murasoli thalayangam

“இவர்களுக்கு எல்லாம் மூளை இருக்கிறதா?” : மாணிக்கம் தாகூர், ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய முரசொலி!

கடந்த கால வரலாறு எதுவும் தெரியாமல், புரியாமல், அறியாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள் மாணிக்கம் தாகூரும், ஆதவ் அர்ஜுனாவும் என முரசொலி தலையங்கத்தில் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து “எஸ்.ஐ.ஆருக்கு எதிராக எத்தனை போராட்டங்கள்....?” என்ற தலைப்பில் முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு.

மாணிக்கம் தாகூரும், ஆதவ் அர்ஜுனாவும் வந்து அரசியல் பாடம் எடுக்கும் அளவுக்கு தமிழ்நாடு தரம் தாழ்ந்துவிட்டதை நினைத்துத்தான் வேதனையாக இருக்கிறது.

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக ஏன் போராடவில்லை தி.மு.க. என்று கேட்கிறார் மாணிக்கம் தாகூர். ‘எஸ்.ஐ.ஆரை நடத்தியதே தி.மு.க. தான், என்கிறார் ஆதவ் அர்ஜுனா. இவர்கள் எல்லாம் இதற்கு முன்னால் எங்கு இருந்தார்கள் என்று கேட்பதை விட இவர்களுக்கு எல்லாம் மூளை என்ற ஒன்றே இருக்கிறதா என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

"கடந்த மார்ச் மாத தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுக்க வலியுறுத்துகிறோம். ஞானேஷ் குமார் அவர்கள் உடனடியாகப் பதவியில் இருந்து விலக வேண்டும். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்." என்று தி.மு.க. தலைவர் மிகத் தெளிவாகக் கொடுத்த அறிக்கை காங்கிரஸ் கட்சிக்கும், த.வெ.க.வுக்கும் புரியவில்லையா?

‘வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம்’ என்ற பெயரால் எடுக்கப்படும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை மிகத் தீவிரமாகக் கண்காணிக்கச் சொன்ன இயக்கமே திராவிட முன்னேற்றக் கழகம்தான். அத்தகைய நடவடிக்கையை தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் எடுப்பதற்கு முன்னதாக பல்வேறு மாநிலங்களில் செய்யப்பட்டது. அப்போதே அதை எதிர்த்த இயக்கம் தி.மு.க.

2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இப்பணிகளை தமிழ்நாட்டில் தொடங்கியது தேர்தல் ஆணையம். அப்போது தி.மு.க. ஆட்சியில் இருந்தது. ‘வாக்காளர் பட்டியலில் சீர்திருத்தம் என்றால் அவசர அவசரமாகச் செய்யக் கூடாது’ என்று அன்றே கண்டித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ‘மழைக்காலத்தில் அவசர அவசரமாகச் செய்தால் ஏராளமான வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்படாது, நீக்கப்பட்டு விடும்’ என்று சொன்னவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். இதற்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக நவம்பர் 2 ஆம் தேதியன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. 46 கட்சிகள் அதில் கலந்து கொண்டன. அப்போதெல்லாம் மாணிக்கம் தாகூர் டெல்லியில் என்ன செய்து கொண்டு இருந்தாரோ?

அன்றைக்கு விஜய் கட்சி என்ன செய்து கொண்டு இருந்தது? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அந்தக் கட்சிதான் இன்று ஆட்சியில் இருக்கிறது. எஸ்.ஐ.ஆர். எல்லாம் முடிந்த பிறகு அதை எதிர்ப்பதாக நாடகம் ஆடுகிறது விஜய் கட்சி.

அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்தான் எஸ்.ஐ.ஆர். உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

‘‘தேர்தல் ஆணையம் இந்தக் கருத்துக்களை ஏற்காவிடின், தமிழ்நாட்டு வாக்காளர்கள் அனைவரின் வாக்குரிமையையும் நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்ற தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தனித்தனியே / ஒருங்கிணைந்த உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்வது எனவும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானிக்கிறது. என்பதுதான் அன்று எடுக்கப்பட்ட தீர்மானம். வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

எஸ்.ஐ.ஆர். தமிழ்நாட்டில் அதைச் செய்யக் கூடாது, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகச் செய்யவே கூடாது என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் சொன்னபோது தி.மு.க. கூட்டணியில் இருந்தவர்கள்தான் இன்று த.வெ.க. ஆட்சியைத் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கக்கூடிய கட்சிகள். அணி மாறியதால் கடந்த கால வரலாறு மாறி விடுமா?

2025 நவம்பர் 11 தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது மறந்து விட்டதா?

அதை மீறியும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளில் தீவிரமாக இருந்தது தேர்தல் ஆணையம். அப்படி நடத்தப்படும் வாக்காளர் சேர்ப்பு – நீக்க நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் தி.மு.க.தான். வாக்காளர்களைத் திட்டமிட்டு நீக்கி இருந்தால் அவர்களை உடனடியாக சேர்க்க வேண்டும் என்று தி.மு.க.வின் பூத ஏஜெண்டுகளுக்கு தி.மு.க. தலைமை கட்டளையிட்டது.

இந்தக் கடந்த கால வரலாறு எதுவும் தெரியாமல், புரியாமல், அறியாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள் மாணிக்கம் தாகூரும், ஆதவ் அர்ஜுனாவும்.

‘இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை நீக்கும் கோரிக்கை திசை திருப்பும் தந்திரம்’ என்று சொன்னவர் அமைச்சர் ராஜ்மோகன். இப்படிச் சொன்னவர், ஞானேஷ் குமாரை விமர்சிக்கும் ஆர்ப்பாட்டத்தில் எப்படி கலந்து கொண்டார்? திசை திருப்பவா? மாநிலம் முழுக்க பல்வேறு பிரச்சினைகளுக்காக த.வெ.க. அரசு மீது மக்கள் கொந்தளித்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் இருந்து திசை திருப்புவதற்காக ஞானேஷ்குமாருக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதா த.வெ.க.? அதுதானே உண்மை?

எஸ்.ஐ.ஆருக்கு எதிரானது த.வெ.க. ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்பது உண்மையான நோக்கமாக இருந்தால் அதற்கு எதிரான போராட்டங்களை தமிழ்நாட்டில் எதற்காக ஒடுக்குகிறீர்கள்? போராடுபவர்கள் எதற்காக அடிக்கிறீர்கள்? உதிக்கிறீர்கள்? கைது செய்கிறீர்கள்? அனைவரும் அமைதி வழியில், ஜனநாயகப்பூர்வமாகத் தானே போராடுகிறார்கள்? அதனை ஒடுக்குவதற்கு என்ன காரணம்? பா.ஜ.க.வை மகிழ்ச்சிப்படுத்திய மக்களை அடித்து உதைக்கிறது த.வெ.க. அரசு.

காங்கிரஸின் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுக்காக அவர்கள் நடத்தும் கூட்டத்துக்குப் போய் உட்கார்ந்து கொள்கிறது த.வெ.க. சந்தர்ப்பவாதத்தையும் இவ்வளவு சந்தோஷமாக எந்தக் கட்சியும் இதுவரை செய்யவில்லை. விஜய்தான் இதிலும் முதல்.” எனத் தெரிவித்துள்ளது.

Also Read: உணவுப் பொருட்களின் விலை உயர்வில் தமிழ்நாடு முதலிடம்! - தவெக-வின் தோல்வி நிர்வாகத்திற்கு முரசொலி கண்டனம்!