Politics

துரோகத்தின் பலனாக தோல்வியை அறுவடை செய்த பா.ம.க - வேல்முருகன் 

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் நேற்று (மே 23) வெளியானது. தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குக் காரணமான தி.மு.க தலைவர் முக.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "தமிழகம் சமூக நீதிக்கான மண் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது. இந்த மாபெரும் வெற்றியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனதார வரவேற்கிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிக்கு வித்திட்ட தமிழக மக்களுக்கு எங்களது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பாரதிய ஜனதாவின் மதவாத பாசிச போக்கு தமிழகத்தில் எடுபடாது என்பதை தேர்தல் முடிவுகள் மீண்டும் நிரூபித்திருக்கிறது. தமிழக மக்கள் சரியான பாடத்தை தொடர்ந்து கற்பித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக மக்களை நாசமாக்கும் நாசகார மோசமாக திட்டங்களை தீட்டி தமிழர் விரோத போக்கினை கடைபிடிக்கும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கினை எதிர்த்து இந்த அணி தொடர்ந்து போராடும். ரத்து செய்யப்பட்டுள்ள வேலூர் தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் அதிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும்.

தமிழக மக்களை ஏமாற்றி வஞ்சித்து வெற்றிகளை அனுபவித்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு அவர்கள் செய்த துரோகத்தின் பலனாக இன்று அவர்கள் போட்டியிட்ட 7 தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளனர். பா.ம.கவின் அரசியல்பாணி இனி தமிழகத்தில் பலிக்காது" என்று தெரிவித்துள்ளார்.