murasoli thalayangam

வரலாற்றில் இல்லாத உச்சபட்ச விலையில் மின்சாரம் கொள்முதல்... நிர்மல் குமாரின் பொய்கள் : முரசொலி சீற்றம்!

மின்துறை தரும் ஷாக்!

முரசொலி தலையங்கம் (28.10.2026)

நிர்மூலம் என்றால் முழுமையான அழிவு, பாழாக்குதல், வேரோடு அழித்தல் என்கிறது அகராதி. இதைத் தான் மின் துறையில் செய்து வருகிறார் அமைச்சர் நிர்மல்குமார்.

மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் - ஆகிய ஆறு மாதங்களில் மின் துறையில் இதை மட்டும்தான் அமைச்சர் செய்துள்ளார்.எல்லாத் துறைக்கும் அத்தாரிட்டியாக தன்னைக் காட்டிக் கொண்டு, சொந்தத் துறையை பாழாக்கியது தான் அவர் செய்த, செய்து வரும் ஒரே பணியாகும்.

நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், இந்தியாவே மின் தட்டுப்பாட்டில்தான் இருக்கிறது'என்று திருவாய் மலர்ந்துள்ளார்.' மின் தட்டுப்பாட்டால் அனைத்து மாநிலங்களும் பாதிப்பு அடைந்துள்ளன' என்றும் சொல்லி இருக்கிறார். 'மின்சாரத் தேவையை ஒன்றிய அரசு கணிக்கத்தவறியதால் தான் மின் தயாரிப்புக்கு அதிகமான செலவு ஆகிறது'என்ற அதிசயத் தகவலையும் நிர்மல்குமார் ஆறாவது மாதம் கண்டுபிடித்திருக்கிறார்.

அதாவது மொத்தத்தில் புதிய காரணங்களைத்தான் அடுக்கி இருக்கிறார்.ஆறு மாதமாக அவர் சொல்லி வந்த பொய்கள் வண்டி வண்டியாக இருக்கிறது. நிலக்கரியை ஏற்றுமதி செய்வதைப் போல இதையும் ஏற்றுமதி செய்யலாம். தி.மு.க.வினரால் மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது, மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒரு சில ஊழியர்களால் திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுகிறது, பியூஸ் கட்டையைத் திருடிச் சென்று விடுவதால் மின்வெட்டு ஏற்படுகிறது,பி.எஸ்.என்.எல்.

கேபிள் பணிக்களுக்காக தோண்டுவதால் மின் வெட்டு ஏற்படுகிறது - இவை அனைத்தும் அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன பொய்கள்.

“காற்று அடிப்பது குறைவாக இருக்கிறது. அதனால் காற்றாலை மின்சாரம் கிடைக்கவில்லை”- என்று காற்றையே குறை சொன்னார் அமைச்சர்செங்கோட்டையன். “மழை குறைந்ததால் தண்ணீரில் இருந்து வரும் மின்சாரம்குறைந்திருக்கிறது. காற்று நின்று போனதால் அந்த மின்சாரமும் கிடைக்க வில்லை”- என்று மழையையும் காற்றையும் சேர்த்துக் குறை சொன்னார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. இந்த வரிசையில் இப்போது, 'இந்தியாவே இப்படித்தான் இருக்கிறது'என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்.

இந்தியாவே இருட்டில் இருக்கிறது என்கிறாரா அமைச்சர்? இனி இருட்டு தான் நிரந்தரமாக இருக்கப் போகிறது என்கிறாரா?

ஒரு துறையைக் கொடுத்தால் அந்த துறை ரீதியாக மக்கள் நலனைக் கவனிக்க வேண்டியதுதான் அமைச்சரின் வேலை. அதைச் செய்தாரா நிர்மல்குமார்? மக்களின் மின் தேவையைக் கணித்தாரா? பொதுவாக மின் தேவை என்ன? கோடைகாலத்துக்கான தேவை என்ன? எனத் திட்டமிட்டாரா? எதுவுமில்லை.

மாநிலத்தின் மின் தேவை என்ன என்பதாவது அமைச்சருக்குத் தெரியுமா? அதற்காக புதிய மின் திட்டம் ஏதாவது திட்டமிடப்பட்டதா? மின் உற்பத்தி நிலையங்களை நவீனப்படுத்துவதற்கான செயல்கள் என்ன செய்யப்பட்டன? ஏற்கனவே இருக்- கும் மின் உற்பத்தி நிலையங்களின் கோளாறுகள் களையப்பட்டதா? அதற்கான முயற்சிகள் ஏதாவது எடுக்கப்பட்டதா?

