Politics

“என்னை கடத்தியது தமிழக அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும்தான்” : முகிலன் பரபரப்பு பேட்டி!

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை இல்லத்தில் நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, முகிலனை எழும்பூர் நீதிமன்றத்தில் காலை ஆஜர்படுத்துமாறும், அதுவரை ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது காவல்துறையின் வேனில் இருந்தபடியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முகிலன், தன்னை மர்ம நபர்கள் சிலர் கடத்தி வைத்திருந்ததாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்துவிட்டதாகச் சொல்லி சித்ரவதை செய்ததாகவும் கூறினார்.

மேலும், எடப்பாடியின் அ.தி.மு.க அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் கூட்டு சேர்ந்து தன்னை கடத்தி கொடுமைப்படுத்தியுள்ளது என பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்ரவதை செய்தனர் என்றும், உங்களுடைய குடும்பத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என்றும் ஒருவர் பேசினார். எதற்கும் ஒத்துழைக்காவிடில் வேறு மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டினார்கள் என்றும் முகிலன் தெரிவித்தார்.