உணர்வோசை

சுஷாந்த் சிங் தற்கொலையை பின்னிய சதிக் கோட்பாடுகள் : பா.ஜ.க-வின் அரசியல் சூழ்ச்சி அம்பலம்!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலையை மும்பை போலிஸ் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து மும்பை போலிஸை அவமதிக்கும் வகையில் பல ட்வீட்கள் பகிரப்பட்டுள்ளன. இந்த விசாரணை முடிவில் நம்பிக்கை வைக்காமல் சி.பி.ஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில் AIIMS மருத்துவமனையின் பிணக்கூறாய்வு அறிக்கையும் சந்தேகமே இல்லாமல் சுஷாந்த் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று உறுதிபடக் கூறியுள்ளது.

தம்மை ட்விட்டரில் தூற்றிய 80,000 கணக்குகள் போலியான முகவரிகளை கொண்டவை என்று மகாராஷ்டிரா போலிஸ் கூறி இருக்கிறது. 80-க்கும் மேற்பட்ட போலிஸார் மஹாராஷ்டிராவில் கோவிட் பாதிப்பில் கொல்லப்பட்டுள்ள நிலையில் இது எந்தளவுக்கு அவர்களை மேலும் மனச்சோர்வுக்கு உள்ளாக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. யார் இவர்கள்? இவர்கள் நோக்கமென்ன? என்பதெல்லாம் இப்போது அம்பலமாகி இருக்கிறது.

அமெரிக்காவின் பிரபலமான மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வில் சுஷாந்த் சிங் தற்கொலையில் சதி நோக்கத்தை கட்டமைத்ததில் பா.ஜ.க ஆதரவு சமூக வலைதளக் கணக்குகள் முன்னணியில் இருந்ததை அம்பலமாக்கி உள்ளனர். ரிபப்ளிக் டி.வி மற்றும் டைம்ஸ் நவ் செய்தி ஊடகங்கள் சுஷாந்த் சிங் விவகாரத்தை முக்கிய பேசு பொருளாக்கியதில் அதிக லாபம் அடைந்ததையும் அம்பலப்படுத்தி உள்ளனர்.

சுஷாந்த் சிங் விவகாரம் வட இந்திய மனங்களை ஆட்கொண்டது எப்படி?

சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட ஜூன் 14-லிருந்து இன்று வரை நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கிறார் பத்திரிகையாளர் பி.சாய்நாத். அவை காட்சி ஊடகங்களில் ஒரு சிறு அளவுக்கு கூட பேசப்படவில்லை என்கிறார். பொதுவாக வாழ்ந்து கெட்ட மனிதர்களின் வலிக்கு இரங்குவது தான் பொதுச் சமூக உளவியலாக இருக்கிறது. விவசாயிகளைப் பொறுத்த வரையில் அவர்கள் ஏற்கனவே வலியைச் சுமப்பவர்கள். அதனால் அவர்கள் சாவு பொருட்படுத்தத்தக்கதாக மாறவில்லை.

சுஷாந்த் சிங்‌ அப்படியில்லை. பீகாரை சேர்ந்த ராஜ்புத். பாலிவுட்டுக்கு புதியவர். அதற்கு முன்பு சீரியல் நடிகராக இருந்துள்ளார். பாலிவுட்டின் குழு அரசியலில் பாதிக்கப்பட்டவராக ஒரு கருத்து மக்களிடம் விதைக்கப்பட்டு, அது ஒட்டுமொத்த பாலிவுட் நடிகர் நடிகையருக்கு எதிரான கோபமாக சுஷாந்த் சிங் மற்றும் பா.ஜ.க ஆதரவாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தது, ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி இருந்த மக்களிடம் கோவிட் பற்றிய எதிர்மறையான செய்திகள் திகட்டும் அளவுக்கு பரப்பப்பட்ட நேரத்தில் அவர்களுக்கு அதிலிருந்து ஒரு விடுபடல் தேவைப்பட்டது. அதை சுஷாந்த் சிங் தற்கொலையில் புதிய கோணங்களை அன்றாடம் அவிழ்த்து விட்டதன் மூலம் ஊடகங்கள் சாதித்தன.

சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் அவருடைய மன அழுத்தமே முதலில் ஊடகங்களில் பேசப்பட்டது. திடீரென ஜூலை 5- ஆம் தேதி ரிபப்ளிக் டி.வி ஒரு கொலை கோணத்தை வெளியிட்டது.‌ அதன் பிறகு ரிபப்ளிக்கும், டைம்ஸ் நவ்வும் போட்டி போட்டுக்கொண்டு பிரச்னையை பெரிதுபடுத்தின.

ஒரு கதைக்கு பரபரப்பை அதிகரிக்க வைக்க வில்லனை கட்டமைக்க வேண்டும். அதற்கு பயன்பட்டவர் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி. ரியா மீது ஜாமினில் வர முடியாத அளவுக்கு வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. அமலாக்கத் துறை, தேசிய போதைப்பொருள் தடுப்பு இலாகா (NCB)வின் விசாரணைகள் அவர் மீது கூடுதலாக நடக்கின்றன. போதைப் பொருள்களை சுஷாந்துக்கு ரியா வழங்கினார் என்ற சந்தேகத்தை ஊடகங்கள் விவாதிக்க இந்த வழக்கு விசாரணைகள் உதவுகின்றன. போதைப் பொருள் பயன்படுத்தல் வழக்கு ஒட்டுமொத்த பாலிவுட்டையும் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங் பீகாரை சேர்ந்தவர் என்பதும், அங்கு தேர்தல் நடக்க இருப்பதும், சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் மஹாராஷ்டிராவில் என்பதால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிரான மனநிலையை பீகாரில் விதைத்து, பா.ஜ.க தேர்தலில் அறுவடை செய்யும் நோக்கில் இந்த கொலைப் பரிமாணம் ஊதிப் பெருக்கப்படுகிறது.