மின் தேவை அதிகரிக்கும் பகுதிகளில் புதிய உற்பத்தி அலகுகளைஅமைக்க திட்டங்கள் ஏதாவது தீட்டப்பட்டதா? மின் உற்பத்தியானது அவசர,அவசிய நோக்கத்தோடு கண்காணிக்கப்பட்டதா? இது எதுவுமில்லை.

வெளிச்சந்தையில் மின்சாரம் எவ்வளவு கொள்முதல் செய்யலாம்? வெளிச்சந்தை எந்தளவுக்கு தமிழ்நாட்டு மக்களின் தேவையை நிறைவேற்றும் என்ற திட்டமிடுதலாவது இருந்ததா? அதுவும் இல்லை. வெளிச்சந்தை கொள்முதலில் வெளிப்படைத் தன்மை இருந்ததா? அதுவும் இல்லை.

இந்தியாவிலேயே மிகமிக அதிகமான விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டு மாட்டிக் கொண்டது விஜய் அரசு. 'யூனிட்டுக்கு 35 ரூபாய்... யூனிட்டுக்கு 35 ரூபாய் என்று பாடலாமா?' என்று கேட்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

வெளிச்சந்தை மின்சாரக் கொள்முதலில் வெளிப்படையாக மாட்டிக் கொண்டதும், கொஞ்சம் தான் வாங்கப் போகிறோம்'என்றார் நிர்மல்.'குறுகிய கால ஒப்பந்தம் தான்' என்றார் நிர்மல். 'ரூ 35 உச்சபட்ச மின் கொள்முதல் நிறுத்தப்பட்டு விட்- டது'என்று சொல்கிறார் அமைச்சர். அவரே உச்சபட்ச கொள்முதல் என்று சொல்லிக் கொள்கிறார். யூனிட் ரூ. 35 என்பது கொள்ளைவிலை என்று அவருக்குத் தெரியாதா? தெரிந்தே திட்டமிட்டு செய்தாரா?

பொதுவெளியில் இதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும், 'அது நிறுத்தப்பட்டு விட்டது'என்கிறார். ஒருவேளை யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், ரூ. 35 க்குத் தான் மொத்த யூனிட்டையும் கொள்முதல் செய்திருப்பார்களா? ரூ.35 க்கு வாங்குவதற்காகத் தான் திட்டமிட்டு இந்த மின் தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

கடந்த ஒருவார காலமாக வெளிச்சந்தையில் மின் கொள்முதல் செய்ய நீண்ட கால ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறதே? ஆறு மாத காலமாக என்ன செய்து கொண்டு இருந்தது த.வெ.க. அரசு? அதன் அமைச்சரும், முதலமைச்சரும்? முதலமைச்சரின் தொகுதி உள்பட பல பகுதிகளில் பல இரவுகளாக மின்சாரம் இல்லை. மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என்று தெரியாது. அதற்கான பதிலும் கிடையாது. மின் கட்டணத்தை எடுத்துக் கொண்டால் பலருக்கும் ஷாக் அடிக்கும் அளவுக்கு வந்து கொண்டு இருக்கிறது. பலருக்கும் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு வருகிறது.

‘கடந்த முறை ரூ.7 ஆயிரம் வந்தது, இந்த முறை ரூ.29 ஆயிரம் வந்துள்ளது' என்று ஒரு பெண் சமூக வலைத்தளத்தில் காட்டுகிறார். 'ஒரு லைட், ஒரு ஃபேன்.. வைத்துள்ள எனக்கு ரூ.2000 வந்துள்ளது' என்று ஒரு பெண் கதறுகிறார். '60 நாட்களுக்குள் மீட்டர் எடுக்க வரவில்லை' என்கிறார் இன்னொருவர். இதுபோல நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இணையத்தளத்தில் பரவிக் கிடக்கிறது. ஆனால் இது எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஒரு ஆட்சி இருக்க முடியும் என்றால் அது விஜய் ஆட்சியாகத்தான் இருக்க முடியும்.

Also Read: SIR குளறுபடிகளை எப்போதுசரி செய்யப் போகிறீர்கள்? SSR குழப்பம் இல்லாமல் எப்படி நடைபெறும்? : முரசொலி!