murasoli thalayangam

த.வெ.க அரசாங்கத்தின் அராஜகம் ; விஜய் சர்க்கார், போலீஸ் சர்க்கார் - முரசொலி விமர்சனம்!

முரசொலி தலையங்கம் (24-10-2026)

விஜய் சர்க்கார், போலீஸ் சர்க்கார்!

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகாவை அராஜகமாகக் கைது செய்துள்ளது விஜய் அரசாங்கம். ‘’நான் எந்தத் தவறும் செய்யவில்லை. பிரச்சாரத்தின் கடைசி தினத்தன்று முதலமைச்சர் விஜய்க்கு மட்டும்தான் வாக்குச் சேகரிக்க உரிமை உள்ளதா? இரவு உடையில், நைட்டியுடன் என்னை கைது செய்துள்ளனர். நாங்கள் என்ன போதைப்பொருள் கடத்தினோமா?’’ என்று ஊடகங்களின் முன்னால் கார்த்திகா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இது தனிப்பட்ட கார்த்திகாவுக்கு மட்டும் நடக்கும் கொடூரம் அல்ல. விஜய் ஆட்சி அமைத்தது முதல் அவரது ஆட்சிக்கு, கட்சிக்கு எதிராகச் செயல்படும் அனைவரும் எதிர்கொள்ளும் நெருக்கடி ஆகும். ஜனநாயக வழியில் போராடும் அனைவரும் எதிர்கொள்ளும் நெருக்கடி ஆகும்.

வாக்குத் திருட்டுக்கு எதிராக சென்னையில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர், இளைஞர் அமைப்பினரைக் கூட விஜய் அரசு விட்டு வைக்கவில்லை. அராஜகமாகக் கைது செய்துள்ளது.

வாக்குத்திருட்டுக்கு எதிராகவும், டெல்லியில் இது தொடர்பாக போராடி வருவோருக்கு ஆதரவாகவும், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடைபெற்றது. எஸ்.எஃப்.ஐ., ஏ.ஐ.எஸ்.எஃப்., ஏ.ஐ.ஒய்.எஃப். உள்ளிட்ட 9 மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று, 24 மணி நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். வாக்குரிமை பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியும், ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என வலியுறுத்தியும் பல்வேறு பதாகைகளை ஏந்தி, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினரை விஜய் அரசு அராஜகமாகக் கைது செய்துள்ளது. சாதாரணமாகப் போராடும் உரிமைகூட தடுக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் 20 முக்கியமான கோரிக்கைகளை வைத்துப் போராட்டம் நடத்திய செவிலியர்களை பெண்கள் என்றும் பாராமல் அராஜகம் செய்தது விஜய் போலீஸ்.

ஆயிரக்கணக்கான செவிலியர்கள் காலை முதலே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்துவதற்காக முறையான அனுமதி பெற்றும் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை போன்ற வசதிகளைக் கூட தங்களுக்குச் செய்து தரவில்லை எனக் குற்றம்சாட்டிய செவிலியர்கள், தங்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்க, அழைத்துப் பேசக் கூட மனமில்லாமல் த.வெ.க. அரசு வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம்சாட்டினர். இந்நிலையில், செவிலியர்களின் போராட்டம் மாலை நேரத்திலும் தொடர்ந்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இரவோடு இரவாக செவிலியர் சங்க நிர்வாகிகள் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர்.

போராட்டக் களத்தில் இருந்த பந்தல்களை அகற்றி, மின் இணைப்புகளையும் துண்டித்து போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகும் செல்போன் வெளிச்சத்தில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் செவிலியர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர் இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போராட்டக்களம் போர்க்களமாக மாறியது. இதில் செவிலியர்கள் பலர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகூட தராமல் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். சாலை மறியலில் போய் முடிந்தது இந்தப் போராட்டம்.

இதே போல்தான் தூய்மைப் பணியாளர் போராட்டத்தையும் போலீஸை வைத்து ஒடுக்கியது விஜய் அரசு. போராடியவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள். பேருந்துகளில் ஏற்றி வேறு இடங்களில் கொண்டு போய் விட்டார்கள். போலீஸாருடன் வர மறுத்தவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தார்கள். போலீஸை அளவுக்கு அதிகமாகக் குவித்து மிரட்டினார்கள்.

விஜய் பெரம்பூரில் போட்டியிட்டவர் என்பதால் அவரது அலுவலகத்தையே முற்றுகையிட்டார்கள் தூய்மைப் பணியாளர்கள். அவர்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தது காவல் துறை.

பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் மேம்பாட்டுச் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 12ஆம் தேதி சென்னையில் அமைதி வழி உண்ணாவிரதம் இருக்கத் திட்டமிட்டனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னை வந்தனர். சென்னைக்குக் கிளம்பியவர்களை உள்ளூரில் கைது செய்தது காவல் துறை. சென்னைக்கு வந்து இறங்கியவர்கள் கைது செய்யப்பட்டார்கள். உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு வந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

காவல் துறையைப் பார்த்து கலைந்தவர்களையும் விரட்டிச் சென்று கைது செய்தார்கள். அருகில் இருந்த கழிவறைக்குச் சென்ற பணியாளர்களையும் கழிவறைக்குள் சென்று போலீஸ் கைது செய்தது. இவை அனைத்தும் கடந்த ஒரு மாதத்தில் நடந்தவை ஆகும்.

தூய்மைப்பணியாளர் போராட்டம், செவிலியர் போராட்டம், மருத்துவப்பணியாளர் போராட்டம், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் ஆகிய அனைத்தையும் போலீஸ் வைத்து ஒடுக்கி இருக்கிறது விஜய் அரசு. காவல் துறையையே அவர்தானே வைத்துள்ளார். மக்களை ஒடுக்கவே போலீஸைப் பயன்படுத்துகிறார் விஜய்.

‘விஜய்யை நம்பி வோட்டுப் போட்ட எங்களுக்கு இந்த தண்டனையா?’ என்று இப்போராட்டங்களில் பங்கெடுத்த மக்கள் பேட்டி அளிப்பதைப் பார்க்கும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது. தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு தண்டனையை மட்டுமே தந்து கொண்டுள்ளார் விஜய்.

விஜய் சர்க்கார், ஒட்டுமொத்தமாக போலீஸ் சர்க்காராகவே இருக்கிறது.

Also Read: தூயசக்தி விஜய் ஏன் மெளனமாக இருக்கிறார்? : போதைக் கும்பலுக்கு துணிச்சலைக் கொடுத்தது யார்? - முரசொலி!