உணர்வோசை

‘அவள் அப்படித்தான்’ பட மஞ்சுவும், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் 'ரெனே'வும்..பாத்திர படைப்பின் ஒற்றுமை!

சமீபத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் திரையரங்கு வெளியீட்டின்போதே பல வித விமர்சனங்களை சந்தித்தது. கடந்த வாரத்தில் ஓடிடி தளத்தில் வெளியானபிறகு, நிறைய பேர் படத்தைப் பார்த்தனர். பல விமர்சனங்கள். கூடவே பல மீம்களும். அவற்றில் பெரும்பாலானவை, ரெனே பாத்திரம் குறித்த மீம்கள்.

‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் ரெனே பாத்திரமே பிரதானக் கதாபாத்திரம். தொடக்கக் காட்சியில் காதலன் இனியனுடன் படுக்கையில் இருக்கிறாள் ரெனே. இளையராஜா பாடலை ரசிக்காத இனியனைப் பார்த்து எள்ளலாக சிரிக்கிறாள். அவனோடு ஏற்படும் முரணாலும் அவனது சாதிய புத்தியாலும் பிரிந்து போகிறாள். பிறகு இருவரும் மீண்டும் ஒரு நாடகப் பட்டறையின்போது சந்திக்கின்றனர். அங்கு ரெனே கட்டற்ற பறவையாக உலவுகிறாள். எல்லா அரசியல் மற்றும் சமூக நிலைகள் மீதும் கருத்து கொண்ட பாத்திரமாக இருக்கிறாள். வால்பாறை மலையை காதலன் இனியன் பாத்திரம் ரசிக்கும்போது அதை நிராகரித்து தேயிலைத் தொழிலாளர்களின் கொடுமையைப் பேசுகிறாள். நாடகக் காதல் பற்றி அர்ஜுன் பாத்திரம் பேசும்போது கொந்தளிக்கிறாள். பிறகு அவனோடு உணவு உண்ணும்போது ‘பீஃப் சாப்பிடறியா’ எனக் கேட்கிறாள். அவன் தயக்கம் காட்டியதும் எள்ளலாக சிரிக்கிறாள். அனைவரிடமும் முகத்திலறைந்தார் போல பேசுகிறாள். எனினும் இனியன் மீதான காதலை ரகசியமாகக் கொண்டிருக்கிறாள்.

ரெனே பாத்திரம் கொண்டிருக்கும் நிச்சயமற்ற தன்மையை புரிந்து கொள்ள முடியாத ரசிகர்களில் பலர்தான் மீம்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ பட ரசிகர்கள், ரெனே அல்லது படத்துக்கு எதிராக விமர்சிப்பவர்கள் அனைவரும் சாதிய புத்தி கொண்டவர்கள் என்கிற முத்திரைகளை குத்திக் கொண்டிருக்கின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சரியான விமர்சனங்கள் வெளிவந்தன. அதில் ஒரு வரி விமர்சனம் ஒன்று சுவாரஸ்யம் தரக் கூடியதாக இருந்தது.

சரா சுப்ரமணியம் என்பவர் தன் முகநூல் பக்கத்தில் ‘நேர்த்தியற்ற திரைக்கதையில் கோர்த்துவிடப்பட்ட மஞ்சுதான் ரெனே’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

மஞ்சு, ‘அவள் அப்படித்தான்’ என்ற பழைய படத்தில் நடிகை ஸ்ரீப்ரியா நடித்திருந்த பாத்திரம்!

’அவள் அப்படித்தான்’ கதைப்படி அனைவரையும் எள்ளலாக பார்ப்பவள் மஞ்சு. அருண் கதாபாத்திரம் மஞ்சுவுடன் பரிச்சயமாகிறது. அருணையும் மஞ்சு நக்கலாகவே டீல் செய்கிறாள். அருண் ‘தன்னை கம்யூனிஸ்ட்’ என சொன்னதும் ‘கம்யூனிசம் பேசறது இப்போல்லாம் ஃபேஷனாயிடுச்சுல்ல’ என நக்கலடிப்பாள். அதில் காயப்படும் அருண் பதில் பேச முயலுகையில், மஞ்சு நகர்ந்து விடுவாள். பொதுவாய் அனைவரையும் நக்கலடித்து காயப்படுத்துவதே பிரதான நோக்கமாக மஞ்சுவுக்கு இருக்கும். நல்லவர், கெட்டவர் என்ற பேதம் இருக்காது.

