Politics
ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்போம்! : தொல்.திருமாவளவன்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தினர். கடந்த ஆண்டு மே 22-ம் தேதியன்று அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதியான முறையில் ஊர்வலமாக சென்றனர்.
அவர்களிடம் முறையான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மொத்தம் 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்தச் சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதையொட்டி பொதுமக்கள் தூத்துக்குடியின் பல இடங்களில் உயிர்ழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் குறித்து வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது :
முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று பலியானவர்களின் குடுமபத்தைச் சார்ந்தவர்கள் தூத்துக்குடியில் அஞ்சலி செலுத்துவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளது. தமிழக அரசு, குறிப்பாக காவல்துறையின் இத்தகைய கெடுபிடியான அடாவடி போக்கினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவன்மையாகக் கண்டிக்கிறது.
ஓராண்டு கடந்த நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியதாகும். அத்துடன், வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாகச் செயல்படும் போக்கினையே தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. அதற்கான சான்றாகவே தூத்துக்குடியில் இன்று காவல்துறையினர் நடந்துகொள்ளும் அடக்குமுறை போக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
தூத்துக்குடியில் மட்டுமின்றி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மோடி அரசு உரிமம் வழங்கியுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கேவலப்படுத்துவதாக உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி அரசு தமிழகத்தின் வாழ்வாதாரங்களை நாசமாக்கும் வகையில் பல்வேறு வேதி நச்சுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வேதிநச்சு திட்டங்களின் மூலம் தமிழகத்தையே நாசமாக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருவதை அறியமுடிகிறது. இத்தகைய நாசாக்கார நச்சுத்திட்டங்களிலிருந்து ஒட்டுமொத்த தமிழகத்தையே பாதுகாக்க வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தால் பலியான தோழர்களின் நினைவினை நெஞ்சில் ஏந்தி, அகில இந்திய அளவில் சாதிய-மதவாத சக்திகளிடமிருந்து ஜனநாயகத்தை பாதுகாக்கவும், கார்ப்பரேட் மற்றும் ஆளும்வர்க்கம் ஆகிய கூட்டுக் கொள்ளை கும்பலின் நாசக்காரத் திட்டங்களிலிருந்து தமிழகத்தைக் காக்கவும் ஜனநாயக சக்திகள் யாவரும் ஒருங்கிணைந்து போராட இந்நாளில் உறுதியேற்போம். என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
டிட்வா : Orange Alert -ல் இருந்து Red Alert... சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை விடுமுறை.. - விவரம்!
-
“புயல் சேதம் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதை கைவிடவேண்டும்! : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!
-
எரிசக்தி திறனிலும் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு!: ஒன்றிய அரசு வெளியிட்ட SEEI குறியீட்டில் தெரிவிப்பது என்ன?
-
“பிரதமர் மோடியின் ‘கபட நாடகம்’ அடங்கிய உரை!” : ஜெய்ராம் ரமேஷ் எம்.பி கண்டனம்!