உணர்வோசை

அரைவேக்காட்டுத்தனத்தை நிரப்பி வைத்திருக்கும் Wokeism என்றால் என்ன? கார்பரேட் உலகம் இதை எப்படி மாற்றியது ?

ஆங்கிலத்தில் Woke என ஒரு வார்த்தை உண்டு. இன்றைய சமூக ஊடகக் கலாசாரத்தில் அதிதீவிர அரசியல் முடுக்குகளில் இந்த வார்த்தைப் புழக்கம் இருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம்.

Woke என்கிற வார்த்தை பயன்பாடு 1930, 1940-களிலேயே பயன்பாட்டில் இருந்தது. 90களின் பிற்பகுதிகளில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான நீதியைக் கோரும் பல போராட்டங்களில் இடதுசாரிகள் அந்த வார்த்தையை பரவலாக்கினர். 2013ம் ஆண்டின் Black Lives Matter இயக்கத்துக்கு பிறகுதான் அந்த வார்த்தை இன்னும் அதிக பிரபலமானது.

எல்லாரையும் உள்ளடக்கும் inclusivity-யை கேட்கும் woke கலாசாரம் பெரும் கூட்டத்தைச் சேர்த்ததும் கார்ப்பரெட்டுகள் அதைக் கைகளில் எடுத்தன. நிறுவன விளம்பரங்களில் inclusivity-யை முன் வைத்தன. சமூகப் பொறுப்புடன் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. Woke Capitalism அறிமுகமானது.

அவர்களின் இலக்கு 90-களுக்குப் பின் பிறந்தவர்கள்தான். அவர்கள்தான் சோவியத்தோ கம்யூனிசமோ தெரியாத தலைமுறை. தனிமனிதவாதம், நுகர்வு, தன்முனைப்பு ஆகியவற்றை வாழ்க்கைமுறையாகக் கொண்டவர்கள். வரலாறு, அரசியல், சமூகம் என எதுவாகினும் எந்த ஆழமுமின்றி தன்னை முன்னிறுத்திக் கொள்ள மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்கள். பைனரியாக மட்டுமே சிந்திக்க முடிந்தவர்கள்.

அடுத்தக்கட்டமாக சமூகதளங்களை woke கலாசாரம் பற்றியது. Cancel culture பரபரவென வளர்த்தெடுக்கப்பட்டது. Political Correctness-ஐ முதன்மை அரசியல் கோட்பாடாக woke கலாசாரம் முன் வைப்பதால் அது மட்டுமே அலகாக எல்லாருக்கும் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த சட்டகத்துக்குள் பொருந்தாத எவரும் cancel செய்யப்பட்டனர். அது சரியா எனக் கேள்விக் கேட்டால்கூட cancel-தான்.

ட்ரம்ப் போன்ற political correctness அற்ற ஆட்களுக்கு wokeism வேப்பங்காய். மறுபக்கத்தில் உண்மையான woke நோக்கம் சிதைக்கப்பட்டு ஆழமற்ற அரசியலுக்கு வழிவகுக்கப்படுவதால் wokeism-க்கு இடதுசாரிகளும் எதிராக நிற்கின்றனர். இந்த இரு தரப்பு எதிர்ப்பையும் ஒன்றாக்கி, இடதும் வலதும் ஒன்றென கூக்குரல் இடுவதிலேயே மில்லன்னியல்கள் என்ற 90s மற்றும் 2k கிட்ஸ் எந்தளவுக்கு தக்கையான அரசியலைக் கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

Wokeism என்ற 'விழிப்புதன்மை'யைப் பொறுத்தவரை தன் கருத்தை ஒருவர் ஏற்க மறுத்தால் அவர் எதிரிதான் என நிறுவும் ஆபத்தைச் செய்கிறது. 'பாஜகவை ஆதரிக்கவில்லை எனில் நீ இந்து விரோதிதான்' என்பதான வாதங்களை எல்லா முகாம்களுக்கும் கொண்டு சென்று சேர்ப்பிக்கிறது.

குறிப்பாக இந்த wokeness மேட்டுக்குடி வர்க்கத்தின் துணையில் இயங்கும்போது அவர்கள் பேசுவதே வேதம் ஆகிறது. பிரபலம் ஆகிறது. நல்லரசியலும் ஆகிறது.

ஓர் அமைப்பு உருவாக்கும் சாதி, மத, பாலினப் பிரச்சினைகளில் உரையாடாமல், அரசியல் வினை ஆற்றாமல் எந்தத் தரப்பையும் வென்றெடுக்க முடியாது.

Inclusion -க்காகவும் பன்முகத்தன்மை போற்றவும் உருவாக்கப்பட்ட ஓர் அரசியல் கலாசார முறை, அதற்கு நேர்மாறான திசைக்கு இன்று மாறியிருக்கிறது.

அசைவம் சாப்பிட்டால் கலவி கொள்ள முடியாது என பேசும் வீகனிசம் தொடங்கி கடற்கரையில் கிடக்கும் குப்பைகளை பொறுக்கினால் உலகை காப்பாற்றி விடலாம் என்பது வரை நீக்கமற அரைவேக்காட்டுத்தனத்தை நிரப்பி வைத்திருப்பது இந்த கார்ப்பரெட் wokeism.

எந்த அரசியலறிதலும் புரிதலும் வாசிப்பும் களப்பணியும் இன்றி திடீரென விழித்துப் பார்த்து 'சிவாஜி செத்துட்டாரா' என அதிர்ச்சி அடைபவர்களிடம் 'நடிகர் சிவாஜியா அல்லது மன்னன் சிவாஜியா' என்ற கேள்வியை கேன்சல் செய்யப்படாமல் கேட்பதற்குள் நாம் படும் கஷ்டம் இருக்கே.. துயரங்கள்தான்!

Also Read: இப்படி ஒரு மரணமா ? கால் வழுக்கி கொதிக்கும் எண்ணெயில் விழுந்து மீன் வியாபாரி பலி.. சென்னையில் அதிர்ச்சி !