உணர்வோசை

ஆரியர்கள் யார்?.. இந்தியப் பரப்புக்குள் நுழைந்த இவர்களால் எப்படி அதிகாரம் செலுத்த முடிந்தது?

சிறு அளவில் இந்தியப் பரப்புக்குள் நுழைந்த ஆரியர்கள் எப்படி இங்குள்ள எண்ணற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்த முடிந்தது?

ஆரிய ஆதிக்கத்தை பற்றி பேசும்போதெல்லாம் எதிர்ப்படுகிற கேள்வி இது.

Tony Joseph உள்ளிட்ட பலர் ஆரியர்கள் இந்திய பரப்புக்குள் வந்ததை ஒரு முக்கியமான வார்த்தை சுட்டலுடன் குறிப்பிடுவார்கள். பண்பாடு! ஆரியர்கள் ஒரு புது கலாச்சாரத்தை கொண்டு வந்தார்கள். சரியாக சொல்வதெனில் கலாச்சார படையெடுப்பு. அதுவும் முக்கியமாக கடவுளின் தலைமையிலான சமூகம் என்கிற ஒரு கருத்தியல்!

அதாவது அரசன் அல்லது ஒரு தலைவன் ஒரு குழுவை, ஓர் இனத்தை ஆட்சி செய்வதற்கு மக்களை மீறிய ஒரு சக்தி இருப்பதாக கற்பிக்க வேண்டும். அப்படி கற்பித்தால்தான் ஆட்சியை நீட்டிக்க முடியும். அரசனின் தேவை அங்கே எழுகிறது.

ஆரியன் உள்ளே வரும்போதே அக்கினி கடவுளை கையாளத் தெரிந்தவன் என்கிற கதையுடன்தான் வருகிறான். ஆரியன் என்றாலே 'பரிசுத்தமானவன்' என பொருள். அத்தகைய பரிசுத்தத்தை கொண்டுதான் கடவுளை எட்ட முடியுமென்கிறான். அதற்கு என ஆசார வாழ்க்கை ஒன்றை உருவாக்கிக் கொள்கிறேன். யோகா தொடங்கி பஞ்சாங்கம் வரை நம்மிடம் அவர்கள் திருடிக் கொண்டதே அதிகம்.

'நாங்கள் தனியானவர்கள்' என்கிற சிந்தனை ஒரு வாழ்க்கைமுறையாக இந்திய பரப்புக்குள் வந்தது அவர்களால்தான் என்று கூட கூறலாம்.

ஆடு, மாடுகளுடன் வருபவர்களுக்கு இயல்பாகவே நீராதாரம், மேய்ச்சல் நிலம் போன்றவை தேவைப்படும். கோசம்பி போன்றோர் இந்திய பரப்பின் வட மேற்கு உச்சத்திலிருந்து உள்ளே நுழையும்போது அணையை உடைத்து விட்டு நீராதாரத்தை உருவாக்கி ரிக் வேதத்தில் கடவுளின் பெயரில் அந்த இடித்தல் வேலையை எழுதி விட்டதாக கூறுவார்.

பிற்காலத்தில் ரொமிலா போன்றோர் கால்நடைகளுக்கு வயல்களை சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் சண்டை இழுத்துக் கொண்டெல்லாம் வர மாட்டார்கள் என முன் வைத்தார்.

ஊர்களில் மேய்ச்சலுக்கு செல்வோரும் ஆட்டுக்கு கிடை போடுவோரும் நிலம் வேண்டி விவசாயியிடம் சென்று சண்டையிட்டு பார்த்திருக்கிறீர்களா? முடிந்தவரை சுமூகமாக போகவே பார்ப்பார்கள். அதற்கான வாய்ப்புகளே ஆரியர்களுக்கும் அதிகம்.

ஆரியர்கள் நுழையும்போது சிந்து நாகரிகம் அழிந்த காலக்கட்டம். மக்கள் மீண்டும் கிராம வாழ்க்கைக்கு நகர்ந்திருக்கலாம் என நினைக்கும் காலக்கட்டம் அது. வணிகம் அற்று, காலநிலை கைவிட்டு, ஒரு நாகரிகம் உடைந்த காலக்கட்டத்தில் உள்ளே நுழைந்தவர்களுக்கு சண்டை போட்டு இடம் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இயல்பாகவே அது கிடைத்திருக்கும்.

ஒரு சிதைவு நேருகிற காலத்தில் ஏதோவொரு நம்பிக்கையோ பிடிமானமோ மக்களுக்கும் தேவைப்படும். மக்களை ஆள வேண்டிய தலைவனுக்கும் தேவைப்படும். காங்கிரஸ் அகங்காரத்தின் உச்சத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த காலத்தை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மக்களின் பிடிமானத்துக்கு ஒரு பொய் தேவைப்பட்டது. குஜராத் மாடல் கிடைத்தது.

சில ஆயிரங்களில் மட்டுமே இருந்த ஆர்எஸ்எஸ் கூட்டமும் சில லட்சங்களில் இருந்த பாஜக கூட்டமும் 120 கோடி பேரை ஏமாற்ற முடிந்ததை மறந்து விட வேண்டாம். Over simplified ஆக தோன்றலாம். ஒப்பீட்டுக்கு பயன்படும். Ofcourse தொலைத்தொடர்பு, சமூகதளம் போன்றவை இப்போது கைகொடுத்தன. அக்காலத்தில் கடவுள் etc கை கொடுத்திருக்கும்.

