murasoli thalayangam

த.வெ.க-வின் பொய் - ஒரே ஒரு பேட்டியில் காலி ; திட்டுவதில் இருக்கும் ஆர்வம், திட்டங்களில் இருக்கட்டும்!

முரசொலி தலையங்கம் (22.10.2026)

திட்டங்களைக் கவனியுங்கள்!

சென்னையில் மழை காரணமாக தண்ணீர் தேங்கி இருக்கும் சில இடங்களில் நின்று கொண்டு, 'தி.மு.க. செலவு செய்ததாகச் சொன்ன 4 ஆயிரம் கோடி எங்கே?' என்று ரீல்ஸ் எடுத்து போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் த.வெ.க.வின் பொய்யர்கள்.

இந்த அத்தனை வீடியோக்களையும் ஒரே ஒரு பேட்டியில் காலி செய்து விட்டார் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஐ.ஏ.எஸ். "சென்னையில் 2021-ஆம் ஆண்டுக்கு முன்பு தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களாக 700 இடங்கள் இருந்தது. அது இப்போது 291 ஆக குறைந்துள்ளது” என்று சொல்லி இருக்கிறார். அப்படியானால் என்ன பொருள் ? 400 இடங்கள் தண்ணீர் தேங்கவிடாமல், தண்ணீர் தேங்காத இடங்களாக மாற்றப்பட்டுள்ளது என்று தான் பொருள். இதுதான் 2021-26 ஆட்சிக் காலத்தில் 'திராவிட மாடல்' அரசின் சாதனை ஆகும்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 6,495 கோடி மதிப்பீட்டில் 1.422.28 கி.மீ. நீளத்திற்கு புதியதாக மழைநீர் வடிகால் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் ரூ.4,309.30 கோடி மதிப்பீட்டில் 1,076 கி.மீ. நீளத்திற்கு பணி- கள் முடித்து வழங்கியது தான் 'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனை ஆகும்.

ரூ.58.33 கோடி மதிப்பில் கடப்பாக்கம் ஏரி சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 60 நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகள் ரூ.91.04 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் ரூ.47.23 கோடி மதிப்பில் 37 நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டது. 23 நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு புதிய முயற்சியாக. நீர்வழிக் கால்வாய்களில் வெள்ளத் தடுப்புச் சுவரின் உயரத்தை உயர்த்தி அமைத்து அதன் கொள்ளளவை அதிகப்படுத்தி, பொதுமக்கள் கால்வாய்களில் குப்பைகளை எறியாத வண்ணம், சங்கிலித் தொடர் இணைப்பு வேலி அமைக்கும் பணி தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்டது. 37 நீர்வழிக் கால்வாய்களில் ரூ.196 கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

நிலத்தடி நீர் மீள் நிரப்புத் திறனை அதிகரிப்பதற்கும் வெள்ளத்தைக் குறைப்பதற்கும் நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத் தீர்வு காண ரூ.22.36 கோடியில் 770 இடங்களில் சுற்றுச்சூழல் தொகுதிகள் (Eco Block) அடிப்படையிலான 500 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன.

கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் தொகுதிகள் அடிப்படையிலான 365 மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ரூ.3.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டன.

கோவளம் வடிநிலப்பகுதியில் 35 இடங்களில் சுற்றுச்சூழல் தொகுதிகள் அடிப்படையிலான மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன.

மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வந்ததும் ‘திராவிட மாடல்' அரசுதான்.

கோவளம் வடிநிலப் பணிகள், கொசஸ்தலையாறு வடிநிலப் பணிகள், டிரஸ்ட்புரம் கால்வாய்ப் பணிகள், கடப்பாக்கம் ஏரி மேம்பாடு, அடையாறு ஆற்றுப் புனரமைப்பு, ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்கள் புனர- மைப்பு, தூர்வாரும் பணிகள் ஆகியவற்றைச் செய்ததும் 'திராவிட மாடல்' அரசு தான்.

ரூ.2,359,73 கோடி மதிப்பில் 3,455.44 கி.மீ. நீளத்திற்கு 19,849 சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகள் முடிக்கப்பட்டன.196.71 கி.மீ. நீளத்திற்கு 1,315 சாலைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன..

தி.மு.க. ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு பல்வேறு ஆதாரங்களை அடுக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இவை அனைத்துக்கும் மேலாக தலைநகர் சென்னைக்காக 'சென்னை - சூப்பர் 6' வாக்குறுதிகளை அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அப்போது அறிவித்தார்கள்.

அனைத்து வசதிகளையும் செய்து தருவோம், சிறப்பான போக்குவரத்தை வழங்குவோம், உட்கட்டமைப்புத் திட்டங்களை உரிய காலத்தில் முடிப்போம், விலங்குகளின் தொல்லைகளில் இருந்து காப்போம், உலகளாவிய சிறப்பு மையம் உருவாக்குவோம், உலகளாவிய திறமை மையமாக சென்னையை உருவாக்குவோம் என்று உறுதி அளித்தார்கள்.

அதில் மிக மிக முக்கியமானது -

பாதாளச்சாக்கடைத் திட்டம் 2027 ஆம் ஆண்டுக்குள் முடியும். மழை நீர் வடிகால் பணிகள் 2028 ஆம் ஆண்டுக்குள் முடியும் - என்பது ஆகும். ஆட்சி தொடர்ந்து இருந்தால் இப்பணிகள் முறையாக நடைபெற்றிருக்கக் கூடும். ஆனால் த.வெ.க. ஆட்சி இப்பணிகளைத் தொடர்கிறதா? என்பதுதான் நம்முடைய கேள்வி.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் ஏதாவது காரணத்தைச் சொல்லி முடக்கி வைத்துள்ளது த.வெ.க. அரசு. இதனால் பாதிக்கப்படப் போவது மக்கள் தான். அதாவது, திட்டங்களை முடக்கி மக்களது நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது த.வெ.க. அரசு.

கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளை முறையாகச் செய்து, முழுமையாக முடித்துக் கொடுத்தாலே போதும். அதை த.வெ.க. அரசு செய்ய வேண்டும்.

திட்டங்கள் தீட்டி, பணத்தையும் ஒதுக்கி, பாதியளவுக்கும் மேல் முடிக்கப்பட்ட பணிகளைத் தொடர்ந்து செய்து முடிப்பதில் த.வெ.க. அரசு கவனத்தைச் செலுத்த வேண்டுமே தவிர, தி.மு.க. வுக்கு எதிராக ரீல்ஸ் போட்டு காலத்தைக் கடத்தக் கூடாது.

திட்டுவதில் இருக்கும் ஆர்வம், திட்டங்களில் இருக்கட்டும்

Also Read: மூடர் கூட்டத்துக்கு யார் வகுப்பு எடுப்பது? : த.வெ.க அரசுக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!