Politics

29-ம் தேதி பதவியேற்கிறார் நவீன் பட்நாயக் !

ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 9 தொகுதிகளை கைப்பற்றியது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புதிய அரசு வரும் 29-ம் தேதி பதவியேற்கும் என்றும், தொடர்ந்து 5-வது முறையாக நவீன் பட்நாயக் முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் பிஜு ஜனதா தளம் தலைமை இன்று தெரிவித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜு ஜனதா தளம் எம்.எல்.ஏ-க்களின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்படுகிறார்.

இந்த தேர்தலில் ஹிஞ்சிலி தொகுதியில் போட்டியிட்ட நவீன் பட்நாயக் பா.ஜ.க வேட்பாளர் பீதாம்பர் ஆச்சார்யாவை 60,160 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஒடிசா முதல்வராக 2000-ம் ஆண்டில் பதவியேற்ற நவீன் பட்நாயக், அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.

மக்களவை தேர்தலைப் பொறுத்தவரை, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க 8 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.