உணர்வோசை

குழந்தை வளர்ப்பு பற்றி நம் சமூகத்திற்கு என்ன புரிதல் இருக்கிறது?

நம் சமூகத்தில் பல விஷயங்களுக்கு போதுமான பயிற்றுவிப்பு கிடையாது. அதுவும் இன்றையச் சூழலில் இருக்கும் வாழ்க்கைகள் யாவும் கிட்டத்தட்ட ‘தண்ணீரில் தள்ளி விட்டு, நீச்சல் கற்றுக் கொள்’ என்கிற பாணிதான் அதிகமாக இருக்கிறது. குழந்தை வளர்ப்பு பற்றிய புரிதலோ பயிற்றுவிப்போ கிடையாது என்கையில் குழந்தைக்கான கல்வி பற்றிய சிந்தனை மட்டும் இருந்திடுமா?

ம்ஹும்!

முதலில் சிறப்பான கல்வி என்பதில் நமக்கு தெளிதல் இருக்க வேண்டும். சிறப்பான கல்வியை இரு வகைகளில் பிரித்து வைத்திருக்கிறோம். ஒன்று வசதியான மேல்தட்டுக் கல்வி. இரண்டு அரசுப் பள்ளிக் கல்வி. வளரும் குழந்தைகளின் அடிப்படை வாழ்வுக்கான சிறப்பு இங்கிருந்துதான் தொடங்குகிறது.

சிறப்பான வாழ்வு எது என்பது முக்கியம். சிறப்பு என்பது வசதியான கான்வெண்ட்டில், காரில் போய் இறங்கி, குதிரையேற்றம் கற்று, IIM-ல் சேர்வதற்கான கோச்சிங்கை Pre kg-ல் இருந்து தொடங்கும் பள்ளிப்படிப்பு என்றால் சிக்கல்தான்.

ஒருவரின் ஊதியத்தில், அதுவும் அரசு வேலையில் இருக்கும் ஒருவரின் ஊதியத்தில் குடும்பத்தை தாராளமாகவே நடத்தலாம். அதற்கு மேலும் பணம் தேவைப்படுகிறதெனில் அது விரயமான டாம்பீகத்துக்கு மட்டுமே வழி வகுக்கும். அந்த ஆடம்பரத்தில் வளரும் குழந்தை, சமூகத்தை மிகவும் தப்பாக புரிந்து கொள்ளும்.

இரண்டாவது, எது பள்ளி என்பதும் எது கல்வி என்பதும் முக்கியம். இன்றைய பள்ளிகள் ப்ராய்லர் கோழிக்கூடங்கள். அங்கு அறிவு இல்லை. கல்வித்திட்டமும் மதிப்பெண்ணுக்கானது மட்டுமே. அந்த மதிப்பெண்களை அதிகம் எடுத்து வந்தவர்களால் நாட்டுக்கு எள்ளளவும் பிரயோஜனமும் இல்லை. அந்த மதிப்பெண்கள், எப்படி பணம் செய்வது என்பதை நோக்கிதான் அவர்களை ஓட வைத்திருக்கிறது. அறத்தை தேவையற்ற அலங்காரமாக அவர்களை பார்க்க வைத்திருக்கிறது.

அறமற்ற கல்வி அறமற்ற சமூகத்தைதான் உருவாக்கும்.

மூன்றாவது, குழந்தை வளர்ப்பு ரொம்பவே முக்கியம். பெற்றோர் இருவருமே வேலைகளுக்கு சென்று குழந்தை வளர்ப்பில் அலட்சியம் காட்டுவதென்பது சமூக விரோதம். குடும்பம் என்பது சமூக நிறுவனம். அதன் உற்பத்தி பொருள், குழந்தை. அதை சரியாக பராமரித்து வளர்த்தெடுக்காமல் சமூகத்தில் நடமாட விடுவது எத்தனை ஆபத்தான விஷயம்?

எழுத்துகளை கற்றுக் கொடுங்கள். மெல்ல கதை புத்தகங்களை பழக்கப்படுத்தி கற்பனை வளத்தை அதிகப்படுத்துங்கள். அறிவியலாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை படிக்க வையுங்கள். பல ஊர்களுக்கு குழந்தைகளுடன் பயணியுங்கள். பலதரப்பட்ட மக்களை சந்தியுங்கள். பார்த்த இடங்களை பற்றியும் சந்தித்த மனிதர்களை பற்றியும் குழந்தைகளுடன் உரையாடுங்கள். குழந்தைகளுடன் சேர்ந்து நீங்களும் evolve ஆகுங்கள்.

நாம் வளர்ந்தபின் குழந்தைகள் பெற்றுக் கொள்கிறோம். குழந்தைகள் பெற்ற பின்னும் நாம் வளரலாம். இதைவிட சிறப்பான வாழ்வை குழந்தைகளுக்கு எப்படி தந்துவிட முடியும் என எனக்கு தெரியவில்லை.

Also Read: “சமூகவலைதளத்தில் பரவும் குழந்தைகள் காணொளிகள்” - ஒரு குழந்தையை என்னவாக வளர்க்கிறோம்?