murasoli thalayangam
‘கரூர் கொடுந்துயரத்தின் ஒராண்டு நிறைவு.. மனிதத் தன்மையற்ற விஜய்’ : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
முரசொலி தலையங்கம்!
29.09.2026
கருணையவற்றரின் ஓராண்டு!
நடிகர் என்பதற்காக, சினிமா மோகத்தால் கூடிய கூட்டத்தை ஏழு மணி நேரம் சோறு தண்ணீர் இல்லாமல் காக்க வைத்து - 41 உயிர்களை மரணக் குழியில் விஜய் தள்ளி ஒராண்டு காலம் ஆகிவிட்டது!
தன் கண்ணுக்கு முன்னால் உயிர்கள் ஒவ்வொன்றாகச் செத்து விழ விழ - அது பற்றிய எந்த இரக்கமும் இல்லாமல் பாட்டுப் பாடிக் கொண்டு இருந்த காட்சி நடந்து ஒராண்டு காலம் கடந்து விட்டது!
ஒவ்வொரு உயிராக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள் என்று தெரிந்தும் கரூரை விட்டு விஜய் ஒடி வந்து ஒராண்டு ஆகிவிட்டது!
கரூரிலோ, திருச்சியிலோ, சென்னையிலோ நிருபர்களைச் சந்தித்து - இரங்கலைக் கூடத் தெரிவிக்காமல் வீட்டுக்குள் பதுங்கினார் விஜய்.
ஒருவார காலம் அவரை ஆளையே காணோம். ஏதோ ஒரு வீடியோ போட்டு பதுங்கிக் கொண்டார். அவரைச் சுற்றி இருக்கும் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோரும் தலைமறைவு ஆனார்கள். இறந்தவர்கள் வீட்டுக்கு இவர்களும் போகவில்லை. இவர்களது கட்சிக்காரர்களும் செல்லவில்லை. மூச்சுத்திணறலிலும், கூட்டத்தில் மிதிபட்டும் பலர் பல நாட்களாக மருத்துவமனையில் இருந்தார்கள். அவர்களையும் இவர்கள் போய் பார்க்கவில்லை.
இறந்தவர் குடும்பத்தை சென்னைக்கு அழைத்து வந்து, உணவு விடுதியில் தங்க வைத்து, அவர்களைத் தனித்தனியாக சந்திக்க வைத்து, வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு அனுப்பி வைத்தார் விஜய். உலகத்திலேயே சோகம் விழுந்தவர் உறவுகளை ஹோட்டலுக்கு வர வைத்து பார்த்து, வீடியோ எடுத்துக் கொண்ட இரக்கமற்றவர் விஜய் மட்டும்தான்.
மதியம் 12 மணிக்கு வருவதாகச் சொன்னவர், இரவு 7.30 மணிக்குத் தான் கரூருக்கு வந்தார். ஒன்பது மணியில் இருந்தே கூட்டம் கூடி நின்றது. பலரும் காலையிலும் சாப்பிடவில்லை, மதியமும் சாப்பிடவில்லை. தண்ணீர் ஏற்பாடு கூட விஜய் கட்- சிக்காரர்களால் செய்யப்படவில்லை. வேண்டுமென்றே தாமதம் செய்து விஜய் வந்தார். தான் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்துக்கான ஷூட்டிங் காட்சியாக மக்கள் காத்திருப்பது, அலைமோதுவது, கொந்தளிப்பது என்ற காட்சிகளை எடுக்க நினைத்தார் விஜய். இறுதியில் அது கொலைக்களமாகவே மாறியது. கொன்று காட்சிகள் எடுக்கும் அளவுக்கு மரத்துப் போய்விட்டது மனிதம்.
அன்றைய தினம் விஜய் என்ன பேசினார்? “நான் இங்கு எப்படி வந்தேன் என்றே தெரியவில்லை. இதற்காக காவல் துறையினருக்கு நன்றி கூறுகிறேன்” என்று தான் பேசினார். (29.9.2025 தினத்தந்தி)
“விஜய் அங்கு மதியம் 12 மணிக்குப் பேசுவார் என்று த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டதால் அவரைப் பார்க்க காலை முதலே ஏராளமானோர் குவிந்துவிட்டனர். பல மணிநேரம் தண்ணீர் குடிக்காமல், உணவு அருந்தாமல் காத்திருந்த அந்தப் பெருங்கூட்டம் களைப்பால் துவண்டு போயிருந்த நிலையில் இரவு 7 மணிக்கு தான் விஜய் வந்தார்” என்று “தினத்தந்தி' நாளிதழ் ( 29.9.2025) தலையங்கம் தீட்டியது. எனவே விஜய்யும் அவரது கட்சிக்காரர்களும் சொல்வது முழுப்பொய் என்பதை பழைய நாளிதழ்களே சொல்லும்.
