murasoli thalayangam

“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!

விஜய் முதலமைச்சர் ஆன உடன் முதலில் சரிந்தது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிதான். எதுவும் தெரியாத, எந்த தொலைநோக்குச் சிந்தனையும் இல்லாத, சில புரோக்கர்களின் வலையத்தில் மட்டுமே வலம் வரும் விஜய் காலத்தில் முதலீடுகள் செய்தால் நம் நிறுவனமும் வளராது, இந்த மாநிலமும் வளராது என்பதை முதலில் அறிந்தவர்கள் தொழில் அதிபர்கள் தான்.

அதை விட முக்கியமாக தொழில் துறை அமைச்சராக ஒருவரை நியமித்துள்ளாரே விஜய்! அவரால் முதலீடும் கொண்டு வர முடியாது, அவரை நம்பி யாரும் முதலீடும் செய்ய மாட்டார்கள். இருக்கும் நிறுவனமும் தப்பித்து ஓடத்தான் பார்க்கும்.

இத்தகைய சூழலில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாராம். நடிகர் சொன்னால் நாடும் நாட்டு மக்களும் எதையும் நம்புவார்கள் என்று நினைக்கும் விஜய், கோடிக்கணக்கான மக்கள் காதில் பூ சுற்றி விட்டுக் கிளம்பி இருக்கிறார்.

வெளிநாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதாக இருந்தால் அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் பல முறை பேச்சுவார்த்தைகள் நடத்திய பிறகு முதலமைச்சரின் பயணம் திட்டமிடப்படும். ஆனால் இங்கு திடீரென முதலமைச்சர் மட்டுமே கிளம்பி விட்டார். லண்டன் விமான நிலையத்தில் போய் விஜய் நின்றால் முதலீடுகள் கொட்டிவிடும் என்று ரூட் மாஃபியா சொன்னதா எனத் தெரியவில்லை.

ஆனால் உண்மையான காரணத்தை நடிகர் அஜீத் உடைத்து விட்டார். 'நான் அழைத்து வந்துள்ளார். கார் ரேஸ் போட்டியில் எங்களைப் பார்ப்பதற்காக நான் அழைத்து முதலமைச்சர் விஜய் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மிக பிஸியான நேரத்திலும் கார் ரேஸைக் காண வந்த முதலமைச்சர் விஜய்க்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று அஜீத் சொல்லி இருக்கிறார்.

விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல. விஜய் இங்கு பிஸியாக இல்லை. அவர் இங்கும் சூட்டிங்கில்தான் இருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் ரேஸ் பார்க்கச் சென்றுள்ளார். இதற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க என எதற்கு பொய் சொல்ல வேண்டும்?

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் புதிய முதலீட்டு proposals (முதலீட்டுத் திட்டப் பரிந்துரைகள்) சுமார் 74.5 விழுக்காடு வரை சரிவைச் சந்தித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. தேசிய அளவில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகத்தின் தரவரிசை 6-வது இடத்தில் இருந்து 17-வது இடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் புதிய முதலமைச்சர்கள் பதவியேற்றதைத் தொடர்ந்து, முதல் காலாண்டில் 4 மாநில தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு பின்னடைவை சந்தித்துள்ளதாகவும், மற்ற 3 மாநிலங்களில் முன்மொழியப்பட்ட முதலீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து தொழில் நிறுவனங்களும் ஆந்திராவை நோக்கி படையெடுத்துக் கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் பரந்தூர் விமானநிலையத் திட்டத்தை எந்த தொலைநோக்குச் சிந்தனையும் இல்லாமல் தற்குறித்தனமாக ரத்து செய்துள்ளது

த.வெ.க. அரசு. இதுவும் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா அரசுகளுக்கு மிகப்பெரிய நன்மையாக அமைந்துள்ளது. 'விஜய் கர்நாடக, ஆந்திர, தெலங்கானா மாநில முதலமைச்சராகவும் செயல்படுகிறார்' என்று இணையத் தளத்தில் கிண்டல் அடிப்பது உண்மை தான்.

இதனை மறைக்க பல்வேறு பொய்கள் கட்டமைக்கப்படுகின்றன. அதில் ஒன்று முதலீட்டாளர் மாநாடு ஆகும். விஜய் முன்னிலையில் (ஆக. 13) சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்' தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தொழில் துறை தெரிவித்துள்ளது.

'தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,21,788 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டு உள்ளன' என்று விஜய் அரசு தெரிவித்துள்ளது. இவை எதுவும் உண்மை அல்ல.

இப்படி ஒரு முதலீட்டாளர் மாநாடு நடக்கும் போது ஊடகங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.67 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்படுகிறது என்றால் டெல்லியில் இருந்தே அனைத்து ஊடகங்களையும் அழைத்து வந்து காட்டலாம். இதை விட தமிழ்நாட்டுக்குப் பெருமை இருக்க முடியாது. ஆனால் விஜய் என்ன செய்தார் என்றால் கேரவேனில் இருப்பதைப் போல முதலீடுகளை ரூமுக்குள் வைத்து ஈர்த்தார். ஈர்த்துக் குவித்து விட்டார்.

'இதுவே அமைச்சர் கீர்த்தனாவுக்காக செய்யப்பட்ட நாடகம்தான். அவரை துறை மாற்ற நினைத்தார் முதலமைச்சர். ஆனால் அவரை அந்த துறையில் இருக்க வைக்க கீர்த்தனாவுக்காக ஒரு குரூப் இப்படி ஒரு மாநாட்டை நடத்தியது' என்றும் த.வெ.க. வட்டாரங்கள் சொல் கின்றன.

அமைச்சர் கீர்த்தனா விஜயை ஏமாற்ற நினைத்தார் என்றால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்ற விஜய் போட்ட திட்டம் தான் இந்த வெளிநாட்டு பொய்ப் பயணம்.

அரிதாரம் பூசி நடிக்கலாம். அரிதாரம் பூசி ஆளக் கூடாது.

Also Read: “வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!