Politics

“சுயமரியாதை இழந்து தமிழகத்தை ஆளும் அதிமுக இனியும் தொடரவேண்டுமா?” - ப.சிதம்பரம் கேள்வி 

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க வேட்பாளர் வி.செந்தில் பாலாஜியை ஆதரித்து க.பரமத்தியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பங்கேற்றார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய ப.சிதம்பரம் பேசியதாவது;

“இந்தியாவிலேயே பா.ஜ.க-வை எதிர்க்கும் மாநிலமாக தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. மோடி வேறு, இந்த ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் ஜோடி வேறல்ல. மோடிதான் சூத்திரதாரர். அவர் கையில் தான் நூல் இருக்கிறது. அவர் நூலை ஆட்டினால் இந்த ஜோடி ஆடும். இது ஒரு பொம்மலாட்ட ஆட்சி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இருவரது கையிலே சிக்கிக்கொண்டு அவர் முதல்வரா, இவர் முதல்வரா என போட்டி நடந்து இப்போது இருவரும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு ஜோடியாக தமிழகத்தை சூறையாடுகிறார்களே ஒழிய, தமிழகத்தில் இந்த இரண்டு, மூன்றாண்டுகளாக எந்த திட்டமும் நிறைவேறவில்லை.

தி.மு.க அரசு என்றவுடன் நினைவுக்கு வருவது விவசாயிகளின் ரூ.7ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி தான். ஆனால் அ.தி.மு.க அரசு என்றால் நினைவுக்கு வருவது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, பொள்ளாச்சி பாலியல் சம்பவம், மணல், கிரானைட் கொள்ளை போன்றவை தான் நினைவுக்கு வருகிறது. எரிவாயு தோண்டுகிறேன் எனக் கூறி நெடுவாசலிலே பசுமையான விளை நிலங்களை தோண்டியது நினைவுக்கு வருகிறது. இதனால்தான் இந்த ஜோடியை விரட்ட நீங்கள் தி.மு.க-விற்கு வாக்களிக்க வேண்டும்.

நீட் தேர்வை ஏன் ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் ரத்து செய்யவில்லை? உண்மையிலே அ.தி.மு.க அரசுக்கு தமிழக மாணவர்களின் நலன் முக்கியம் என்றால் மத்திய அமைச்சர்கள் பியூஸ்கோயல், ஜாவ்டேகருக்கு எதிராக ஓ.பி.எஸ்-ஸும், இ.பி.எஸ்-ஸும் அறிக்கை தந்திருக்க வேண்டுமா, இல்லையா? நீ யார் சொல்வதற்கு நாங்கள் கட்டிய அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர்களை சேர்க்க எங்களுக்கு உரிமை இருக்கிறது என சொல்வதற்கு திராணி இல்லாத, தெம்பு இல்லாத அ.தி.மு.க அரசு இருந்து என்ன, இல்லாமல் இருந்தென்ன?

தமிழனுக்கு சுயமரியாதையை கற்றுக்கொடுத்தவர் பெரியார். அவர் தி.மு.க-விற்கும், காங்கிரஸுக்கும் பாட்டன். பெண்கள் மீது சுமத்தப்படும் இழிவுகளுக்கு முடிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு. இதைத் தானே கற்றுக் கொடுத்தார்கள். சுயமரியாதை இழந்து ஒரு ஜோடி தமிழகத்தை நடத்துகிறார்கள் என்றால் இந்த ஆட்சி தொடர வேண்டுமா, முடிய வேண்டுமா என நிர்ணயிக்கப்போவது தான் இந்தத் தேர்தல்.” இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.