ஆரியர்களுக்கு முன் இங்கு வழிபாடு இருக்கவில்லையா? இருந்திருக்கலாம். பழங்குடி வழிபாடுகள் இருந்திருக்கலாம். அதிகபட்சம் போனால் shaman போன்ற சாமியாடி இருந்திருக்கலாம். ஆனால் அவை யாவும் அரசனுக்கு அல்லது தலைமைக்கு கீழ் கட்டுப்பட்டுதான் இருந்தன. முதன்முறையாக அரசனுக்கும் மேலான ஒரு இடம் இந்தியப் பரப்பில் உருவாக்கப்பட்டது.

குண்டத்தில் நெய்யை ஊற்றி இங்கிருக்கும் தலைவன் அல்லது அரசனின் செய்திகளையும் வேண்டல்களையும் தீயாய் வளர்த்து உயர்த்தி நீளச் செய்து புகையாக்கி வான் கொண்டு சென்று அங்கிருக்கும் கடவுளரிடம் சேர்க்க செய்யும் திறமை கொண்டவனாக ஆரியன் தன்னை இருத்திக் கொண்டான். முதன்முறையாக இந்தியப் பரப்பில் ஒருவன் அதிகாரம் படைத்த அரசனிடமே உனக்காக கடவுளிடம் பேசும் எனக்கு கீழ்தான் நீ என்கிற நிலை எடுக்க முடிந்தது.

கிட்டத்தட்ட இத்தகைய நிலையை இச்சமூகத்தில் பலரும் எடுத்திருந்தனர். பாணர்களும் புலவர்களும் அரசனை துதியும் பாடுவார்கள். அறிவுரையும் வழங்குவார்கள். அவ்வையார் நெல்லிக்கனியை அதியமானிடம் கொடுக்க முடியும். அதியமானை புகழவும் முடியும். அரசர்களும் இதனாலேயே அவர்கள் மீது பெரும் மரியாதை கொண்டிருந்தனர். ஏனெனில் அவர்கள்தான் இந்திய பரப்புகளில் பயணித்து வெவ்வேறு நாடு மற்றும் அரசர்களை பற்றிய தகவல்களை பரப்புபவர்கள். வேள்பாரியில் கபிலருக்கு பாரி கொடுக்கும் மரியாதையைப் பாருங்களேன். புரியும்.

ஆரியர்கள் அடுத்ததாக காலி செய்தது இந்த பாணர், பாடன், பாடினி போன்றவர்களைத்தான். இந்தியப் பரப்பின் நரம்புகளாக ஓடிக் கொண்டிருந்த இவர்களின் இடத்தை ஆரியர்கள் பிடித்தனர். அவர்கள் எங்கும் ஓடவில்லை. அரசவையிலேயே வீற்றிருக்கத் தொடங்கினார்கள். வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று அனுபவங்களின் வழியாக செய்தி கொண்டு வந்திருந்த கூட்டத்தை நிறுத்தி விட்டு, நேரடியாக கடவுளே தனக்கு செய்தி தருவதாக சொல்லி ஆரியர்கள் அரசனுக்கு அருகே அமர்ந்தனர். வியர்க்க விறுவிறுக்க ஆடும் ஆடல் கலை, அரங்குக்குள் ஆடப் படும் பரதமாக சுருக்கப்பட்டது.

மக்களிடமிருந்து விலகி அரசன் என்கிற ஒரு exclusivity-க்குள் தலைமை செல்ல ஆரியர்கள் துணைபுரிந்தனர். உற்பத்தி பெருக்கி அரசு உருவாகும் பணியை செவ்வனே செய்து கொடுத்தனர். அரசு உருவாக மக்களுக்கு பெரும் கண்கட்டு தேவை. மதம் என்கிற கண்கட்டை கொண்டு வந்தனர். அரசின் இயக்கம் யாவும் சடங்குகளின் வழியாக நடைபெறுவதை உறுதி செய்தனர். சமூகத்தை அவர்களின் தலைமை உறுதி செய்யும் வருணாசிரமத்துக்கு ஏற்ப வகுத்தனர். சமூகத்தின் எல்லாமுமே சடங்குகளின் வழி இயங்கும் சூழலை உருவாக்கினர்.

சிதையுண்ட ஒரு நாகரிகத்தின் மிச்சத்தில் இருந்த தலைவர்களுக்கு மக்களிடம் சொல்ல ஒரு புதிய காரணம் தேவைப்பட்டது. நாடு நாடாக அடித்து விரட்டப்பட்ட ஒரு புது கூட்டத்துக்கு, தங்களை வரவேற்று ஏற்க ஒரு கூட்டம் தேவைப்பட்டது. இரண்டும் சந்தித்த புள்ளியில்தான் நாம் தொலையத் தொடங்கினோம்.

Also Read: அப்பா, அம்மா, அண்ணன், தம்பி என உறவுகள் எதற்காக உருவாக்கப்பட்டன ? அதில் ஏமாற்றங்கள் உருவாவது ஏன் ?