Politics

மழை வந்த பின் தண்ணீர் தருகிறோம் என்று சொல்வதற்கு அரசாங்கம் தேவையில்லை - கே.எஸ்.அழகிரி !

மதுரை விமான நிலையம் வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், '' அ.தி.மு.க அரசின் வருண ஜெபம் என்பது போர்க்களத்தில் இருக்கும் வீரர் துப்பாக்கி இல்லாதது போல் இருக்கிறது. போர்க்களத்திற்கு செல்பவர்கள் துப்பாக்கியுடன் செல்ல வேண்டும், துப்பாக்கி இல்லாமல் போனால் ஒரு போர் வீரரின் நிலை எவ்வளவு பரிதாபமோ அப்படித்தான் தமிழக அரசின் நிலை இருக்கிறது. குடிப்பதற்கு தண்ணீர் கேட்டால் நாங்கள் மழைக்காக வேண்டுகிறோம் மழை வந்த பின் தண்ணீர் தருகிறோம் என்று சொல்வதற்கு ஒரு அரசாங்கம் தேவையில்லை. ஒரு அரசாங்கத்தின் இன்றியமையாத கடமையை செய்வதற்கு தவறி இருக்கிறது தமிழ்நாடு அரசாங்கம். அதற்காக இந்த அரசாங்கம் வெட்கப்படவேண்டும்.

கேரளாவில் முதலமைச்சர் தண்ணீர் கொடுக்க தயார் ஆனால் தண்ணீரை கேட்டுப் பெறுவதற்கு தமிழக முதலமைச்சர் தயாராக இல்லை. ஏனென்றால் அவர் வீட்டிற்கு ஒரு நாளைக்கு 4 லாரி தண்ணீர் செல்கிறது. அதனால், அவர் கவலைப்பட மாட்டார். ஆனால், மக்களின் சிரமத்தை அவர்களும் சேர்ந்து அனுபவிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் அரசாங்கத்தின் மீது ஒரு நம்பிக்கையை பிறப்பிக்கப்படும். இப்போது உள்ள கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் முதலமைச்சர் கேட்டால் தண்ணீர் தருவார்கள். ஆனால் இப்பொழுதுதான் தமிழக முதலமைச்சர் அவர்கள் கேரளா முதலமைச்சரிடம் கடிதம் எழுதலாம் என்று யோசித்து உள்ளார். இவர் யோசித்து முடிப்பதற்குள் எவ்வளவு தண்ணீர் பிரச்சனை வந்துவிடும்.

சென்னையில் எந்த ஒரு லாரியும் அதன் இலக்கை நோக்கி போவதில்லை வழியிலேயே மறைத்து மக்கள் தண்ணீரைப் பிடித்துக் கொள்கின்றனர். இந்த அரசாங்கம் இப்படி தோல்வியடையும் என நான் எதிர் பார்க்கவில்லை. அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என உயர் நீதிமன்றமே சொல்லியிருக்கிறது.

ஒரு மாதங்கள் கழித்து பாட புத்தகம் கொடுத்தால் அந்த குழந்தைகள் எப்படி படிப்பார்கள் என்று அந்த அரசாங்கம் யோசிக்க வேண்டும். இந்த கால தாமதம் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தொகுதி வரையறை என்பது உச்சநீதிமன்றமே முடிவு செய்து மாநில அரசாங்கத்திற்கு தெளிவான விளக்கங்களை உத்தரவுகளை அனுப்பி இருக்கிறார்கள். இந்த முறையும் வரையறை செய்வதில் இவர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் இவர்கள் மக்களை மட்டுமல்ல உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றுகிறார்கள் என்று பொருள்'' இவ்வாறு தெரிவித்தார்.