murasoli thalayangam
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!
திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கான பொருளாதார மேம்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் தந்து வருகிறார். அதனால்தான் அவர் செல்லும் இடமெல்லாம் பெண்கள் அதிகமான அளவுக்குக் கூடி அன்பான வரவேற்பை வழங்கி வருகிறார்கள்.
இதனை எதிரிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற பொய்யான பரப்புரையைச் செய்து வருகிறார்கள். இதனை பிரதமர் மோடியே செய்வதுதான் அதிர்ச்சி தருகிறது.
பிரதமர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்குச் செய்து தரும் திட்டங்களைப் பற்றி அறிந்திருந்தால் அப்படிப் பேசி இருக்க மாட்டார்.
வீட்டில் இருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் தரும் வகையில் அவர்களுக்கு உரிமைத் தொகை தந்து வருகிறார் முதலமைச்சர். பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக, - மதிக்கும் விதமாக - மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர்.
இப்போது ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். “எங்க அண்ணன் ஸ்டாலின் தரும் மாதாந்திர சீர்” என்று சொல்கிறார்கள் பெண்கள்.’’ “இது உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை”என்கிறார் முதலமைச்சர்.
பெண்களின் பொருளாதார உரிமையை உயர்த்தி இருக்கிறது இத்தொகை, தன்னம்பிக்கையை உயர்த்திருக்கிறது இந்தத் தொகை. இந்தத் திட்டத்தை பல்வேறு மாநிலங்கள் இப்போது பின்பற்றுகின்றன. சில மாநிலங்கள் கொடுத்ததை நிறுத்தி விட்டன. அறிவித்த எண்ணிக்கையைக் குறைத்து விட்டார்கள். ஆனால் உரிமைத் தொகை பெறுகிறவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.
இப்படிக் கொடுப்பதை தடுக்கப் பார்த்தது பா.ஜ.க.. ஒருவரை உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட வைத்தார்கள். அதை முன்கூட்டியே உணர்ந்து மூன்று மாதத்துக்கான தொகையையும், 2 ஆயிரம் ரூபாயை கோடை நிதியாகவும் தந்தவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்த ஒரு திட்டமே கோடிக்கும் மேற்பட்ட பெண்களை மகிழ்வித்த திட்டமல்லவா?
‘’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...” என்று முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அன்றே கோட்டைக்குச் சென்று இட்ட முதல் கையெழுத்து,‘பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து’என்பதுதான். இதற்கு ‘விடியல் பயணம்’ என்று பெயர் சூட்டினார் முதலமைச்சர்.
மாதம் தோறும் 600 முதல் 1200 ரூபாய் வரைக்கும் பெண்களுக்கு போக்குவரத்துச் செலவை மிச்சம் செய்கிறது இந்தத் திட்டம். சொந்த ஊருக்குள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பதை மாற்றி, வெளியூருக்கு வந்து அதிக ஊதியம் பெறுகிறார்கள் பெண்கள். பேருந்துகளின் எண்ணிக்கையையும் அரசு அதிகப்படுத்திவிட்டது. பிங்க் வண்ணப் பேருந்துக்கு‘ஸ்டாலின் பஸ்’என்றே அடையாளச் சொல்லாக ஆக்கிவிட்டார்கள் பெண்கள்.
இது பெண்களுக்கு தினந்தோறும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது. லட்சக்கணக்கான பெண்களை தினந்தோறும் மகிழ்விக்கும் திட்டமாக இருக்கிறது.
அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்விக்கு வரும் மாணவியருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் பிறகு உயர் கல்வி பெற வரும் மாணவியரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. 41 விழுக்காடு கூடி இருக்கிறது.
பணிபுரியும் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் ‘தோழி’ விடுதிகள் இதுவரை தொடங்கப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவிக்குழுக்கள் லட்சக்கணக்கில் உருவாக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கில் அவர்களுக்கு கடனுதவி தரப்பட்டு தொழில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் பெயரில் பதியப்படும் சொத்துகளுக்கான பதிவுக் கட்டணத்தில் ஒரு விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. பெண்கள் பெயரில் வீடு,மனை உள்ளிட்ட சொத்துகள் பதிவு செய்யப்பட்டால் ஒரு விழுக்காடு பதிவுக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
10 லட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலமாக இருந்தால் இந்தச் சலுகை பெறலாம். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக வீடு ஒதுக்கும் போது சம்பந்தப்பட்ட குடும்பத்தில் உள்ள பெண்கள் பெயரில்தான் வீடுகள் ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கு அதிகாரம், சொத்துரிமை தரும் முடிவாக இது அமைந்துள்ளது.
குழந்தைத் திருமணம், குழந்தை பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பாலின வள மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை, 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறை, மின்னணு ரீதியான குற்றங்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
முதல் தண்டனையாக இருந்தால் 5 ஆண்டும், அதற்குப் பிறகும் இருந்தால் 10 ஆண்டும் சிறைத் தண்டனை வழங்கப்படும்.கல்வி நிலையங்கள், விடுதி, திரையரங்குகள், வணிக வளாகங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும். வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டு சிறைத் தண்டனை தரப்படும்.
பெண்ணின் கண்ணியதை அவமதித்தல், பெண்ணை பின் தொடர்தல், மிரட்டுதல், ஆசிட் ஊற்றுதல் ஆகியவற்றுக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டது.
இப்படி பெண்களுக்கு பொருளாதார மேம்பாடும், பாதுகாப்பும் உறுதி செய்யும் கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்.
Also Read
-
“இஸ்லாமியர்களின் உரிமைக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க. தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!