murasoli thalayangam

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக விஜய் எடுக்கும் நடவடிக்கையின் லட்சணம் : உண்மையை தோலுரித்த முரசொலி!

முரசொலி தலையங்கம் (12-06-2026)

அன்று பேசியது என்ன? இன்று பேசுவது என்ன?

விஜய் முதலமைச்சர் ஆனது முதல் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடக்கின்றன. இதைத் தடுக்க ஒரு மாதம் கழித்து ‘சிங்கப் பெண் படை’ என்ற திட்டத்தைத் தொடங்கி இருக்கிறார் விஜய். ஆட்சிக்கு வந்ததும் போட்ட முதல் கையெழுத்தை நடைமுறைப்படுத்தவே அவருக்கு முப்பது நாள் ஆகி இருக்கிறது. ஆமை வேகத்தை விட மோசமான வேகத்தில் அவர் ஆட்சி போய்க் கொண்டு இருக்கிறது.

பெண்கள் பாதுகாப்பைப் பற்றிப் பேசிய விஜய், இதைத் தன்னால் தடுக்க முடியாது என்பதையும் அதே கூட்டத்தில் ஒப்புக் கொண்டு விட்டார். ‘தனிமனித ஒழுக்கம் குறைந்து விட்டதுதான் இதற்குக் காரணம். தனிமனிதர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும்’ என்று அறிவுரை சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

‘நான் பதவியேற்ற அடுத்த நொடி முதல் எந்தக் குற்றச் சம்பவமும் நடக்காது’ என்று சவால் விட்ட விஜய், எதனால் பதுங்குகிறார்? ஏன் நாக்கு வேறு பக்கமாகப் போகிறது?

தி.மு.க. ஆட்சியின் போது என்னவெல்லாம் பேசினார் விஜய்? “நீங்க ஒழுங்கா ஆட்சி நடத்தி இருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்கா இருந்திருக்கும். சட்டம் ஒழுங்கு ஒழுங்கா இருந்திருக்கும். பச்சை புள்ளைங்க.. படிக்கிற புள்ளைங்க... சின்னப் பொண்ணுங்க... வீட்டுல இருக்கிற பொண்ணுங்க... வேலைக்கு போகிற பொண்ணுங்க... இதுங்க எல்லாருக்கும் நடக்கிற கொடுமைகளை சொல்ல முடியாது சார்” என்று சொன்னீர்களே விஜய்? இப்போது என்ன நடக்கிறது அவரது ஆட்சியில்?

தி.மு.க. ஆட்சியில் நடந்த சம்பவங்களுக்கு அரசும், முதலமைச்சரும்தான் பொறுப்பு என்று பேசி வெறுப்பை விதைத்த விஜய், இன்று தனது பொறுப்பை தட்டிக் கழிப்பது ஏன்? தனது கையாலாகாத்தனத்தை மறைக்க... ‘ஊரில் உள்ளவர்கள் அனைவரும் திருந்த வேண்டும்’ என்று டயலாக்கை மாற்றிக் கொண்டது ஏன்?

ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த விஜய் ரசிகைக்கு, த.வெ.க. பெண் உறுப்பினருக்கு த.வெ.க. நிர்வாகிகளாலும், அதற்கு ஸ்ரீவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் சரவணன் துணையாக இருந்ததையும் நாம் நமது தலையங்கத்தில் முன்பே எழுதி இருக்கிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, த.வெ.க.வின் முகத்திரையை ‘ஒரு குட்டி ஸ்டோரி’யை சமூக வலைதளத்தில் எழுதி இருக்கிறார். அதில் ...

‘’பாதிக்கப்பட்டவர் ஓர் இளம்பெண். த.வெ.க.வைச் சேர்ந்தவர். அவரிடம் பாலியல் குற்றம் புரிந்தவர்கள் குற்றவாளிகள். அவர்களும் த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள். இந்தக் குற்றவாளிகளை கேரளாவில் மறைத்து வைத்தவர் ஒரு MLA. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த த.வெ.க. எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்டுப் போராடியது ஜனநாயக மாதர்சங்கம். குற்றவாளிகளைக் கைது செய்தது த.வெ.க. அரசாங்கம்.. நல்லது. இதுவரை இது ஒரு நீண்ட தொடராக நினைத்துப் படித்திருப்பீர்கள். ஆனால் பாருங்கள்...