“கரூர் சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள், பலியான நிலையில் அக்கட்சித்தொண்டர்களை, ரசிகர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு ஓடிய த. வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தலைமைப் பண்பு இல்லை. அவர்கள் சம்பவத்துக்குப் பொறுப்பேற்கவும் இல்லை. த.வெ.க. தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது. கரூர் விபத்து மனிதரால் உருவாக்கப்பட்ட பேரழிவு” என்று கடுமையான சொற்களால் குறிப்பிட்டார் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் செந்தில்குமார்.
நடந்து விட்ட தவறுக்கு வருந்தும் துளி இரக்கமும் அவருக்கு இல்லை. அன்று ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசைப் பழி போட மட்டுமே விஜய் துடித்தார். தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால் தன் மீதான தவறுகள் அம்பலம் ஆகும் என்று நினைத்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஓடினார் விஜய்.இப்போதும் சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்குள் தான் இருக்கிறார் விஜய்.
சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக ஊர் ஊராகப் போனார் விஜய். கரூருக்குப் போகவில்லை. தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் கரூருக்குப் போயிருக்க வேண்டும். தன் மீது தவறு இல்லை, தி.மு.க. அரசு மீதுதான் தவறு என்றால் அதையே அரசியல் ஆக்க கரூரில் இருந்து பயணத்தைத் தொடங்கி இருப்பார். குற்றவாளி தான் தான் என்பதால் குறுகுறுத்தது மனசு. அதனால் அவர் கரூர் பக்கமே போகவில்லை.
ஆட்சிக்கு வந்த பிறகும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே விஜய் துடித்தார். கரூர் கொடூரத்தை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தால் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட காவல் துறை அதிகாரி ஆஸ்ரா கர்க்கை தனது ஆட்சியின் உளவுத் துறை அதிகாரியாக நியமித்துக் கொண்டார் முதலமைச்சர் விஜய்.
ஆட்சிக்கு வந்ததும் கரூர் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட காவலர்கள் 19 பேரை இடமாற்றம் செய்தார் விஜய். முதலில் வேறு காவல் நிலையத் துக்கு மாற்றினார். அதன்பிறகு வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றினார்.
பா.ஜ.க.வைப் பார்த்து பம்மி, பதுங்கிக் கொண்டிருக்கிறார் விஜய். என்ன காரணம்? சி.பி.ஐ. வழக்கில் எப்போது வேண்டுமானாலும் அவர் பெயர் சேர்க்கப்படும் என்பதால் தான்.
இவை அனைத்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே தவிர, துளிகூட இறந்தவர் குடும்பத்துக்கு நீதி சொல்ல அல்ல. நடந்த கொடூரத்துக்கு அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.
இது தொடர்பானஅனைத்து விசாரணைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தந்திருக்க வேண்டும். இறந்தவர் குடும்பத்தை முழுமையாகத் தத்து எடுத்திருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திருக்க வேண்டும். இதுபோன்ற மனிதத் தன்மையை விஜய் போன்றவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
கரூர் சம்பவம் செப்டம்பர் 27-இல் நடந்தது. இரண்டே மாதத்தில் டிசம்பர் 27 அன்று மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. கோலாலம்பூரில் குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தவர் தான் விஜய். அவரிடம் எதை எதிர்பார்ப்பது? அவருக்கு அனைத்துமே ஸீன்கள் மட்டுமே!
Also Read
-
“ஊரான் வீட்டு நெய்யில் காராபூந்தி சுடுகிறார் விஜய்” : தாராபுரத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!
-
தமிழ்நாட்டில் கூடுதல் ரயில் சேவைகள் : தயாநிதி மாறன் எம்.பி. எழுதிய கடிதத்திற்கு ஒன்றிய அரசு பதில்!
-
“ஜனநாயகத்தை நிலைநாட்ட கழகம் களமிறங்கியுள்ளது” : தாராபுரம் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி MP பேச்சு!
-
ஜெம் வீரமணி வழக்கில் திமுக மீது அவதூறு.. முதல்வர், அமைச்சர்கள் மீது SIT-யில் டி.ஆர்.பாலு எம்.பி புகார்!
-
‘சொல்லிக்கொள்ள சாதனை இல்லை.. வடிப்பதோ கிளிசரின் கண்ணீர்’ : முதலமைச்சர் விஜய் மீது முரசொலி தாக்கு!