murasoli thalayangam

திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!

'துரோகம் செய்தவர்களைத் தோற்கடியுங்கள் கட்சியை பார்க்காதீர்கள்! துரோகமிழைத்தவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுங்கள்!" என்று மதுராந்தகம், தாராபுரம் தொகுதி மக்களுக்கு ஒரு முதியவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்குத் துரோகம் இழைத்த த.வெ.க. வேட்பாளர்களைத் தோற்கடியுங்கள்!

மூன்று மாதங்களுக்கு முன் தேர்தலில் வெற்றி பெற்று, பின்னர் கட்சி மாறி இப்போது மீண்டும் த.வெ.க. சார்பில் வாக்கு கேட்டு வருபவர்களை தோற்கடிப்போம்! இந்த இடைத்தேர்தலில் கட்சியைப் பார்க்காதீர்கள்! வாக்களித்து வெற்றி பெறச்செய்த உங்களுக்குத் துரோகம் இழைத்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாத நிலைமையில் வந்த தேர்தல் அல்ல. இது திணிக்கப்பட்ட தேர்தல் ஆகும். முதலமைச்சர் விஜய்யின் குதிரை பேரத்தால் தான் இந்த இடைத் தேர்தல் வந்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகத்தில் அ.தி.மு.க. சார்பில்போட்டியிட்ட மரகதம் குமாரவேல் வெற்றி பெற்றார். தாராபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா வெற்றி பெற்றார். இவர்கள் இருவரையும் ராஜினாமா செய்ய வைத்தார் விஜய்.

'மீண்டும் தேர்தல் வந்தால் நீங்கள் தான் வேட்பாளர்' என்று ஆசை வார்த்தை கூறி, குதிரை பேரம் நடத்தினார். அவர்கள் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரனிடம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, ஐந்தாவது நிமிடத்தில் த.வெ.க.வில் இணைந்தார்கள். குதிரை பேரம் நடந்தது என்பதற்கு இதைவிட சாட்சியம் தேவையில்லை.

இதனால் தான் இடைத்தேர்தல் வந்தது. யார் பதவி விலகினார்களோ, அவர்களையே வேட்பாளர்களாக அறிவித்துள்ளார் விஜய். இதுவும் பேரம் நடந்தது என்பதற்கான சாட்சியம் ஆகும். 'மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படும்' என்ற பேரத்தை விஜய் நடத்தியதற்கு இதுவே ஆதாரம் ஆகும். இதைவிட அரசியல் மோசடி இருக்க முடியாது. இதைவிட மக்களுக்குத் துரோகம் இழைக்க முடியாது.

இவர்கள் இருவர் மட்டுமல்ல; பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம்இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினார்கள். விலகியதும் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார்கள். இவர்களை பதவி விலக வைக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு ஏன் வந்தது?

காங்கிரஸ் கட்சி ஆதரவு இருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு இருக்கிறது. இந்த மூன்று கட்சிக்கும் அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளதால் அவர்கள் கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார்கள்.

ஆட்சி மீது விமர்சனங்களைச் செய்து கொண்டே ஆட்சிக்கு ஆதரவைத் தந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும். ஆனாலும் இந்தக் கட்சிகள் எதையும் விஜய் நம்பவில்லை. இவர்களால் தான் அவர் முதல்மைச்சராக நீடிக்கிறார். ஆனாலும் இந்தக் கட்சிகளை நம்பத் தயாராக இல்லை. இதனால் தான் அ.தி.மு.க. உறுப்பினர்களை பல்வேறு பேரங்களின்மூலமாக பதவி விலக வைத்து இடைத்தேர்தலை உருவாக்கி அரசியலைக் குழப்பி வருகிறார் விஜய். இதைவிட இழிவான அரசியல் இருக்க முடியாது.

மாற்றத்தைத் தரப்போவதாகச் சொல்லும் விஜய், தனக்குப் பெரும்பான்மை இடங்களைத் தரவில்லை தமிழ்நாட்டு மக்கள் என்று சொல்லி பதவி ஏற்க விரும்பவில்லை என்று தவிர்த்திருந்தால் அது மாற்றம். அவரை யோக்கியர் என்று நம்பலாம்.

'தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை கல்லாப்பெட்டி கூட்டணி' என்று சொன்னாரே அவர்களது ஆதரவைப் பெறாமல் இருந்திருந்தால் அவரை யோக்கியர் என்று சொல்லலாம்.

'அ.தி.மு.க.வை ஊழல் கட்சி' என்று விமர்சித்த அவர், அ.தி.மு.க. உறுப்பினர்25 பேரின் ஆதரவை வாங்காமல் இருந்தாரா? இல்லை. அவர்கள் வாக்கு களைப் பெற்றுத் தான் பெரும்பான்மையை நிரூபித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நால்வரை வலுக் கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்து, அந்த நான்கு தொகுதி வாக்காளப் பெருமக்கள் முகத்திலும் கரியைப் பூசினார் விஜய். அ.தி.மு.க. சார்பில் வென்றவர்களை தனது கட்சியில் இணைத்துக் கொண்டு அசிங்க அரசியலை சிரித்துக் கொண்டே செய்கிறார் விஜய்.

மதுராந்தகம் மரகதம் குமாரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய நால்வரும் சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள். தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்களுக்கு தங்களது பதவியை ராஜினாமா செய்யும் உரிமை இல்லை என்பதே உண்மை ஆகும். பதவி விலகியது மட்டுமல்லாமல், மறுபடியும் அவர்கள் போட்டியிடுவதும் மிகமிகத் தவறானது ஆகும்.

இவர்களது ராஜினாமாவை ஏற்பதாக முதலில் சொன்னார் பேரவைத் தலைவர். அந்த நான்கு தொகுதிகளும் காலி என்றும் அவசர அவசரமாக அறிவித்தார். பின்னர், 'அந்த நான்கு பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன்' என்றார். இது அரசியல் அமைப்புச் சட்ட சிக்கலுக்கு உரியதாக மாறி வருகிறது. குதிரை பேரங்கள் நடப்பது தொடர்பாக சி.பி.ஐ. போன்ற புலனாய்வு அமைப்பு இதை விசாரித்தால் சிக்கல்கள் அதிகம் ஆகும். முதலமைச்சர் விஜய் உள்பட பல அமைச்சர்கள் இப்பிரச்சினையில் சிக்குவார்கள்.

அதற்கு முன்னதாக முதலமைச்சர் விஜய்யையும் குதிரை பேரத்தில்தொடர்புடைய வேட்பாளர்களையும் தண்டிக்க வேண்டிய கடமை மதுராந்தகம், தாராபுரம் மக்களுக்கு இருக்கிறது.

Also Read: “தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!” : மு.க.ஸ்டாலின்!