பாலியல் குற்றவாளிகளாக மாறியவர்களை த.வெ.க.விலிருந்து அக்கட்சி நீக்கவில்லை. அவர்களைப் பாதுகாத்த த.வெ.க. எம்.எல்.ஏ. மீதும் நடவடிக்கை இல்லை.. அடடா என கவலைப்படுகிறீர்களா?

படாதீர்கள்...

அதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட, அப்பெண்ணை த.வெ.க.விலிருந்து நீக்கி உள்ளார்கள்...

இது யார் சொன்னது? அந்தப் பெண்ணேதான்..!

ஊர் ஸ்ரீவைகுண்டம் – பெயர் சரவணன் எம்.எல்.ஏ. த.வெ.க.

இது ஒரு ‘குட்டி’ ஸ்டோரி அல்ல...! குட்டீசுகளுக்கான ஸ்டோரியும் அல்ல.

பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஓடி ஓடி ஊடகங்கள் வாயிலாக உழைத்தவர்கள் இப்போது கண்ணுக்கெட்டிய தூரம்வரை காணவே இல்லை...!” என்று எழுதி இருக்கிறார் பாலபாரதி. இதுதான் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக விஜய் எடுக்கும் நடவடிக்கைகளின் லட்சணம்.

பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்காத விஜய்க்கு, சிங்கப் பெண் பாதுகாப்புப் படையைத் தொடங்க அருகதை உண்டா? யார் பாதிக்கப்பட்டாரோ அந்தப் பெண்ணுக்கு ஆறுதலாக இருந்துள்ளாரா விஜய்? இல்லை. ‘என்னிடம் முதலமைச்சர் விஜய் பேச வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார் அந்தப் பெண். இதுவரை விஜய் பேசவில்லை.

இந்த விவகாரம் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகிய இருவருக்கும் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள். இதைப் பார்க்கும் போது இந்த ஆட்சியில் யார் முன்வந்து புகார் கொடுப்பார்கள்?

ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.வை சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு, தனிமனித ஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கலாமா? உண்மைக் குற்றவாளியைக் காப்பாற்றி வைத்துக் கொண்டு சிங்கப் பெண் படையால் என்ன பயன்?

பாலியல் வன்கொடுமையைத் தடுக்கப் போவதாக உண்மையில் நினைத்தால் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் பதவி பறிக்கப்பட்டு அவரும் கைது செய்யப்பட வேண்டும். அதற்கு முதலமைச்சர் விஜய் தயாரா? இதைச் செய்யாமல் பெண் போலீசாருக்கு சீருடையை மாற்றிவிட்டதால் எதுவும் சீராகி விடாது.

சூலூர் விவகாரத்திலும் த.வெ.க. ஆட்சி முறையாக நடக்கவில்லை. 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். முதலில், ‘உங்க குழந்தை உயிரோடு இருக்கிறது’ என்று போலீஸார் அந்தக் குடும்பத்தினரிடம் சொன்னார்கள். பிறகு, ‘குழந்தை இறந்து விட்டது’ என்று சொன்னார்கள். சிறுமியின் அம்மாவுக்குத் தெரியாமல் சிறுமியின் உடலை சேலத்துக்குக் கொண்டு வந்து எரித்துவிட்டார்கள். இதை எல்லாம் சிறுமியின் அம்மா பேட்டியாகக் கொடுத்தார். உடனே அந்த அம்மா மீதே தவறான செய்திகள் பரப்பப்பட்டது. விஜய் வாரியர்ஸ், சமூக வலைதளங்களில் சிறுமி குறித்தும், அவரது அம்மா குறித்தும் எழுதியவை அருவெறுப்பானவை. ‘என்னைப் பத்தி வரும் விமர்சனங்களை நீங்க பார்த்துக்கோங்க’ என்று திருச்சி கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசினார். அவரது தூண்டுதலால், ஆசீர்வாதத்தால் அந்தக் குடும்பமே கொச்சைப்படுத்தப்பட்டது. இதையெல்லாம் பார்த்து யாராவது புகார் கொடுக்க முன் வருவார்களா?

சூலூர், ஸ்ரீவைகுண்டம் ஆகியவை இரண்டும் விஜய் ஆட்சி மிகமிக மோசமான ஆட்சி என்பதற்கு உதாரணங்கள் ஆகும். இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்காது. அதனால்தான் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில், ‘தனிமனித ஒழுக்கம் முக்கியம்’ என்று தத்துவம் பேசத் தொடங்கி இருக்கிறார் விஜய்.

Also Read: “பகலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள்.. இரவில் மின்வெட்டு..” : TVK ஆட்சியின் சாதனை - முரசொலி காட்டம்!