ராம் கோபால் யாதவ்
Politics

வாக்குகளைப் பெறவே புல்வாமாவில் தாக்குதல் - ராம்கோபல் யாதவ் பேச்சு

கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது. இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது.இதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு வந்தனர்.

pulwama attack

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் தீவிரவாதிகள் கொன்றதை சமாஜ்வாதிக் கட்சியின் பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். பாட்னா அருகே உள்ள சைபை எனும் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ராம்கோபல் யாதவ் பேசியதாவது:

" துணை ராணுவப்படையினர் மத்திய அரசு மீது அதிருப்தியுடன் இருக்கிறார்கள். புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இதைப் பற்றி கூற விரும்பவில்லை. துணை ராணுவப்படையினர் என்னிடம் வருத்தப்பட்டு புகார் கூறினார்கள். விமானத்தில் அனைத்து வீரர்களையும் அனுப்பி இருக்கலாம் என்று துணை ராணுவப்படையின் மூத்த அதிகாரிகள் என்னிடம் புகார் தெரிவித்தார்கள்.ஜம்மு வரை விமானத்தில் சென்றிருக்கலாம் அல்லது பாதுகாப்புப் படையின் குண்டு துளைக்காத வாகனத்தில் சென்றிருக்கலாம்.

முதல் முறையாக தாக்குதல் நடந்த அன்று, ஸ்ரீநகர் முதல் ஜம்மு வரை எந்தவிதமான பாதுகாப்புச் சோதனையும் நடைபெறாமல் வீரர்கள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி வீரர்கள் அனைவரும் முதல்முறையாக சாதாரண பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள். பேருந்துகள் எங்கும் நிறுத்தப்படாமல் சென்றுள்ளன, குறிப்பிட்ட இடத்துக்கு வந்தவுடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஏதோ சதி நடந்திருக்கிறது.

மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பதவிஏற்றவுடன் புல்வாமா தாக்குதல் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும். இந்த விஷயத்தில் மிகப்பெரிய தலைவர்கள் சிக்கி இருக்கலாம் என்று கருதுகிறேன். இவ்வாறு ராம்கோபால் யாதவ் தெரிவித்தார்.

yogi adithyanath

ராம்கோபால் யாதவ் பேச்சுக்கு உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், " நம்முடைய வீரர்கள் குறித்த வீர மரணத்தில் சந்தேகம் எழுப்பியும், கறைஏற்படுத்தியும் பேசியதற்காக ராம்கோபால் மன்னிப்பு கோர வேண்டும். இவரின் பேச்சு வீரர்களின் நம்பிக்கையை குலைத்துவிடும் " எனத் தெரிவித்தார்.