உணர்வோசை

Socio Cultural-லை உடைப்பதாலேயே எல்லா காதலும் புரட்சிகர காதலாகிவிடுமா?

ஒரு சமூகம் பல சமூக நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்டது. குடும்பம், திருமணம், மதம், சடங்குகள், கல்வி எனப் பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்த சமூகத்தை ஒரு போக்கில் இயக்கிக் கொண்டிருக்கின்றன. சமூகம் ஒரு போக்கிலிருந்து மாற்றப்பட வேண்டுமெனில் அதற்கு இந்த சமூக நிறுவனங்களின் இயக்கம் குலைக்கப்பட வேண்டும். மாற்றப்பட வேண்டும்.

அத்தகைய மாற்றத்தை ஒரு சமூகத்தில் எப்போதும் உருவாக்கவல்லதாக காதலுறுவு இருக்கிறது.

காதல், சாதியையும் மதத்தையும் தாண்டி வருகையில் சமூகம் கொண்டிருக்கும் சாதி, மதத்திலான போக்கு குலைக்கப்படுகிறது. அந்த அதிர்ச்சியை ஏற்றுக் கொள்ள சமூகம் மறுத்து எதிர்வினை ஆற்றுகிறாது. அடுத்தடுத்தக் காதலுறவுகளும் எதிர்வினை ஆற்றத் தொடங்குகின்றன. எண்ணிக்கை அதிகமான பிறகு சமூகம் வேறு வழியின்றி தன் போக்கை மாற்றிக் கொள்கிறது.

எனவே ஒரு சமூகக் கலாச்சார நிறுவனத்தின் இயக்கம் குலைக்கப்படுவதே முன்னேற்றம்!

எந்த ஓர் அமைப்பும் எந்த மாற்றமுமின்றி நீடிப்பது இயற்கை அல்ல. மாற்றத்துக்கு உட்படாத எந்த அமைப்பும் இருப்பதும் சரியல்ல.

காதலை பொறுத்தவரைக்கும், எல்லா காலங்களிலும் சமூகம் செல்ல விழையும் அடுத்த கட்டத்தை பிரதிபலித்தே நேர்ந்திருக்கிறது. அடுத்த கட்டத்தை எதிர்நோக்காத காதலோ உறவோ, ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களுக்கு ஏதுவாகத்தான் இருக்கும். ஆதலால் அத்தகையவற்றுக்கு எதிர்ப்பு நேர்வதில்லை.

இன்றுமே அப்படியான போக்கை காணலாம். காதலிப்போர் தன் சாதி, மதம், ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்த்து காதலிப்பது போல்! சாதி, மதம் மாறி காதலித்தாலும் இருக்கும் நிலப்பிரபுத்துவ குடும்ப கட்டமைப்புக்கு எந்த பங்கத்தையும் ஏற்படுத்திடாமல், அதன் ஒப்புதல் வேண்டி காத்திருப்பது போல்!

இவ்வகை காதல்கள் கிட்டத்தட்ட பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணப் பொருத்தம்தான். இவை எந்த வித கட்டமைப்பையும் உடைக்கப் போவதில்லை. இச்சமூகத்தின் status quoவை அப்படியே தொடர வைப்பதற்கான ஏற்பாடே!

Socio Cultural நிறுவனங்களை உடைப்பதாலேயே எல்லா வகை காதலும் சரியானதாகி விடுமா? i.e பிறன்மனை காதல் etc.

நிச்சயமாகக் கிடையாது.

திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை எனில் அதில் நுழையக்கூடாது. மாற்ற விரும்பினால் மாற்றத்தை அறிவித்து அடுத்தவருக்கு விளக்கி ஒப்புதல் பெற வேண்டும். இது ஏதும் செய்யாமல், திருமண ஒப்பந்தத்தை அதனளவில் அப்படியே ஏற்பதாக சொல்லிவிட்டு தன் நலத்துக்காக வேறொரு உறவில் நுழைந்துவிட்டு, பின் கேள்வி கேட்டால், திருமணம் வீண் என்றெல்லாம் காரணம் சொல்வது பரிசுத்தமான திருட்டுத்தனம்.

இது அல்லாமல், அமைப்புகளை உடைக்க விரும்பி செய்யப்படும் காதலிலும் கூட சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப்பெரும் சித்தாந்த தெளிவு இருக்க வேண்டும். ஏனெனில், இதே அமைப்பு, அதன் socio cultural நிறுவனங்களை வைத்துதான் அவர்களையும் வளர்த்தெடுத்திருக்கும். சித்தாந்தம் படித்து அமைப்பை உடைக்க செல்பவர்கள், உடைக்க முயலுகையிலும் உடைத்த பின்னும் அவர்களே அறியாமல் அவர்களுக்குள் தேங்கியிருக்கும் existing sociocultural residueவால் i.e ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், தோல்வி ஏற்காத நிலை etc அலைக்கழிக்கப்பட்டு நிம்மதியும் இழக்க நேரும்.

எல்லாவற்றையும் தாண்டி, ஆம், existing socio cultural நிறுவனங்களை காதல் உடைக்கத்தான் செய்ய வேண்டும். நாம் அதற்கு உதவவே வேண்டும்.

Also Read: சந்திரமோகன் ஜெயின் எப்படி ஓஷோவாக மாறினார்.. அறியப்படாத சில தகவல்கள் இங்கே!