Politics

எல்லோருக்கும் ‘வெவ்வெவ்வே..’ காட்டிய எடப்பாடி : அ.தி.மு.க ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க வேட்பாளர்களாக வழக்கறிஞர் வில்சன் மற்றும் தொ.மு.ச சண்முகம் ஆகியோரும், தி.மு.க கூட்டணி சார்பில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியிடுகின்றனர்.

அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் 3 உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடுவதில் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவிய நிலையில் இன்று அ.தி.மு.க சார்பில் 2 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடம் கூட்டணிக் கட்சியான பா.ம.க-வுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களில் ஒருவருக்கு ராஜ்யசபா சீட் தரவேண்டும் என வலியுறுத்தி வந்தார். எடப்பாடி தனது ஆதரவாளர்களை டெல்லியில் வலிமைபெறச் செய்வதற்காக ராஜ்யசபா எம்.பி-களாக்கத் திட்டமிட்டு வந்தார்.

இதற்கிடையே, கட்சியின் சீனியர்களான தம்பிதுரை, தளவாய் சுந்தரம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், அன்வர் ராஜா, தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோரும் ராஜ்யசபா சீட்டுக்காக காய்நகர்த்திக் கொண்டிருந்தனர்.

ஒரு சீட்டை பா.ம.க-வுக்குக் கொடுத்தால் மீதமிருக்கும் 2 சீட்களைக் கொண்டு சீனியர்களை திருப்திப்படுத்துவது கடினமான காரியம் என்பதால் தனது ஆதரவாளர்களான உள்ளூர் நிர்வாகிகளுக்கே சீட் தர முடிவெடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் ஒப்புதல் அளித்துவிட்டார்.

இதையடுத்து, தங்களை மதிக்கவில்லை என சீனியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. சில வருடங்களாக பதவியில் இல்லாமல் இருந்துவரும் நத்தம் விஸ்வநாதன், அன்வர் ராஜா உள்ளிட்டோர் கட்சித் தலைமை தங்களை ஓரங்கட்டுவதாக உணர்ந்துள்ளனர்.

ஏற்கனவே, கட்சியிலும், ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு கட்சிக்குள் மேலும் பூசலைக் கிளப்பியுள்ளது.