murasoli thalayangam

“திசை காட்டி விட்டது திருச்சி! எதிரிகள் எழ முடியாத அளவுக்கு வெல்வோம்!” : முரசொலி தலையங்கம்!

‘மு.க.ஸ்டாலின் அவர்களே முதலமைச்சராகத் தொடரட்டும்' என்று தமிழ்நாடே சொல்வதைப் போல இருந்தது திருச்சி மாநாடு!

சிறுகலூரைப் பெருகலூர் ஆக்கிக் காட்டி விட்டார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள். திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரமைப்பாகக் காட்டி, தமிழ்நாடு செல்லும் திசையைத் தீர்மானித்து விட்டார் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

கழக வரலாற்றில் திருச்சிக்கு மிகப்பெரிய இடம் உண்டு. நாம் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்திய 1956 மாநில மாநாடு நடந்ததும் திருச்சிதான். 'தி.மு.கழகத்தின் தீரர்கள் கோட்டம் திருச்சி' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். 'திருச்சி என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாடி வீடு' என்று கலைஞர் அவர்கள் சொல்லுவார்கள். திருச்சி என்பது திராவிடமுன்னேற்ற கழகத்தின் கோட்டை என்று அனைவரும் சொல்வார்கள்.

இதுதான் முதன்மைக் கோட்டை என்று சொல்லத்தக்க வகையில் நடந்தது இம்மாநாடு.

“எல்லாச் சாலைகளும், திருச்சியை நோக்கி! எல்லாத் திசைகளும், திருச்சியை நோக்கி! எல்லா மக்களும், திருச்சியை நோக்கி! திரும்பும் திசை எல்லாம், கருப்பு சிவப்பு! திரும்பும் திசை எல்லாம், அண்ணாவின் தம்பிகள்! திரும்பும் திசை எல்லாம், கலைஞரின் உடன்பிறப்புகள்!” என்று கழகத் தலைவரை உச்சி குளிர வைத்துவிட்டது திருச்சி மாநாடு.

எவராலும் வீழ்த்த முடியாத திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் சேனையை திருச்சியில் கூட்டிக் காட்டி விட்டார் கழகத் தலைவர்.

“உங்களால்தான் நான் வளர்ந்தேன்! உங்களால்தான் நான்உயர்ந்தேன்! உங்களுக்காகத்தான் நான் வாழ்கிறேன்!" என்று கழகத் தலைவர் சொன்ன போது எழுந்த கைதட்டல், பாசத்தின் வெளிப்பாடாக அமைந்திருந்தது.

“வெட்டி வா என்றால் கட்டி வரும் தம்பி கே.என்.நேரு" என்று தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்டவர் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு. அவரைக் கழகத் தலைவர் அவர்கள் பல்வேறு விதங்களில் விதவிதமாய் பாராட்டி இருக்கிறார். அதில் மிக முக்கியமானது, மாநாடு என்றால் நேரு; நேரு என்றால் மாநாடு' என்பது ஆகும். அதனை மீண்டும் திருச்சியில் மெய்ப்பித்துள்ளார் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு.

கம்பீரமான மேடை, லட்சக்கணக்கான தொண்டர்கள் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் உயரமான மேடை, சீரான இருக்கைகள் என ராணுவ மிடுக்கோடு அமைக்கப்பட்டு இருந்தது மைதானம். 100 அடி உயரக் கம்பத்தில் ராஜ நடைபோட்டு நடந்து வந்து கொடியேற்றிய தலைவர் அவர்கள், லட்சக்கணக்கான தொண்டர்களுக்குள் நீந்தி வந்து வாஞ்சைமிகு வணக்கங்களையும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்ட காட்சியே கண்கொள்ளாக் காட்சி ஆகும். மக்கள்திரள்வதை விட முக்கியமானது திரண்ட மக்களைக் கட்டுக்கோப்புடன் கவனிப்பது ஆகும். ஒழுங்கும் சீருமான மாநாடாகவே திருச்சி மாநாட்டை நடத்திக் காட்டிவிட்டார் மாண்புமிகு கே.என்.நேரு.

பலப்பல மாநாடுகள் நடந்த இடம் திருச்சி. ஆனால் அனைத்திலும் பளபளக்கும் மாநாடாக அமைந்திருந்தது இந்த மாநாடு. இதில் தலைவர் ஆற்றிய உரை எழுச்சி உரை, உணர்ச்சி உரை, அன்பு உரை, உண்மை உரை என எல்லாம் கலந்த உரையாக அமைந்தது.

