murasoli thalayangam
கேள்வி கேட்க வேண்டிய இடம் தானே நாடாளுமன்றம்? : ஒன்றிய அரசுக்கு முரசொலி சரமாரி கேள்வி!
முரசொலி தலையங்கம் (05-02-2026)
பேச விடுங்கள் அல்லது பதில் சொல்லுங்கள்!
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாகம் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி தரப்பட்டது. அவர் பேசத் தொடங்தினார். பேச விடவில்லை. கூச்சல், குழப்பத்தை ஆளும் பா.ஜ.க.வே உருவாக்கியது.
லடாக்கில் சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தி பேச முயற்சித்தார். முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நாவனே எழுதி வெளிவராக ஒரு புத்தகத்தைப் பற்றிய கட்டுரையை ‘கோவன்' இதழ் வெளியிட்டிருந்தது. அந்த இதழ் கட்டுரையை கையில் ஏந்தியபடி ராகுல் காந்தி பேசத் தொடங்கினார்.
ராகுல் காந்தி அந்தப் புத்தகத்தை காட்டி பேசத் தொடங்கியதும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எதிர்ப்பத் தெரிவித்தார். வெளிவராத புத்தகத்தை அவையில் காட்டி பேசுவது விதிகளுக்கு எதிரானது என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ராகுலை பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் அவைத்தலைவர் அனுமதிக்கவில்லை.
‘‘நமது தேசபக்தி, இந்தியக் கலாச்சாரம் பற்றிய நமது புரிதல் குறித்துகேள்வி எழுப்பியதால், நான் ஒன்றை வாசிப்பதன் மூலம் தொடங்க விரும்புகிறேன். இது ராணுவத் தளபதி நரவனேவின் நினைவுக் குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டது. நீங்கள் நன்றாகக் கேட்டால், யார் தேசபக்தர், யார் தேசபக்தர் இல்லை என்பதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்வீர்கள்,” என்றார் ராகுல் காந்தி. இதற்கு மேல் அவரை பேச அனுமதிக்கவில்லை.
இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே எழுதி வெளிவரவுள்ள ‘ஃபோர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி' (FOUR STARS OF DESTINY) என்ற நூலிலிருந்து சில பகுதிகள் Caravan ஆங்கில இதழில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தான் ராகுல் காந்தி மேற்கோள் காட்டி பேச முயற்சித்தார்.
2020-2021ஆம் ஆண்டில், இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவல் நடக்கிறது. இதனை இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்ட் தலைமை அதிகாரியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஜோஷி உடனடியாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனேவுக்குச் சொல்கிறார். அவர், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதி பிபின் ராவத், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் என ஒவ்வொருவருக்கும் சொல்கிறார். இவர்கள் நால்வரும் உடனடியாக முடிவுகள் எடுக்கவில்லை. ஒரு நாள் வரைக்கும் முடிவே எடுக்கவில்லை. இதனைத்தான் சொல்கிறார் தனது நூலில்.
இதைத்தான் சொல்கிறார், மேற்கோள் காட்டுகிறார் ராகுல் காந்தி...
"இது ராணுவத் தளபதி நரவனேவின் நினைவுக் குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டது. நீங்கள் நன்றாகக் கேட்டால், யார் தேசபக்தர், யார் இல்லை என்பதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்வீர்கள். இதற்கு சிறிது நேரம் ஆகும், இது டோக்லா- மில் நான்கு சீன டாங்கிகள் இந்தியப் பகுதிக்குள் நுழைந்தபோது நடந்ததைப் பற்றியது. அவர்கள் ஒரு முகட்டைக் கைப்பற்றிக் கொண்டிருந்தனர். ராணுவத் தளபதி எழுதுகிறார், அவருடைய புத்தகத்தை மேற்கோள் காட்டும் ஒரு கட்டு- ரையிலிருந்து நான் மேற்கோள் காட்டுகிறேன்,” என்று ராகுல் சொன்னார். அவரை வாசிக்கவிடவில்லை. பேசவிடவில்லை.
‘எந்த இதழில் இது வெளியாகி இருக்கிறது?” என்று அவைத்தலைவர் கேட்டார். பத்திரிக்கையின் பெயரை ராகுல் காந்தி சொல்லி விட்டார். ‘நான் பேசும் கருத்துக்கு நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்' என்றும் ராகுல் சொல்லி விட்டார். அதன்பிறகும் அவரை பேசவிடாமல் தடுத்தது சரியா?
‘‘குடியரசுத் தலைவரின் உரையில் தேசிய பாதுகாப்பு என்பது முக்கியமான பகுதியாக இருக்கிறது. எனவே அது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்" என்பதுதான் ராகுலின் கோரிக்கை ஆகும்.
இந்தியப் பொருட்களுக்கு அநியாய வரி போடுகிறது அமெரிக்கா. இந்தியர்களை விலங்கு மாட்டி அனுப்புகிறது அமெரிக்கா. இந்திய எல்லைக்குள் புகுந்து வீடு கட்டி விட்டது சீனா. இந்தியப் பகுதிக்கு தனது மொழிப் பெயரை வைக்கிறது சீனா. இந்திய மீனவர்களை தினந்தோறும்கைது செய்கிறது இலங்கை. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை அனுப்பிவைக்கிறது பாகிஸ்தான். இதுதான் இந்தியாவைச் சுற்றி நடக்கும் விவகாரங்கள் ஆகும். இது பற்றிக் கேள்வி எழுப்பினால் என்ன தவறு?
உலகம் சுற்றி வரும் பிரதமர், உலகத்தை அடக்கி விட்டதாக ஒரு மாய பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதை யாரும் கேள்வி எழுப்பக் கூடாதா? கேள்வி கேட்க வேண்டிய இடம் தானே நாடாளுமன்றம்?
‘'ஒவ்வொரு உறுப்பினரின் உரிமையையும் காக்க வேண்டியது சபாநாயகரின் கடமை ஆகும். அடிப்படை ஜனநாயக உரிமையை மறுப்பது முன் எப்போதும் இல்லாத சூழலுக்கு வழிவகுத்துள்ளது. நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக அரசாங்கத்தின் சார்பாக, குடியரசுத் தலைவர் உரையின் மீது எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை தடுக்க அவைத்தலைவர் நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறார். இது நமது ஜனநாயகத்தின் மீது விழுந்த கறை” என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் எழுதி இருக்கிறார் ராகுல் காந்தி.
ராகுல் என்ன சொல்ல வருகிறார் என்பது அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்குத் தெரியும். அவர் உரிய பதிலையாவது சொல்லி இருக்க வேண்டாமா? அப்படி நடக்கவில்லை என்று சொல்லுங்கள். மாறாக, ராகுல் காந்தியை ஒட்டுமொத்தமாக பேச விடாமல் தடுப்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகமா? பிறகு எதற்காக நாடாளுமன்றம் கூடுகிறது? எதற்காகக் கூட வேண்டும்?
Also Read
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!
-
BoyFriend உடன் சேர்ந்து Blackmail.. மிரட்டி பணம் பறிப்பு.. தவெக பிரமுகர், BIGG BOSS வர்ஷினி வெங்கட் கைது!
-
டம்மியின் இடைத்தேர்தல் பிரச்சார ஸ்கிரிப்ட் ரெடியா virtual abusers? : DMK IT WING கேள்வி!