murasoli thalayangam
“மக்களைக் கை கழுவிவிட்டு..‘நன்றாகக் கை கழுவிக் கொள்ளுங்கள்’ என்றவர் மோடி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
“கொரோனா காலத்தில் உங்களைக் காத்ததைப் போல இந்தப் போர்க் காலத்திலும் மக்களைக் காப்பேன்” என்று சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. இவர் சும்மா இருந்தாலே மக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்வார்கள். கொரோனா காலம் என்று சொல்லி மக்களை பீதியடைய வைக்க வேண்டாம்.
கொரோனா காலத்தில் இந்திய நாட்டு மக்களை நான் எப்படிக் காத்தேன் என்பதை பிரதமர் மோடி சொன்னாரா என்றால் இல்லை. சொல்ல முடியுமா என்றால் முடியாது! கொரோனாவை விடக் கொடூரமான ஆட்சியை அல்லவா பிரதமர் மோடி நடத்தினார். 2019 டிசம்பரில் கொரோனாவின் பாதிப்பு உலக நாடுகளில் பரவியது. பல நாடுகள் ஊரடங்கு அறிவித்து விட்டன. வெளிநாட்டவர் வருகையை தடுத்துவிட்டார்கள்.
2020 ஜனவரி 29ம் தேதி நிருபர்களைச் சந்தித்த ஒன்றிய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை, மக்கள் அச்சம் அடைய வேண்டாம். 2014 இல் எபோலோ வைரஸை இந்தியாவுக்குள் வராமல் தடுத்தோம். அதைப் போல கொரோனாவையும் வரவிடாமல் தடுத்-துவிடுவோம்” என்று சொன்னார்.
“கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்கு சீனாவுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. உயிரிழப்புகள் துரதிருஷ்டவசமானவை. உங்களுக்கு இந்தியா துணை நிற்கும்” என்று சீனாவுக்கு கடிதம் எழுதிக் கொண்டு இருந்தார் பிரதமர் மோடி. உலகம் முழுக்க 2,000 பேர் இறந்துவிட்டதாக புள்ளிவிவரம் சொல்லிக் கொண்டு இருந்தபோதுதான் இந்தியாவுக்குள் வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். குஜராத் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களைத் திரட்டி வைத்துக் கொண்டு அமெரிக்க அதிபரோடு நின்றார் பிரதமர்.
அதற்குள் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவிவிட்டது. மார்ச் 15 ஆம் தேதி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 34 ஆகி, இரண்டு பேர் பலியானார்கள் என்பதற்குப் பிறகு தேசியப் பேரிடர் என்று மத்திய அரசாங்கம் அறிவித்தது. மூன்று மாதங்கள் கழித்து 2020 மார்ச் 25 ஆம் தேதிதான் ஊரடங்கு அறிவித்தது. 100 நாட்கள் கழித்துதான் இவர்கள்கொரோனாவின் தாக்கத்தையே உணர்ந்தார்கள். 'நாட்டு மக்களிடம் ஊரடங்குஅறிவிப்புக்காக மன்னிப்புக் கேட்கிறேன்' என்று பிரதமர் அறிவித்தார்.
2020 ஜனவரி முதல் வாரத்தில் செய்திருக்க வேண்டியதை மார்ச் கடைசி வாரத்தில் செய்ததன் விளைவுதான் கொரோனா பலிகள், பாதிப்புகள், துன்பங்கள், துயரங்கள்.
மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லை, வெண்டிலேட்டர்கள் இல்லை, தடுப்பூசிகள் இல்லை என்ற நிலைமையில்தான் நாட்டை வைத்திருந்தார் மோடி. ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்களின் ஆதிக்கத்தில் தடுப்பூசியை தக்க வைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்ததன் விளைவே தடுப்பூசித் தட்டுப்பாடு. தடுப்பூசித் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கினார்கள்.
கோடிக்கணக்கானவர்கள் வேலை இழந்தார்கள். அவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை பிரதமர் மோடி.