  • ஏழாவது முறை தி.மு.க. ஆட்சி மலர வேண்டும்.

  • இனி எப்போதும் தி.மு.க.தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்.

  • நம்முடைய தமிழினத்தைக் காக்கத் தகுதியும் திறமையும் உழைப்பும் கொண்ட ஒரே படை நம்முடைய கருப்பு சிவப்புப் படைதான்!

  • தமிழ்மண்ணுக்குக் காவல் அரணாக இருப்பவர்கள் நாம்தான்! தமிழ்நாடு, நம்மை நம்பித்தான் இருக்கிறது; நாமும் தமிழ்நாட்டை நம்பித்தான் இருக்கிறோம்!

  • தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் நாம் முன்னேற்றி இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக ஆக்கிக் காட்டி இருக்கிறோம்.

  • தமிழ்நாடு கேட்பதற்கெல்லாம், 'நோ' சொல்லும் NDA வுக்கு, தமிழ்நாடும் 'நோ'தான் சொல்லும்!

  • உங்கள் டப்பா எஞ்சினுக்கு தமிழ்நாடு எப்போதுமே, 'NoEntry'- தான் சொல்லும்!

  • தமிழ்நாட்டின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின், உண்மையான எதிரி பா.ஜ.க. தான்.

  • அ.தி.மு.க. முகமூடியைப் போட்டு பா.ஜ.க. வந்தாலும் அதைத் தடுப்போம்.

  • தமிழ்நாட்டை எப்படியாவது நம்மிடம் இருந்து, விழுங்கிடலாம் என்று நினைக்கிறது காவிக் கூட்டம். எங்கள் கருப்பு சிவப்புப் பட்டாளம் இருக்கிறவரை அது நடக்கவே நடக்காது.

  • இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், எங்கள் தி.மு.க.வும் இருக்கும் வரை, பா.ஜ.க.வால் தமிழ்நாட்டை ஆள முடியவே முடியாது! நீங்கள் அந்தர் பல்டி அடித்தாலும், என்ன முகமூடி போட்டுக் கொண்டு வந்தாலும், புதிது புதிதாக யாரை அழைத்துக் கொண்டு வந்தாலும், எத்தனை ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டிப் பார்த்தாலும், தமிழ்நாடு எப்போதுமே உங்களுக்கு Out Of Control- தான்!

  • நீங்கள் இந்தியா மேப்பில் இருக்கும் எந்த மாநிலத்தின் மீது வேண்டுமானாலும், காவி அடித்திருக்கலாம்! ஆனால், தமிழ்நாட்டில் உங்கள் பாச்சா பலிக்கவே பலிக்காது!

  • தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் இது. இதில் தமிழ்நாடு அணியே வெல்லும்!

இவைதான் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் முத்தான முழக்கங்கள். ஒரே உரையில் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும், கோடிக்கணக்கான தமிழ்மக்களுக்கும் உணர்ச்சியையும் எழுச்சியையும் ஊட்டி விட்டார் முதலமைச்சர் அவர்கள்.

வெல்வோம் இருநூறு; படைப்போம் வரலாறு என்பதற்கான திசைகாட்டியாக இருந்தது அவர் உரை. 2026 ஆம் ஆண்டு அடையும் வெற்றி இதுவரை பார்க்காத மாபெரும் வெற்றியாக அமையும். 200 ஐயும் தாண்டி வெல்வோம். அதற்கு ஒரே காரணம் முதலமைச்சர்தான்.

கழகத்தை வழிநடத்தும் கம்பீரமும், ஆட்சியை வழிநடத்திய நிர்வாகத் திறனும், நாள்தோறும் உழைத்து நல்ல பல திட்டங்களை உருவாக்கித் தந்ததும், தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தியதும், சர்வாதிகார ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தோள் உயர்த்திப் போராடி வருவதும்தான் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தனித்தன்மைகள் ஆகும். பல்வேறு திறமைகளைத் தன்னுள் தாங்கி நடைபோட்டு வருகிறார் அவர்.

இலக்கை தலைவர் தீர்மானித்தார். அதனை வென்று காட்டும் பாதையையும் அவரே அமைத்துக் கொடுத்தார். வெல்வோம். எதிரிகள் எழ முடியாத அளவுக்கு வெல்வோம். திசை காட்டி விட்டது திருச்சி.

Also Read: பழைய நிலங்களின் வீட்டுப் பட்டா குறித்து வந்த குட் நியூஸ்... அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!