murasoli thalayangam
லஞ்சம் ஊழலை ஒழிக்கப் போகிறோம் என சொல்லும் விஜய் இதைப் பற்றி விளக்கம் அளிப்பாரா? : முரசொலி கேள்வி!
முரசொலி தலையங்கம் (20-07-2026)
இதுவரை நடந்த தவறுகளுக்கு நடவடிக்கை என்ன?
சத்தியம் தவறாத உத்தமன் போல முதலமைச்சர் விஜய்யை உருவாக்க ஊடகங்கள் துடிக்கின்றன. ‘இனி யாராவது ஊழல் முறைகேடுகள் நடவடிக்கையில் ஈடுபட்டால் உங்கள் பதவியைப் பறித்து விடுவேன்’ என்று அமைச்சரவைக் கூட்டத்தில் விஜய் மிரட்டியதாக தலைப்புச் செய்தி வெளியிட்டு ஊடகங்கள் கொண்டாடி இருக்கின்றன. அவர்களுக்குச் சொல்லி வர வைத்துள்ளது த.வெ.க. அரசு.
‘’உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள். உங்களுடன் நான் இருக்கிறேன். இதை மீறி யாராவது கட்டாயப்படுத்தினால் இது எங்க மகன், எங்க பிள்ளை, எங்க அண்ணன், எங்க தம்பி, எங்க விஜய், எங்கள் விஜய்யோட ஆட்சி என்று உறுதியாகச் சொல்லுங்கள் மக்களே’’ என்று உறுமினார் விஜய்.இது மாதிரி மேடைகளில் பேசுவது, அமைச்சரவைக் கூட்டத்தில் சொன்னதாக செய்திகளைப் பரப்புவது போன்ற டிராமாக்களின் மூலமாக காலத்தைத் தள்ளலாம் என நினைக்கிறார் விஜய்.
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லட்சக்கணக்கில் லஞ்சம் விளையாடி கோடிக்கணக்கில் பண முறைகேடுகள் நடந்துள்ளது என்று குற்றம் சாட்டியவர் த.வெ.க.வைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர். அவரைக் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறார் விஜய்.‘ஒரு பெண்ணாகவும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவராகவும் நான் மேற்கொண்ட போராட்டம் தலைவர் அவர்களே உங்களுக்கு நேரடி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டதா எனத் தெரியவில்லை?’என்று விஜய்க்கு எழுதிய கடிதத்தில் வழக்கறிஞர் ஞானசெளந்தரி சொல்லி இருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணி இணை செயலாளருமான எம்.ஞானசௌந்தரி ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.‘‘ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படு கின்றனர்; த.வெ.க. மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கூட்டுசேர்ந்தும், த.வெ.க. பொதுச் செயலாளரும், அமைச்சரு மான புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை அடிப்படையிலும், இந்த நியமனங்கள் நடந்துள்ளது”என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி தனது வழக்கை பதிவு செய்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.
இந்த நிலைமையில் முதலமைச்சர் விஜய் என்ன செய்திருக்க வேண்டும்? அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமாரை அழைத்து விசாரித்திருக்க வேண்டும். குற்றம் சாட்டுகிறவரும் த.வெ.க.வைச் சேர்ந்தவர் என்பதால் இரு தரப்பையும் உட்கார வைத்து விசாரித்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் குற்றம் சாட்டியவரை கட்சியை விட்டு நீக்கி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.இவர்தான் இந்த நாட்டில் லஞ்சம் ஊழலை ஒழிக்கப் போகிறாராம்?
பழனி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.2 கோடிக்கு பத்திரம் போட்டு விற்பனை செய்து விட்டது த.வெ.க. அரசு. அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷுக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய முடிவு எடுக்கப்பட்டு இருக்காது என்பதை அனைவரும் அறிவார்கள். அங்கே இருப்பவரை மாற்றி, ஒருவரை கூடுதல் பணியாகக் கொடுத்து அவரை வைத்து இந்த சொத்து பறிமாற்றம் நடந்திருக்கிறது. இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர், திடீரென பதவி உயர்வைப் பெறுகிறார்.
