murasoli thalayangam
“பொங்கல் விழாவை கலை மற்றும் குறள் விழாக் காலமாக மாற்றியுள்ளார் முதலமைச்சர்...” - முரசொலி புகழாரம்!
முரசொலி தலையங்கம்
15.01.2026
தமிழர் தம் பெருநாள்!
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும் –
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும் -
“தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும்-
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறும் -
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும்
- பாடும் பெருவிழாதான் பொங்கல் திருவிழா.
முதலாம் இராசேந்திரன் காலத்து திருவொற்றியூர் கல்வெட்டில் ‘புதியீடு விழா' எனப் பொங்கலைக் குறிக்கிறது. புதியீடு என்பது முதல் அறுவடை எனப்படும். சீவகசிந்தாமணியில், 'மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என்று வருகிறது. தை நீராடல், தைப் பொங்கல், புதியேடு என இது இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. சோழர் காலத்தில் புதியேடு என்றே வழங்கப்பட்டுள்ளது.
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்,
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச்,
சாந்த விறகின் உவித்த புன்கம்,
கூதளங் கவினிய குளவி முன்றில்,
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,
நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி,
வடிநவில் அம்பின் வில்லோர் பெரும!
என்று புறநானூற்றில் 168 ஆவதாக இடம்பெறுகின்ற பாடலிலே கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் புதிர் உண்ணகின்ற செய்தியைப் பதிவு செய்துள்ளார். கேழல் உழுத புழுதியிலே விதைத்த திணையும் விளைந்து கதிர் முற்றியது. நல்ல நாளிலே பாலை உலைநீராக்கிச் சந்தன விறகால் எரித்து, அத்தினையைச் சமைத்து, அகன்ற வாழை இலையிலே பலரோடும் பகுத்துண்ணும் வளமுடைய குதிரைமலைத் தலைவனே என்று சொல்கிறது இப்பாடல்.
“புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து” என்கிறது சிலப்பதிகாரம். புழுக்கல் என்றால் பொங்கல்.
மணிமேகலை காப்பியத்தில், இந்திர விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது. அக்காலத்தில், காவிரி பூம்பட்டினததில், மன்னர்கள், மக்களுக்கு முரசறைந்து, பொங்கல் விழா வரவிருப்பதை அறிவிப்பார்கள். அக்காலத்தில் பொங்கல் விழா இருபத்தெட்டு நாட்கள் வரை நடந்திருக்கிறது.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை - என்கிறார் வள்ளுவர். எத்தனையோ தொழில்கள் இருந்தாலும் உழவுக்கு அடிப்படையான ஏர் தான் இந்த உலகுக்கே அடிப்படை என்கிறார் வள்ளுவர். இதுதான் பொங்கல் திருநாளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.
விதைத்ததை அறுவடை செய்து பயன்பெறும் தை மாதத்தின் தொடக்கமே பொங்கல். புதிய அரிசியை புதுப்பானையில் போட்டுப் பொங்கி சூரியனுக்கும் பூமிக்கும் படையலிட்டுத் தொடங்கும் மாதம் இது. மண்ணின் விளைச்சலில் கிடைக்கும் அனைத்துக் காய்- கறிகளும் படையலாக வைக்கப்படுகின்றன. அறுவடைக்குத் துணை புரிந்த மாடுகளாம் அனைத்து உயிரினங்களையும் வணங்கும் நாள் இது.
‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்' என்று கலித்தொகை ஒரு விளக்கம் தருகிறது. அத்தகைய பண்பாட்டை அடையாளப்படுத்- தும் விழாதான் பொங்கல் திருவிழா.
“தமிழ்நாட்டின் பெரும் நிலப்பரப்பு விவசாயம் சார்ந்த உற்பத்தி முறைக்கு ஏற்றதாக இருந்ததால் தமிழ்ச் சமூகம் வேளாண்மை சார்ந்த நிலவுடைமைச் சமூகமாக உருப்பெற்றது. விவசாய நிலங்களின் பண்பாடு மற்ற திணைக்குரிய சிறுபான்மை நிலப்பகுதிக- ளிலும் தாக்கம் செலுத்தியது. எனவே மருதத் திணையில் அறுவடைக் காலக் கொண்டாட்டங்கள் மற்ற திணை சார்ந்த மக்களிடம் பரவியது. இதனால் மருத நில மக்களின் அறுவடைக் கொண்டாட்டமான பொங்கல் விழா தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பண்பாட்- டின் அடையாளமாக மாறியது. இப்பொங்கல் விழாவுடன் தொடர்புடைய பண்பாட்டுக் கூறுகள் தமிழர்களின் அடையாளங்களாக நிலைபெற்றன” என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவார்கள். அந்த வகையில் ஒட்டுமொத்த தமிழர் தம் பெருவிழாவாக இது அமைந்துவிட்டது.
பொங்கு என்றால் பொங்குதல், கொதித்தல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். தமிழர்கள் இனக்குழுவாக இருந்த காலம் முதல் நடத்தப்படும் திருவிழா இது. இயற்கையை வணங்குதல் என்பதே இதன் உள்ளடக்கமாக இருந்தது.
அதே உணர்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் தான் இப்போதும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இக்காலத்தில் மண் செழித்துள்ளது. விளைச்சல் அதிகரித்துள்ளது. பாசனப்பரப்பு அதிகரித்துள்ளது. உற்பத்தி அதிகமாகி உள்ளது. வறட்சி என்பதே இல்லை. மழை, பருவத்தே பெய்து வருகிறது. உழவர்கள் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் இருக்கிறார்கள். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற உன்னதமான நோக்கம் கொண்டவராக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருவதால் அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வாழ்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் அனைவர் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கும் பொங்கும் வகையில் பொங்கல் பரிசு அறிவித்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகை என்ற முதலமைச்சரின் அறிவிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தையே மகிழ்ச்சிக்குரிய தாக மாற்றி இருக்கிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட இப்பரிசுத் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பெற்றுள்ளார்கள்.
இப்பொங்கல் காலத்தில்தான் ஏறுதழுவுதல் என்ற விளையாட்டுப் போட்டிகளும் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது. அவை பண்பாட்டின் அடையாளங்களாகவும், பண்பாட்டின் நீட்சியாகவும் நடைபெற்று வருகின்றன. இத்தகைய பண்பாட்டு விளையாட்டை நடத்துவதற்காக மதுரையில், 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' கட்டி எழுப்பப்பட்டுள்ளது. தமிழர் தம் பெருமையை நிலைநாட்டும் வகையில் கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொங்கல் விழாவை கலை விழாக் காலமாக, குறள் விழாக் காலமாக மாற்றி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு போற்றுதும்!
Also Read
-
வடகிழக்குப் பருவமழை, புயல்... விவசாயிகளுக்கு ரூ.111.96 கோடி நிவாரணத்தொகை.. அரசாணை வெளியீடு!
-
4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
-
ஐசிசி தரவரிசைப் பட்டியல்… 5 ஆண்டுகளுக்கு பிறகு ‘நம்பர் 1’ இடத்தில் விராட் கோலி! : முழு விவரம் உள்ளே!
-
288 Iconic Projects : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்!
-
கம்பீரின் ஆதரவால் அணிக்குள் வந்தாரா ஆயுஷ் பதோனி? - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கொந்தளிப்பு!