murasoli thalayangam
தமிழ்த்தாய் தொடங்கி சொந்த தொகுதியை கூட விட்டுவைக்கவில்லை... ஏமாற்றிய அ.தி.மு.க - வறுத்தெடுத்த முரசொலி!
முரசொலி தலையங்கம்
21.01.2026
வாக்குறுதிகளை மறந்த பழனிசாமி!
திராவிட முன்னேற்றக் கழகம் வாக்குறுதி தந்தால் நிறைவேற்றும் என்பதை மெய்ப்பித்துள்ளது. இது மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துள்ளது. எனவே, தி.மு.க. சொல்வதற்கு முன்னால் வாய்க்கு வந்ததைச் சொல்லி வைப்போம் என்று பொய் மூட்டைகளை வாக்குறுதிகளாக அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
அ.தி.மு.க. தனது ஆட்சி காலத்தில் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத கட்சி என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.
2011 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவை பழனிசாமிக்கு நினைவில் இருக்கிறதா?
• சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலைத் திட்டம்.
• தென் தமிழகத்தில் 'ஏரோ பார்க்’.
• ஆன்லைன் வர்த்தகம் தடுக்கப்படும்.
• 10 ஆடை அலங்காரப் பூங்காக்கள்.
• திருப்பூர் சாயக் கழிவுகளைச் சுத்திகரிக்க விஞ்ஞானக் கழிவு அகற்றும் நிலையம்.
• 58 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ்.
• மின்னணு ஆளுமையின் கீழ் அனைத்துக் காவல் நிலையங்கள்.
• விவசாயிகளைப் பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.
• பள்ளிகளில் தாய்மொழியோடு பிறமொழிகள் பயில சிறப்புப் பயிற்சிகள்.
• நீதிமன்றங்களில் தமிழ்மொழி.
• தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.
• வனவிலங்குகள் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க நடவடிக்கை.
• தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரண்டு மடங்காக்குவோம்.
• மொபைல் மின்னணு ஆளுமைத் திட்டம்.
- இவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை பழனிசாமியின் 'அம்மா' ஜெயலலிதா ஆட்சியில்!
• அமெரிக்க சுதந்திர தேவி சிலை போல ரூ.100 கோடியில் மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை அமைக்கப்படும் சட்டமன்ற விதி 110-ன் கீழ் அறிவிப்பை 2013 மே 14-ம் தேதி வெளியிட்டார் முதல்வர் ஜெயலலிதா. தமிழ்த்தாயையே ஏமாற்றினார்கள்.
2016 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதாவது பழனிசாமிக்கு நினைவில் இருக்கிறதா?
• அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செல்போன் விலையின்றி வழங்கப்படும். •பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், இலவச ‘வைபை' இணையதள வசதி வழங்கப்படும்.
• அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அம்மா இரு சக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி மையம் உருவாக்கப்படும்.
• வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும்.
• ஆதி திராவிடர் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு நீராவி கொதிகலன்களும் நீராவி இட்லி குக்கர்களும் வழங்கப்படும்.
• நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
• அம்பேத்கர் கொள்கையை பரப்ப ரூ.5 கோடியில் அம்பேத்கர் பவுண்டேஷன் நிறுவப்படும்.
• அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 6 தலைமை அரசு மருத்துவமனைகளிலும் கட்டணமில்லா கருத்தரிப்பு மையங்கள் ரூ.10 கோடியில் உருவாக்கப்படும்.
- இப்படிச் சொன்னது எதையும் செய்யவில்லை.
தனது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்துக்கு பழனிசாமி கொடுத்த வாக்குறுதிகளையாவது செய்தாரா? இல்லை.
சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட தகவல் தொழில் நுட்பப் பூங்கா பணிகளை முடக்கி வைத்திருந்தார். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முடக்கினார். பாதாளச் சாக்கடை திட்டத்தை முறையாகச் செயல்படுத்தவில்லை.
ஏற்காடு தாவரவியல் பூங்காவை முறையாக அமைக்கவில்லை. சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மேம்படுத்தவில்லை. சேலம் மாநகர எல்லைப் பகுதிகளை இணைக்கும் ரிங் ரோடு அமைக்கப்படும் என்றார் பழனிசாமி. அமைக்கவில்லை. தலைவாசல் சந்தை விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஓமலூரில் திரவிய தொழிற்சாலை அமையவில்லை.
எடப்பாடி,வீரபாண்டி தொகுதியில் ஜவுளிப் பூங்கா அமையவில்லை. சேலத்தில் ராணுவத் தளவாடத் தொழிற்சாலை அமையப் போகிறது என்றார்கள். அமையவில்லை. சேலம் செவ்வாய்ப்பேட்டை லாரி மார்க்கெட் மேம்படுத்தப்படவில்லை. இவை அனைத்தும் பழனிசாமி கொடுத்த வாக்குறுதிகள் தான். தனது சொந்த மாவட்டத்துக்குக் கூட சொன்னதைச் செய்யாதவர்தான் பழனிசாமி.
தனது சொந்தத் தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதியையாவது நிறைவேற்றினாரா பழனிசாமி என்றால் அதுவும் இல்லை.
1. எடப்பாடி தொகுதியில் ஜவுளிபூங்கா
2. நெருஞ்சிப்பேட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம்
3. கொங்கணாபுரத்தில் தொழில்பேட்டை
4. மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் பயன்பாடு
5. எடப்பாடி அரசு மருத்துவமனை மேம்பாடு
6. கொங்கணாபுரம் கூட்டுறவு வங்கி விவகாரம்
7. மின் மயானங்கள்
8. தேங்காய், மா.பருத்தி, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றுக்கு ஆதார விலை
9. பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம்
10. நிலக்கடலை விவசாயிகளுக்கு தனிகூட்டுறவு சங்கம்
- இப்படி தனது தொகுதியையும் தனது மாவட்டத்தையும், தமிழ்நாட்டையும் மொத்தமாக ஏமாற்றிய பழனிசாமியை அவரது தொகுதி மக்களும், மாவட்டத்து மக்களும் தமிழ்நாடும் ஏற்காது.
Also Read
-
வடசென்னையில் ரூ.147 கோடியில் ‘முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்’ - திறந்து வைத்தார் முதலமைச்சர்..
-
கடுமையான போக்குவரத்து.. சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்.. கைக்குழந்தையுடன் களத்தில் இறங்கிய பெண் காவலர்! | VIDEO
-
“திராவிட மாடல் ஆட்சியில் புதுப்பொலிவு பெற்ற 4000 திருக்கோயில்கள்” : அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!
-
“நான் ஏ.ஆர்.ரகுமானுடன் நிற்கிறேன்” : கனிமொழி எம்.பி ஆதரவு!
-
திருச்சியில் 10 இலட்சம் உடன்பிறப்புகளுடன் ‘மாநில மாநாடு!’ : தி.மு.க நிறைவேற்றிய 4 திர்மானங்கள் என்னென்ன?