murasoli thalayangam

7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனை சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த விட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் இது தொடர்பான வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.காமராஜ், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் சேலம் இளங்கோவன், அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா ஆகியோருக்கு எதிராக தனித்தனியாக வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார் கிரிராஜன் எம்.பி.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஏராளமான வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்கு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு, எல்.இ.டி. வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு என லஞ்ச ஒழிப்புத்துறையால் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு,சேலம் இளங்கோவன் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது.

“லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டால் அந்தக் குற்றம் தொடர்பான வழக்கைத் தொடர முடியும் என்று சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் பண மோசடி மற்றும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது, ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது” என்று கிரிராஜன் தனது மனுவில் தெரிவித்து உள்ளார்.

“இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் இவர்கள்மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர முடியும். ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இவர்கள் மீது வழக்குகள் உள்ளதால், சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது” என்று தெரிவித்து உள்ளார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு அவர்கள்மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை விரைவில் வரவுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சிக் காலம், ஊழல் நாற்றம் எடுத்த அரசாங்கம் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் தொடர்ச்சியாக அந்தக் கட்சியை தமிழ்நாட்டு மக்கள் தோற்கடித்தே வந்துள்ளார்கள்.

தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அப்போதே தி.மு.க. வழங்கியது. அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், உதயகுமார், காமராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மீது ஊழல் புகார்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதே அவர்மீது டெண்டர்வழக்குப் பாய்ந்தது. தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ளஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றாகவும், இதுகுறித்து பழனிசாமிமீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2018ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்தார். இவைகளை தனது உறவினர்களுக்கே டெண்டராகக் கொடுத்துக் கொண்டார் பழனிசாமி என்பதுதான் குற்றச்சாட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி 2018 அக்டோபர் மாதம் உத்தரவிட்டது.

உடனடியாக எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்றம் போய் தடை வாங்கினார். “உங்கள்மீது ஊழல்புகார் சொல்லப்படுகிறதே?' என்று நிருபர்கள் டெல்லியில் வைத்து அவரிடம் கேட்டார்கள். ”யார் மீதுதான் ஊழல் புகார் இல்லை” என்று சொன்னவர்தான் பழனிசாமி.

1. யார் மீதுதான் ஊழல் புகார் இல்லை?

2. எனது உறவினர்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள்!

3. எனது உறவினர்கள் 'இ' டெண்டர் போட்டது எனக்குத் தெரியாது!

– இவைதான் பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது சொன்ன பதில்கள் ஆகும்.

குட்கா வியாபாரிகளிடம் அரசாங்கத்தின் பெயரால் மாமூல் வசூல் செய்தது பழனிசாமி ஆட்சிதான் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. தங்களது வியாபாரத்துக்குத் துணை நின்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் யார் யார் என்பதை டைரி எழுதி வைத்திருந்தார்கள் வியாபாரிகள். அந்த நிறுவனத்தில் இருந்து 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது அ.தி.மு.க. ஆட்சியில். சி.பி.ஐ. இதனை விசாரித்து வருகிறது.

முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி, தங்கமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது.

டாக்டர் விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும், கே.பி.அன்பழகன் மீது வருமானத்துக்கு அதிகமாக 45.20 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும், காமராஜ் மீது வருமானத்துக்கு அதிகமாக 58.44 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் வழக்குப் பதிவாகி வெவ்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. இதெல்லாம்

அமலாக்கத்துறைக்குத் தெரியாதா?

பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததும் 'வாசிங் மிஷின்' வைத்து வெளுத்து விட்டார்களா? என்பதுதான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் கேள்வி ஆகும்.