அருணாக கமல் நடித்திருப்பார். தியாகு பாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார். ரஜினியின் பாத்திரம் ஆணாதிக்க பாத்திரம். தியாகுவின் அலுவலகத்தில்தான் மஞ்சு பணிபுரிவாள். தியாகு அவளை கொச்சையாக பேசிக் கொண்டிருப்பவன். அருணோ அவள் மீது கரிசனம் கொண்டவன். மஞ்சு மீது தியாகு கொண்டிருக்கும் பார்வையை அருண் விமர்சிப்பான். அவனோ அருணை பொருட்படுத்த மாட்டான். மஞ்சுவோ இருவரையும் ஒரே தன்மையில் வைத்து பேசிக் கொண்டிருப்பாள்.

கிட்டத்தட்ட மஞ்சு பாத்திரம்தான் ரெனேவும். இச்சமூகத்தின் அவலட்சணம் என அவள் கருதும் அனைத்தையும் பார்த்து ரெனே எள்ளல் சிரிப்பு சிரித்துக் கொண்டே இருப்பாள். ஏன் அவள் அப்படி ஆனாள் என்பதற்கான கதை மேம்போக்காக சொல்லப்பட்டிருக்கும். அக்கதை அவளை எந்தளவுக்கு பாதித்து, எப்படி இப்படியொரு பாத்திரமாக ஆக்கியது என்பதற்கான காட்சிகள் இருக்காது. ஆனால் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் மஞ்சு தன்னுடைய குடும்பம் தொடங்கி பல ஏமாற்றங்களை சந்தித்தவளாக சித்தரிக்கப்பட்டிருப்பாள். உச்சமாக ஒருவனை நம்பி காதலித்து ஏமாந்திருப்பாள். அந்த தாக்கம் அவளை எந்தளவுக்கு அகரீதியாக பாதித்திருக்கிறது என்பதை ஒரு காட்சியாகவே அமைத்திருப்பார் ருத்ரய்யா. அந்தக் காட்சி மஞ்சுவின் வலியைப் பார்வையாளனுக்கு கடத்த போதுமானதாக இருந்தது. மஞ்சுவின் கடந்த காலம் கொடுத்த அவநம்பிக்கைதான் மஞ்சுவின் சிக்கலான மனதுக்குக் காரணம் என்பதாக படம் விரியும்.

மஞ்சுவின் ஃபெமினிசம், எடுத்தெறிந்து பேசுதல், எதிலும் நம்பிக்கையற்றதன்மை எல்லாமும் ஒரு பலவீனமான காயமுற்ற மனதுக்கு போட்டுக் கொண்ட போலிக் கவசங்கள்தான் என்பதற்கான கதை வலுவாக ’அவள் அப்படித்தான்’ படத்தில் சொல்லப்பட்டிருக்கும்.

நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ரெனேவின் எள்ளலுக்கு பின் அவள் எதிர்கொண்ட இச்சமூகத்தின் சாதிய ஒடுக்குமுறை இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது நேரடியாக ரெனேவின் உளவியலில் ஏற்படுத்திய பாதிப்பு என்னவென்பதற்கான காட்சி எதுவும் இல்லை.

ரெனே பாத்திரம் கொள்ளும் அகரீதியான காயம் கதையாக விளக்கப்படாததாலும் காட்சியாக காண்பிக்கப்படாததாலும், பார்வையாளனுக்கு அவளது சிரிப்பும் பேச்சும் வெறும் வீம்பாகவும் திமிராகவும் சென்று சேர்கிறது.

’அவள் அப்படித்தான்’ பட பாத்திரப் படைப்புக்கும் ’நட்சத்திரம் நகர்கிறது’ பட பாத்திரப் படைப்புக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும் இரு படங்களுக்கும் இடையே ஒரு முக்கியமான வேற்றுமை இருக்கிறது.

மஞ்சுவின் அவநம்பிக்கையும் எள்ளலும் தனிமனிதவாதமும் அவளை உண்மையாக காதலிக்கும் அருணையும் புறக்கணிக்க வைத்து வெறுமையை எட்டும். அப்பாத்திரத்துக்கான இயல்பான அகச்சூழலும் விளைவும் அப்படியாகத்தான் இருக்க முடியும்.

ரெனே கொண்ட அவநம்பிக்கையும் எள்ளலும் தனிமனிதவாதமும் ஒரு புதுப்பாதைக்கான பேரொளியாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் காண்பிக்கப்படுகிறது. அத்தகைய அகச்சூழல் வெறுமையையே எட்டும் என்கிற யதார்த்தத்தை விட்டு படம் விலகி இருக்கிறது.

எது எப்படியோ. ‘அவள் அப்படித்தான்’ படத்தின் இறுதியில் வருவது போல,

‘மீண்டும் ஒரு முறை இறக்கிறாள். இருப்பினும் அவள் மீண்டும் பிறப்பாள். அவள் அப்படித்தான்.’

இன்று அவள் ரெனே. அவ்வளவுதான்!