Politics

குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க; காவிரி ஆணையத்தை உடனே கூட்டுக! வைகோ வலியுறுத்தல்...

காவரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசு நடவெடிக்கை எடுக்க ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டது. மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 1000 கன அடியிலிருந்து 3000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் 50.61 அடியாக சரிந்துவிட்டது. மேட்டூர் அணை நீரைப் பயன்படுத்தி 12 மாவட்டங்களில் சுமார் 16 இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கர்நாடக மாநிலம் காவிரி நீரைத் திறந்துவிட மறுப்பதால், மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வரத்து குறைந்துவிட்டது. இதனால் முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க முடியாத நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் மாதந்தோறும் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பதைக் கண்காணிக்க வேண்டும். மேலும் 10 மாத இடைவெளியில் காவிரியிலிருந்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை மாதத்திற்கு எவ்வளவு என்பதை கணக்கில் கொண்டு திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.

ஆனால் 2019 ஆம் ஆண்டு தொடங்கி, ஐந்தரை மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் காவிரி ஆணையமோ? ஒழுங்காற்றுக் குழுவோ இன்னும் கூட்டப்படவில்லை.

தமிழகம் கடுமையான குடிநீர் பிரச்சினையில் தவித்துக் கொண்டிருக்கிறது. குறுவை சாகுபடிக்கு நீர் இல்லாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அரசு கோரிக்கை வைக்காதது கண்டனத்துக்கு உரியது.

காவிரி டெல்டா குறுவைப் பாசனத்தின் தேவையைக் கருத்தில் கொண்டும், கடுமையான குடிநீர் பற்றாக்குறையைப் போக்கவும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி உடனடியாக காவரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.