murasoli thalayangam

கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!

முரசொலி தலையங்கம் (09-07-2026)

கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1

“கரூருக்கு முதலமைச்சர் விஜய் செல்கிறார் என்றதும் தி.மு.க. பயப்படுகிறது. கரூர் மக்களை முதலமைச்சர் விஜய் சந்திப்பதைப் பார்த்து தி.மு.க. பயப்படுகிறது” என்று அமைச்சர் நிர்மல்குமார் புலம்பி இருக்கிறார். எந்த நிர்மல் குமார்? கரூர் சம்பவத்தில் போலீஸ் தேடியபோது தலைமறைவாக இருந்தாரே அந்த நிர்மல்குமார். இப்போது அமைச்சர் ஆனதும் ஏதோ தைரியசாலியைப் போல போக்குக் காட்டுகிறார்.

கரூரில் ஒவ்வொரு உயிராகப் போய்க் கொண்டு இருந்தபோது பயந்து அங்கிருந்து ஓடி வந்தவர்தான் விஜய். கரூரில் இருக்காமல் திருச்சிக்கு ஓடி வந்தார். அவரைச் சுற்றி இருக்கும் அனைவரும் செல்போனை அணைத்து வைத்து விட்டார்கள். திருச்சி விமான நிலையத்தில் சூழ்ந்து கத்திய அனைத்து ஊடகங்களையும் பார்க்காமல் சென்னைக்கு ஓடி வந்து விட்டார் விஜய். சென்னை விமான நிலையத்திலும் ஊடகங்கள் குரல் எழுப்பினார்கள். அவர்களைப் பார்க்காமல் பயந்து போய் தனது வீட்டுக்கு வந்து பதுங்கிக் கொண்டார் விஜய். அதன்பிறகு அவரைப் பல நாட்கள் பொதுவெளியில் காணவில்லை. வெளியே வரவில்லை. தனது சுற்றுப் பயணங்களையே ரத்து செய்து விட்டார் விஜய்.

41 உயிர்கள் பலியான குடும்பத்தைப் பார்க்க விஜய் அதோ வருகிறார், இதோ வருகிறார், அன்று வரப் போகிறார், இன்று வரப்போகிறார் என்று ஊடகங்கள் செய்தி போட்டு விஜய்யை உசுப்பிவிட்டார்களே தவிர, அவர் வரவே இல்லை. 41 உயிர்களைப் பலி கொடுத்த குடும்பத்தினரை சென்னைக்கு வர வழைத்துப் பார்த்த அசிங்கத்தையும் விஜய்யே செய்தார்.

27.9.2825 அன்று நடந்த கொடூரமான சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டியவர்களாக மூன்று பேர் மீது அப்போது கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவானது. த.வெ.க.வின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், கட்சி நிர்வாகி நிர்மல்குமார் என்று குறிப்பிடப்பட்டது. விஜய் பெயர் அப்போது சேர்க்கப்படவில்லை. ‘பழிவாங்கும் நடவடிக்கை' என்று அப்போதே சொல்லி இருப்பார்கள். இருந்தாலும், விஜய்க்கு பயம். அதனால்தான் உடனே சி.பி.ஐ. விசாரணை கேட்டு நீதிமன்றத்தை நாடினார்கள்.

‘போலீஸை வைத்துச் செய்து விட்டார்கள்' என்று இன்று குற்றம் சாட்டு கிறார்களே. ஆனால் அன்றைய தினம் விஜய் என்ன பேசினார்? “நான் இங்கு எப்படி வந்தேன் என்றே தெரியவில்லை. இதற்காக காவல்துறையினருக்கு நன்றி கூறுகிறேன்” என்றுதான் பேசினார்.( 29.9.2025 தினத்தந்தி)

“விஜய் அங்கு மதியம் 12 மணிக்குப் பேசுவார் என்று த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டதால் அவரைப் பார்க்க காலை முதலே ஏராளமானோர் குவிந்துவிட்டனர். பல மணிநேரம் தண்ணீர் குடிக்காமல், உணவு அருந்தாமல் காத்திருந்த அந்தப் பெருங்கூட்டம் களைப்பால் துவண்டு போயிருந்த நிலையில் இரவு 7 மணிக்குத்தான் விஜய் வந்தார்” என்று ‘தினத்தந்தி' நாளிதழ் (29.9.2025) தலையங்கம் தீட்டியது. எனவே விஜய்யும் அவரது கட்சிக்காரர்களும் சொல்வது முழுப்பொய் என்பதை பழைய நாளிதழ்களே சொல்லும்.

அதனால்தான் முன் ஜாமின் கேட்டு புஸ்சி ஆனந்த், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு போட்டார். ஜாமின் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயத்தில் தலைமறைவு ஆனார். இதேபோல் முன் ஜாமின் மனு போட்டவர்தான் இன்றைய ஆகாச சூரர் நிர்மல்குமார். அவரும் எங்கோ பதுங்கினார்.

“நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அவர்கள்தான் எனும் போது, அவர்கள் தானே நடந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும்” என்று சொல்லி புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்ததை நிர்மல்குமார் மறந்து விட்டாரா? தலைமறைவாக இருந்த நேரத்தில் நடந்ததை அறியவில்லையா?

அரசியல் கட்சிகளின் கூட்டங்களை முறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கில் தீர்ப்பளித்த நீதியரசர் செந்தில்குமார், “விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை” என்று சொன்னதை யாரும் மறந்திருக்க முடியாது.

“கரூர் சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள், பலியான நிலையில் அக்கட்சித் தொண்டர்களை, ரசிகர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு ஓடிய த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்குத் தலைமைப் பண்பு இல்லை. அவர்கள் சம்பவத்துக்குப் பொறுப்பேற்கவும் இல்லை. த.வெ.க. தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது. கரூர் விபத்து மனிதரால் உருவாக்கப்பட்ட பேரழிவு” என்று கடுமையான சொற்களால் குறிப்பிட்டார் நீதியரசர் செந்தில்குமார். விஜய் பயந்து போய் ஓடிப்போனார் என்பதை சென்னை உயர்நீதிமன்றமே சொன்னது. ‘விஜய் சென்ற பிரச்சார வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை?' என்றும் நீதியரசர் கேட்டார்.

புஸ்சி ஆனந்தும், நிர்மல்குமாரும் தலைமறைவாகிய நிலையில் த.வெ.க. கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனை காவல்துறை அன்று கைது செய்தது. உடனே, "இலங்கை, நேபாளத்தை போல புரட்சி வெடிக்கும்” என்று ‘லாட்டரி’ மாதிரி பதவிகளைப் பெற்று வரும் ஆதவ் அர்ஜூன் பதிவு போட்டார். இதுவும் நீதிபதிகளால் கண்டிக்கப்பட்டது. ‘இவர்கள் என்ன சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா?” என்று கேட்டது உயர்நீதி மன்றம். இதன் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டார் நீதிபதி. அதன்பிறகு ஆதவ் அர்ஜூனாவும் தலைமறைவு ஆனார். இது பயத்தினால் தானே?

- தொடரும்

Also Read: கரூர் வழக்கு முதல் அடிதடிகள் வரை ; அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க அமைச்சர்கள் : முரசொலி தலையங்கம்!