சுஷாந்த் சிங் எடுத்துக்கொண்ட மருத்துவம் பற்றிய முழுக்குறிப்புகளும் ரியா வசம் உள்ளதாகத் தெரிகிறது. சுஷாந்த் ஒரு உளவியல் நோயாளி. மந்தப்பித்த (Bipolar disorder) உளவியல் வாதையில் சிக்குண்டு இருந்துள்ளார். பைபோலார் வியாதி சிறிது நாட்கள் ஒருவரை உச்சக் கொண்டாட்ட மனநிலையிலும், பல நாட்கள் தீவிர மன அழுத்தத்துக்கும் ஆட்படுத்தும் ஒரு வகை வியாதி. தீவிர மன அழுத்தத்துக்கு ஆட்படும் போது நோயாளி யாரையும் பார்த்துக் கொள்ளவே விரும்ப மாட்டார். அவருக்கு உள்ளே அவர் முடங்கிக் கிடப்பார்.‌ Schizophrenia மாதிரியான இருதுருவ மனநிலை இது.

சுஷாந்த் சிங் 2012-இல் அங்கிதா எனப்படும் ஒரு சீரியல் நடிகையை காதலித்துள்ளார். இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். ஏழு வருடம் நீடித்த காதல் முறிந்து போயுள்ளது. ஒரு உறவு ஏழு வருடங்களுக்கு மேல் நீடித்த பிறகு உடையும்போது ஏற்படும் உளவியல் சிக்கல் தான் சுஷாந்தை தீவிரமாக துரத்தி உள்ளது. அங்கிதாவின் பிரிவின் ஆற்றாமையை வேறு இரண்டு பெண்களை கொண்டு இட்டு நிரப்ப முடிவு செய்துள்ளார். அதில் கடைசியாக வந்தவர் தான் ரியா. சுஷாந்தின் முழு பிரச்னையையும் ரியா உணர்ந்து வைத்து தான் பழகி உள்ளார் என்று தெரிகிறது. அவர் சுஷாந்துக்கு உதவியாகத் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் சுஷாந்தால் அவர் அடைந்த உணர்வதிர்ச்சியிலிருந்து வெளிவர முடியாமல் போயுள்ளது.

முரகாமியின் 'நார்வேஜியன் வுட்' நாவலில் கதையின் நாயகி நவோகா சிறு வயதிலிருந்தே விரும்பிக் காதலித்த கிசுகியை இழப்பாள். கிசுகி பெற்றோருடன் ஏற்பட்ட ஒரு சண்டையில் தற்கொலை செய்து கொள்வான். அவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பனாக கதையின் நாயகன் தோரு வாண்டனபே இருப்பான். தோரு எவ்வளவோ முயற்சித்தும் நவோகாவை மீட்டுக் கொண்டு வர முடியாமல் தோற்றுப் போவான்.‌ இறுதியில் மரணத்தையே தேர்ந்தெடுப்பாள் நவோகா. சில மனத் துண்டாதல்கள் மீட்க முடியாதவை.

சிக்மண்ட் ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு (psychoanalysis) முறையை ஒரு தீர்வாக முன் வைத்தார். மனம் பாதிக்கப்பட்ட நபரின் ஆழ் மனதை எழுப்பி பேச விடுவது அது. கடந்தகாலத்துக்கு அது அவரை அழைத்து சென்று தனக்கு நேர்ந்ததை தடைகளின்றி பேச வைக்கும். நோயாளிக்கு ஒரு விடுதலை உணர்வு அதன் மூலம் கிடைக்கும். இன்று உளவியல் மருத்துவம் நன்கு வளர்ந்து விட்ட சூழலில் வாழ்கிறோம். எனினும் மனித வாழ்வின் சிக்கல்களும் தீவிரமடைந்து உள்ளன. அது புதுப்புது சவால்களை தோற்றுவித்த வண்ணம் உள்ளன. இத்தகைய ஆழமான விசாரணைகளுக்கு உதவ வேண்டிய ஒரு நிகழ்வு ஊடகங்களின் கிளர்ச்சிக்கும், ஒரு கட்சியின் தேர்தல் ஆதாயத்திற்கும் பயன்படுத்தப்படுவது போன்ற துர்பாக்கியம் உலகில் எங்காவது அரங்கேறுமா?

கட்டுரையாளர் : பேராசிரியர். ராஜ் (திராவிட கோட்பாட்டு ஆதரவாளர், மொழிபெயர்ப்பாளர்)

Also Read: சுஷாந்த் சிங் மரணம் கொலையா... தற்கொலையா..? : எய்ம்ஸ் பிரேதப் பரிசோதனை மறு மதிப்பீடு அறிக்கை தாக்கல்!