‘அந்த நிலம் குறித்த தகவல் தெரியாமல் சொத்து பதிவு நடந்தது’என்கிறார் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்.‘சொத்து விபரம் தெரிந்தே தவறு செய்துள்ளார்கள்’என்கிறார் பத்திரப்பதிவு அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்.இதில் யார் சொல்வது உண்மை என விசாரித்தாரா முதலமைச்சர் விஜய்?
அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் முழிக்கும் முழியே ஏதோ தவறு நடந்திருப்பதைக் காட்டிக் கொடுக்கிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மோசடியாக பதிவு செய்து கொடுத்தவர்களோ, பதிவு செய்து கொண்டவர்களோ கைதாகவில்லை. உயர்நீதிமன்றம்தான், இப்பதிவை ரத்து செய்துள்ளது. விஜய் அரசு செய்யவில்லை.‘இனி முறைகேடு நடந்தால்...’என்று வசனம் பேசும் விஜய்,அமைச்சர் ரமேஷை பதவி நீக்கம் செய்திருக்க வேண்டாமா?
ஆட்சிக்கு வந்ததும் 700 டாஸ்மாக் கடைகளை மூடியதாக வேஷம் போட்டார் விஜய். இப்போது நாடு முழுவதும் உயர்ரக பார்கள் திறக்கப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டுக்குள் பல்வேறு மாநில மதுவகைகள் வர இருக்கிறதே?இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
ஆட்சிக்கு வந்ததும் ஏராளமான கல்குவாரிகள் மூடப்பட்டன. இப்போது அதில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது?கேரளாவுக்கு போகும் லாரிகள் நிறுத்தப்பட்டு லஞ்சம் பெறப்படுவதாககேரள மீடியாக்களில் வீடியோ காட்சிகள் வெளியானதே? அந்த விவகாரத்தில் யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது?
அமலாக்கத்துறை சோதனை காரணமாக கடந்த 31 மாதங்களாக மூடப்பட்டுக் கிடந்த12 மணல் குவாரிகளை திறப்பதில் இந்த அரசு முனைப்புக் காட்டுவதன் பின்னணி என்ன?
தனியார் பேருந்துகள் அறிவிக்காமலேயேஅனைத்துக் கட்டணங் களையும் உயர்த்தியதற்கு அனுமதிவழங்கியது யார்?
விஜய் ஆட்சி அமைந்தது முதல் மிகமிக மர்மமாக நடக்கத் தொடங்கி இருக்கும் ஒரு சில விஷயங்கள் இவை. வரிசையாக இவை வெளியில் வரும். உயர் மட்டத்தில் இருப்பவர்களால் மட்டும் அனுமதிக்கப்படுகின்றவை இவை. இதைப் பற்றி விளக்கம் அளிப்பாரா விஜய்? இல்லை என்றால் தனது வாய்ச் சவடால் உரைகளில் இதுபற்றி பேசத் தயாராக இருக்கிறாரா விஜய்?
Also Read
-
“திமுக-வை வழக்குகளால் அழிக்க முடியாது.. எத்தனை பேரை சிறைவைக்க முடியும்” - ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!
-
FIFA 2026: மிரட்டல் ஆட்டத்தால் கோப்பையை முத்தமிட்ட ஸ்பெயின்.. சொதப்பிய அர்ஜென்டினா.. எங்கு தடுமாறியது!
-
‘நாடாளுமன்றம் நோக்கிய இளைஞர்கள் பேரணி.. காவல் துறை தடியடிக்கு கண்டனம்’ : திமுக தலைமைக் கழகம்!
-
“பேசினாலே கைது என்ற த.வெ.க அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்!” : உதயநிதி ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டிற்கான ரூ.3,284 கோடி கல்வி நிதியை விடுவிக்கப்போவது எப்போது?” : தயாநிதி மாறன் எம்.பி கேள்வி!