ஊரடங்கு போட்டுவிட்டால் போதும் என்று நினைத்தார் பிரதமர். ஒரு மாநிலத்தை விட்டு இன்னொரு மாநிலம் போய் வாழ்பவர்கள், தங்கள் மாநிலத்துக்குச் செல்ல எந்த வாய்ப்பும் ஏற்படுத்தித் தரவில்லை பிரதமர் மோடி. ஊரடங்கு போட்ட பிரதமர் மோடி, அந்த மக்களுக்கு வாகனப் போக்குவரத்து கூட ஏற்பாடு செய்யவில்லை.
பல நூறு கிலோ மீட்டர் தூரம் தலையில் பொருட்களையும், இடுப்பில் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு லட்சக்கணக்கான வட மாநிலத் தொழிலா-ளர்கள் நடந்தே தங்கள் ஊருக்குப் போனார்கள். அவுரங்காபாத் ரயில் பாதையில் நடந்து சென்றவர்கள் (3.5.2020) களைப்பால் அதிலேயே படுத்து தூங்க ரயில் ஏறி 16 பேர் பரிதாபமாக செத்தார்கள். இதை விடக் கொடூரமான சம்பவம் வேண்டுமா?
பொதுமுடக்கக் காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு கொடுத்த நிதி உதவி என்ன? உணவு உதவி என்ன? உயிர் உதவி என்ன? ஏதுமில்லை.
யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேச அரசில் மக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இது குறித்து அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் ஒருவர் பொதுநல வழக்குத் தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்கக்கேடானது. அரசு மருத்துவமனைக்குச் சென்றால் கொரோனாவுக்கு இறக்காதவர்கள் டெங்குவால் இறந்துவிடுவர்” என நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.
“ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளது என யாராவது கூறினால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்” என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
“உத்தரப்பிரதேச கொரோனா நிலவரம் மோசமாக உள்ளது என செய்திகள் பரப்பப்பட்டால் அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்” என யோகி ஆதித்யநாத் அறிவித்தார். மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த தன் தாத்தாவுக்காக, ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட இளைஞர் மீது, உத்தரப் பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. கொரோனா ஊசிக்குப் பதிலாக நாய்க்கடி ஊசி போட்ட மாநிலம் அது.
பிரதமர் தொகுதியான வாரணாசியிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடுதான் இருந்தது. வாரணாசியில் உள்ள ஒரு கிராமத்துக் குழந்தைகள் சாப்பிட எதுவும் கிடைக்காமல் புல் சாப்பிடுவதாக படத்துடன் செய்தி வெளியிட்ட ஆங்கிலப் பத்திரிக்கையா-ளர் மீது வழக்குப் போடப்பட்டது. இரட்டை எஞ்சின் ஆட்சி மக்களை எப்படிக் காக்கும் என்பதற்கு உத்தரப்பிரதேச உதாரணம் போதும்!
அதிகாரத்தையும் ஆட்சியையும் கையில் வைத்திருந்த மோடி அதைப் பயன்படுத்தாமல் மக்களை கை தட்டச் சொன்னார். பாத்திரங்களைத் தட்டச் சொன்னார். வாசலில் விளக்கு ஏற்றச் சொன்னார். இருண்ட காலம் தான் தனது ஆட்சி என்-பதை அவரே உணர்த்துவதாக இருந்தது இந்தச் செய்கைகள்.
‘நன்றாகக் கை கழுவிக் கொள்ளுங்கள்’ என்றார் மோடி. மக்களைக் கை கழுவிவிட்டு!
Also Read
-
“கோவிட் காலத்தில் கைதட்ட சொன்ன மோடி.. இப்போதும் மோடி அரசு திருந்தியபாடில்லை..” - திமுக இளைஞரணி விமர்சனம்!
-
RCB அணியை வாங்கியது இவர்களா? மிகப்பெரிய தொகைக்கு கைமாற்றம்.. அணியில் மாற்றம் நிகழுமா! - முழு விவரம்!
-
“175 இடங்களில் உதயசூரியன்; 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
“சிலிண்டர் வழங்குவது மாநில அரசின் கையிலா இருக்கிறது?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பழனிசாமி மகா பொய்யர் என்பதை சாத்தான்குளம் வழக்கு மெய்ப்பித்துள்ளது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!