murasoli thalayangam

3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!

முரசொலி தலையங்கம் (16-09-2026)

கையாலாகாத உதவாக்கரை அரசு!

மூன்று நாள் விடுமுறை என்பது முன்கூட்டியே எப்போதோ தெரியும். வெளியூருக்கு மக்கள் அதிகம் செல்வார்கள் என்பதையும் அரசாங்கம் அறியும். அதற்கேற்ப பேருந்துகளை அதிகப்படுத்தி விட வேண்டும் என்ற அறிவே இல்லை த.வெ.க. அரசுக்கு.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையமே அவதிக்கு உள்ளாகியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பல மணி நேரமாக பேருந்துகள் கிடைக்காமல் திணறினார்கள். காத்துக்கிடந்தார்கள். எத்தனை மணி நேரம் காத்திருந்தும் பேருந்துகள் கிடைக்காமல், ஊருக்குச் செல்லமுடியாமல் வீடு திரும்பினார்கள். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் விஜய் பார்த்திபன் என்பவரைக் காணவே இல்லை.

தி.மு.க. ஆட்சியில் இருந்தால் இந்த நிலைமை இருக்குமா? அமைச்சர்எஸ்.எஸ்.சிவசங்கர் இரவு எத்தனை மணி ஆனாலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்தான் இருப்பார்' என்று பேருந்து கிடைக்காத பயணிகள் சிலர் இப்போது சமூக வலைத்தளத்தில் பதிவு போட்டு என்ன பயன்?

‘விஜய்க்கு தான் நாங்கள் வோட்டுப் போட்டோம்... இப்படி ராத்திரியில் புலம்ப வைத்து விட்டார்' என்று இப்போது வருந்தி என்ன பயன்? 'அவர் தோழியுடன் கார் ரேஸ் பார்க்கப் போய்விட்டார்' என்று இப்போது கோபப்பட்டு என்ன பயன்?

ஆட்சிக்கு வந்த புதிதில் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்யப் போனார் அமைச்சர் விஜய் பார்த்திபன். ஒரு இளைஞர் தனது ஊருக்கு பேருந்து வரவில்லை என்றார். குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்து வரவில்லை என்ற ஆதங்கத்தில் ஒரு இளைஞர் கேட்கிறார். அதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் சொன்ன பதில் என்ன தெரியுமா?' நீங்க நல்லா சாப்பிட்டுட்டீங்க... நான் இன்னும் சாப்பிடல' என்கிறார் பார்த்திபன். பஸ் வரலை என்பதற்கு இதுதான் பதிலா?' நீங்க நல்லா சாப்பிட்டுட்டீங்க... நான் இன்னும் சாப்பிடல' என்பதையே பத்து தடவை சொல்கிறார் பார்த்திபன். நிலைமையின்மோசத்தை புரிந்து கொண்டு போலீஸ் அதிகாரி ஒருவர், அந்த இளைஞரைபோகச் சொல்கிறார். அந்த இளைஞரை போகவிடாமல் தடுத்து நிறுத்தி,' நீங்க நல்லா சாப்பிட்டுட்டீங்க... நான் இன்னும் சாப்பிடல' என்கிறார் பார்த்திபன். இப்படி ஒருவரை அமைச்சராக வைத்திருந்தால்இப்படித்தான் ஒவ்வொரு நாளும் மக்கள் அவதிப்பட வேண்டும்.

உரிய நேரத்தில் பேருந்துகள் இல்லாததால் அலைமோதுகிறது பயணிகள் கூட்டம்.கிடைக்கும் பேருந்துகளில் முண்டியடித்து செல்லும் சூழல் ஏற்பட்டது. காலை முதல் பேருந்துக்காக பல மணிநேரம் காத்திருக்கும் அவலத்தைத்தான் பார்க்க முடிந்தது.

விஜய் அரசின் அலட்சியத்தால் பேருந்து மேற்கூரையில் ஏறிபயணிக்கும் அவலக் காட்சியைப் பார்த்தோம். இவை எல்லாம் உத்திரப்பிரதேசத்திலோ, பீகாரிலோ நடக்கும் காட்சிகள். அதை தமிழ்நாட்டில் பார்க்கிறோம். திராவிட மாடல் ஆட்சியில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பல்லாயிரக்கணக்கில் வாங்கப்பட்ட பேருந்துகள் அனைத்தையும் எடுக்காமல் வைத்துவிட்டு, மக்களை மேற்கூரை களில் பயணிக்க வைப்பது சேடிஸ்ட் மனப்பான்மை அல்லவா?

பேருந்து மேற்கூரையில் ஏறி பயணிக்கும் அவலக் காட்சிகளை சமூக வலைதளங்களில் வீடியோவாகப் போட்டு, 'இது உத்தரப்பிரதேசமோ, பீகாரோ அல்ல.. தமிழ்நாடுதான்..' என்று போட்டுள்ளார்கள். இதைப்பார்க்கும் போது யாரை நொந்து கொள்வது?

சொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாமல் மக்கள் திண்டாடும் நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் எங்கும் வரவில்லை. முதலமைச்சர் விஜய் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் ஆகியோரை காணவில்லை என சமூகவலைதளங்களில் விமர்சனம் வந்துள்ளது.

போதிய அரசுப் பேருந்து இல்லாததால் தனியார் பேருந்தில் அதிக கட்டணம் செலுத்திச் செல்வதாக பயணிகள் சொல்கிறார்கள். ‘அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்கப்படும்' என்று சொன்னது த.வெ.க. அரசு. சொன்னவர்களைக் காணவில்லை. 'த.வெ.க. ஆட்சியில் லஞ்சம் வாங்காததால், ஆம்னி பேருந்துகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும்தான் வாங்கும்' என்று பீற்றிக் கொண்டார்களே அந்த யோக்கியர்கள் எங்கே?வரலாறு காணாத அளவுக்கு ஆம்னி பஸ்களின் கட்டணத்தை உயர்த்தியதன் பெயர்தான் மாற்றமா?

சாதாரணமான கட்டணக் கொள்ளை அல்ல. ஆம்னி பேருந்துகளில் ரூ.3980 முதல் ரூ.5000 வரை அப்பட்டமான கொள்ளை கடந்த மூன்று நாட்களில் நடந்துள்ளது. அரசு பேருந்துகள் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் மக்களை பரிதவிக்க வைத்துது கூட சதிச் செயலா? அவர்களைஆம்னி பேருந்துகளில் செல்ல வைப்பதற்காகத் தான் பேருந்துகள் நிறுத்தப்பட்டதா? விஜய் அரசின் புதுவிதமான ஊழல் இது என்று கூடச் சொல்லலாம். தனியார் பேருந்து அதிபர்களை அமைச்சர் சந்தித்தது பற்றி புலனாய்வு பத்திரிக்கைகள் பல வாரங்களுக்கு முன்பே செய்தி வெளியிட்டுள்ளன.

தேவையான பேருந்தை உடனடியாக அனுப்ப வக்கற்ற விஜய்அரசு, இன்ஸ்டா ரீல்ஸ் போடும் ஆட்களை கிளாம்பாக்கத்துக்கு அனுப்புகிறது. "கூட்டமே இல்லை, பஸ் ப்ரீயா இருக்கு” என ரீல்ஸ் போட வைத்துள்ளது. இவர்களுக்கு ரீல்ஸ் தவிர ஏதும் தெரியாது. ஆளத் தெரியாத கையாலாகாத உதவாக்கரை அரசு தான் இது என்பதை விஜய் தினந்தோறும் மெய்ப்பித்து வருகிறார்.

Also Read: திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!